வியாழன், 8 ஆகஸ்ட், 2013

விஜய்யின் எதிராளி இன்று மற்றொரு மனு தாக்கல் செய்தால் தலைவனின் கதை கந்தல்!

நடிகர் விஜய் நடித்துள்ள தலைவா படத்துக்கு தலைக்கு மேல் ஏகப்பட்ட
சிக்கல்கள் தொங்கிக் கொண்டுள்ள நிலையில், இந்தப் படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்கும்படி, ‘தலைவா’ பட தயாரிப்பாளர், இயக்குனருக்கு சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் இவர்கள் வரும் 14-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தலைவா படம் நாளை (9-ம் தேதி) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே வேறு சில சிக்கல்கள் உள்ளன (அவற்றை தனிக் கட்டுரையாக பார்க்கலாம்) இப்போது, படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் 14-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதால், புதிதாக ஒரு சிக்கல் எழுந்துள்ளது.
ஆம். 14-ம் தேதி பதில் அளிக்கப்படும்வரை, ‘தலைவா’ படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று, வழக்கு தொடர்ந்தவரால் மற்றொரு மனு செய்ய முடியும்!
இந்த வழக்கின் பின்னணி என்ன?
நெல்லை மாவட்டம், சீதபற்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கே.ஆர்.கர்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு இது. அந்த மனுவில், தமது தாத்தா மற்றும் தந்தை பற்றிய கதைதான், ‘தலைவா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கர்ணனின் மனுவில், “மும்பை தாராவியில் வசிக்கும் தமிழர்களின் மத்தியில் பிரபலமானவர் எஸ்.எஸ்.கே. என்று அழைக்கப்படும் எஸ்.எஸ்.கந்தசாமி சேட். அவர் சீதபற்பநல்லூர் கிராமத்தில் இருந்து சுதந்திரத்துக்கு முன்பதாகவே சிறு வயதில் தாராவிக்கு சென்றுவிட்டார்.
அங்கு அவர் தோல் பதனிடும் தொழிலை செய்து வந்தார். அதோடு அங்கிருந்த ஏழை, எளிய தமிழர்களுக்கு சமுதாய மற்றும் மத ரீதியான சேவைகளை செய்து வந்தார். தென் இந்திய ஆதிதிராவிட மாகஜன் சங் என்ற அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகளில் தலைமைப் பதவிகளை வகித்து வந்தார்.
எஸ்.எஸ்.கே.க்கு எஸ்.கே.ராமசாமி, எஸ்.கே.பன்னீர்செல்வம், எஸ்.கே.அழகர்சாமி ஆகிய 3 மகன்களும், மல்லிகா என்ற ஒரு மகளும் உண்டு. அவர்களில் பன்னீர்செல்வம் தொழில் போட்டியில் கொலை செய்யப்பட்டார். அழகர்சாமி மர்மமான முறையில் இறந்தார்.
எஸ்.கே.ராமசாமி பல்வேறு சமுதாய சேவைகளைச் செய்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அங்குள்ள மக்களுக்காக கோவில்களை கட்டியுள்ளார். ஏழை மக்களுக்காக பள்ளிக்கூடம் கட்டியுள்ளார். மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராகவும் அவர் பணியாற்றி இருக்கிறார்
 தாராவியில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல, சொந்த ஊரான சீதபற்பநல்லூர் மக்களுக்கும் பல்வேறு நன்மைகளை எஸ்.கே.ராமசாமி செய்துள்ளார். 15.2.87 அன்று அவர் மரணமடைந்தார்.
அவர் செய்த சமுதாயத் தொண்டுகளுக்காக அவரை தாராவித் தலைவன் என்று மக்கள் அழைத்தனர். எஸ்.கே.ராமசாமியின் மகன் நான்.
இந்த நிலையில் பத்திரிகை செய்தியை படித்தபோது, எனது தாத்தா மற்றும் தந்தையின் வாழ்க்கை வரலாறைத்தான் ‘தலைவா’ என்ற படத்தில் கதையாக வைத்திருப்பதாக தெரிய வந்தது. அதில், எனது தாத்தாவின் கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜும், எனது தந்தையின் கதாபாத்திரத்தில் நடிகர் விஜயும் நடித்துள்ளனர்.
எனது தாத்தா மற்றும் தந்தை அணியும் வெள்ளை உடைபோல, ‘தலைவா’ படத்தில் இவர்களும் உடை அணிந்து நடித்துள்ளனர். ஆனால் தந்தை சத்யராஜை கொலை செய்தவர்களை, மகன் விஜய் தேடி கண்டுபிடித்து கொலை செய்வதுபோல் ‘தலைவா’ கதை அமைக்கப்பட்டுள்ளது.
எனது தந்தை அப்படியெல்லாம் யாரையும் கொலை செய்யவில்லை.
எனது தாத்தாவும், தந்தையும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதுபோலவும், தாதா போலவும் “தலைவா” படத்தில் காட்டப்படுகிறது. இந்த படம் ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியிடப்படுவதாகத் தெரிகிறது. ‘தலைவா’ படம் வெளியே வந்தால் எனது குடும்பத்தினர் மீதான மரியாதை போய்விடும். எங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
எனவே இந்தப் படத்தை வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், வெளியீட்டாளர் மதன், இயக்குனர் ஏ.எல்.விஜய் ஆகியோருக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை இரண்டாவது உதவி சிட்டி சிவில் நீதிமன்றம், இது தொடர்பாக தயாரிப்பாளர், இயக்குனர், வெளியீட்டாளர் வரும் 14-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
அதுவரைக்கும் சரி. டைரக்டர் தமது தரப்பு விளக்கத்தை அளிக்க முடியும். அதற்காக அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, “டைரக்டரின் விளக்கம் வந்து சேரும்வரை, படத்தை வெளியிடாமல் தடை செய்ய வேண்டும்” என, எஸ்.கே.ஆர்.கர்ணன் இன்று மற்றொரு மனு தாக்கல் செய்தால், கதை கந்தலாகிவிடும்!
viruvirupu.com

கருத்துகள் இல்லை: