tamil.oneindia.com -Hema Vandhana : சென்னை: பாக்கெட் தோசை மாவு எந்த அளவுக்கு பயன்படுத்துவதை குறைத்து கொள்ள வேண்டுமோ, அதே போல தவிர்க்க வேண்டியதும், குறைக்க வேண்டியதும் பாக்கெட் பரோட்டா, சப்பாத்தி எனலாம்.. அவசர சமையலுக்காக இதை பெரும்பாலானோர் பயன்படுத்துகிறார்கள்.. அதேசமயம், அதில் கலக்கப்படும் பொருட்களை பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
இன்றைய அவசர உலகத்தில் சமையல் நேரத்தை குறைக்க கடைகளில் விற்கப்படும் "ரெடிமேட் சப்பாத்தி". ஃப்ரோசன் பரோட்டா பாக்கெட்டுகளை வாங்கி சாப்பிடும் பழக்கம் பல குடும்பங்களில் அதிகரித்துவிட்டது.
Packaged Chapati
பாக்கெட் பரோட்டா
ஆனால், நாம் மிக எளிதானது என்று நினைத்து வாங்கி சாப்பிடும் இந்த பாக்கெட் உணவுகள், நம்முடைய உடலுக்குள் பல நோய்களை மெல்ல மெல்ல விதைக்கின்றன என்பது மருத்துவ ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக கடைகளில் விற்கப்படும் பாக்கெட் பரோட்டா, சப்பாத்திகளில் மென்மைக்காகவும், நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருக்கவும் மலிவான பாமாயில் மற்றும் மார்கரின் எனப்படும் செயற்கை வெண்ணெய் சேர்க்கப்படுகிறது... இவற்றில் உடலுக்கு மிகவும் ஆபத்தான டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) அதிகளவில் உள்ளது.
இதயத்தில் ரத்தக்குழாய்
உணவில் தினமும் சிறிய அளவில் இந்த டிரான்ஸ் ஃபேட் சேர்ந்தால் கூட, இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வரும் அபாயம் 23 சதவீதம் அதிகரிப்பதாக WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனம் வார்னிங் செய்துள்ளது.
அடுத்ததாக, ஃபிரிட்ஜில் உறைநிலையில் இருக்கும் சப்பாத்தியை வெளியில் எடுத்துஅசூடுபடுத்துவதற்கு முன்பு சாதாரண வெப்பநிலையில் வைக்கும்போது, அதில் ஈ-கோலை போன்ற ஆபத்தான கிருமிகள் மிக வேகமாக பெருக தொடங்குகின்றன. இந்த கிருமிகள் உடலுக்குள் செல்வதால் தான் பலருக்குத் திடீரென தீவிர வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் குடல் புண் ஏற்படுவதாக "ஜெர்னல் ஆஃப் ஃபுட் புரொடக்ஷன்" என்ற உணவு பாதுகாப்பு ஆய்வு இதழ் தெளிவுபடுத்துகிறது.
பூசணம், அலர்ஜி
அதுமட்டுமல்ல, மாவு மாதக்கணக்கில் பூசணம் பிடிக்காமல் அப்படியே இருக்க வேண்டும் என்பதற்காக "கால்சியம் புரோப்பியோனேட்" போன்ற கெமிக்கல்கள் இதில் கலக்கப்படுகின்றன. இந்தக் கெமிக்கல் கலந்த உணவுகளைத் தொடர்ச்சியாக சாப்பிடும்போது தோலில் அரிப்பு, அலர்ஜி மற்றும் குழந்தைகளுக்குக் கடுமையான ஒற்றைத் தலைவலி வருவதாக சர்வதேச உணவு பாதுகாப்பு அமைப்புகளும் கண்டறிந்துள்ளன.
அத்துடன், இந்த பாக்கெட் சப்பாத்திகளில் '100% கோதுமை' என்று கவர்ச்சியாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தாலும், மாவு மிருதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக மறைமுகமாக அதிகளவில் மைதாவும் சமையல் சோடாவும் கலக்கப்படுகின்றன.
பாக்கெட் உணவுகள்
இதனால் உணவின் இயற்கையான நார்ச்சத்து முற்றிலும் அழிந்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக வேகமாக உயர்கிறது. இதன் காரணமாக சின்ன வயசிலிலேயே சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் ஏற்படுவதாக உணவு ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வெறும் 10 நிமிட சமையல் எளிதாக இருக்கிறது என்பதற்காக, இதுபோன்ற ரசாயனங்கள் கலந்த பாக்கெட் உணவுகளை வாங்கி உடலைக் கெடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்பதே நிபுணர்கள் சொல்லும் அறிவுறுத்தலாகும்.. கொஞ்ச நேரத்தை செலவழித்து வீடுகளிலேயே மாவு பிசைந்து சமைத்து சாப்பிடுவதே நம்முடைய குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு எப்போதும் பாதுகாப்பானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக