
M R Stalin Gnanam : சஹ்ரானின் பூர்வீக வரலாறு
மட்டக்களப்பின் கிழக்கே பரந்து கிடக்கிறது அந்த வங்காள விரிகுடா.
ஆழமும் விரிவும் கொண்ட அந்தக் கடலில் தொலை தூரத்தே நின்று எந்தவொரு கும்மிருட்டு மிக்க இராக்காலங்களிலும் கரையைத் தேடுகின்ற மீனவர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழுவது காத்தான்குடி பட்டினத்தின் மின்னொளிகள் தரும் நம்பிக்கைக் கீற்றுகள்தான்.
ஆம் மட்டக்களப்பு மாநகரின் தெற்கே ஒரு சில கிலோ மீற்றர்கள் தூரத்தே உள்ள கரையோரப் பட்டினம்தான் அது.
அந்த காத்தான்குடி வியாபார பரபரப்புகளுடன் கூடிய சன நெரிசல்மிக்க ஒரு இடமாகும். எங்கு சென்றும் பெறமுடியாத பொருட்களை இந்த காத்தான்குடிக்குச் சென்றால் வாங்கிக்கொள்ள முடியும்.
![]() |
இலங்கையின் எங்கோ ஒரு மூலையில் கடை வைத்திருக்கும் முஸ்லிம்களிடம் குசலம் விசாரிக்க நேர்ந்தால் அவர்களின் தந்தையாரோ பாட்டனாரோ காத்தான்குடியில் இருந்து வந்துதான் அவ்வியாபாரத்தை ஆரம்பித்திருப்பார் என்பதை அறியமுடியும்
காத்தான்குடியில் (அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமாகச் சேர்த்து) சுமார் 66,000 முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.இவர்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஷியா முஸ்லிம்களாகும்.
சுமார் 60 ற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இப்பிரதேசத்தில் காணப்படுகின்றன.
*இவற்றில் சுமார் பத்து பள்ளிவாசல்கள் வஹாபிஸ சிந்தனைகளின் மையமாக திகழ்கின்றன.
மேலும் ஷரியத் சட்டங்களை போதிக்கும் 10 மதரஸாக்களும் இங்கே உள்ளன.
(* பாராளுமன்ற விசேட குழு அறிக்கை- பக்-144)
ஒரு காலத்தில் காத்தான்குடியை சுற்றியுள்ள மண்முனை பிரதேசத்தில் இயற்கையாக கிடைக்கும் 'பன்' ஓலையைக்கொண்டு இழைக்கப்படும் பாய்களுக்கு நிறந்தீட்டி இலங்கையெங்கும் அவற்றை பிரபல்யம் செய்தவர்கள் இந்த காத்தான்குடி வியாபாரிகள்தான். அதேபோல கைத்தறி சாரங்கள், புடவைகள் என்று காத்தான்குடிக்கு ஒரு அடையாளமுண்டு.
அதேபோல முன்னொரு காலத்தில் மாவட்டம் முழுக்க பம்பாய் (தும்பு) மிட்டாயிலிருந்து நைஸ், ஐஸ் பழம்,பட்டாணி சுண்டல் வரை குச்சொழுங்கைகள் நிறைந்த கிராமங்கள் தோறும் கூவி விற்கும் வியாபாரிகளை அறிமுகம் செய்ததும் இந்த காத்தான்குடிதான்.
சுவையான மாமிச உணவுகளுக்கும் எலும்புச் சூப்புகள், டல்க் கோப்பிகளுக்கும் முஸ்லிம்கள் மட்டுமல்ல தமிழர்களும் தேடிவந்து கூடுவதும் இங்கேதான்.
அது இற்றைக்கு எழுபத்தைந்து வருடங்களுக்கு முன்னரான காலம். அப்போது இலங்கை சுதந்திரம் அடைந்திருக்கவில்லை.
இந்தியாவிலிருந்து வந்த 'பாய்' ஒருவர் காத்தான்குடியில் வசித்து வந்தார்.
அவர் மட்டக்களப்பு பகுதியிலே ஊசி வியாபாரம் செய்துவந்தார்.
நாளும் பொழுதும் ஊசி விற்பது ஒன்றே அவரது தொழில் என்பதால் அவரை 'ஊசிபாய்' என்றே மக்கள் அழைக்கத் தொடங்கினர்.
சுத்தமான வெள்ளைச்சாரம், மேலங்கியாக ஒரு பனியன், அதற்கு மேலாக எவ்வேளையிலும் கிடக்கும் ஒரு கறுப்பான கோட், இடுப்பிலே கைப்பிடியளவு அகலம் கொண்ட கனமான கறுத்த வெல்ட், கைகள் நிறைய மாலைகளாக ஊசிக்கோர்வைகள்,
இதுதான் 'ஊசிபாய்'யின் அடையாளம்.
அதிகாலையிலே வெயிலுக்கு முன்னராக காத்தான்குடியிலிருந்து புறப்பட்டு பொடிநடையாக புளியந்தீவுக்கு வந்துவிடுவார்.
பகல் முழுக்க நகரின் ஒவ்வொரு வீதியாக நடையாய் நடந்து வீடு வீடாக படியேறி ஊசிகளை விற்று முடித்துவிட்டு மஃரிப்புக்குள் மீண்டும் காத்தான்குடிக்கு போய் சேரவேண்டும்.
வெயில் களைப்பும் சோர்வும் தெரியாதிருக்க கோட்டைமுனை கள்ளுத் தவறணைக்கு ஒரு விசிட் அடித்துவிட்டு 'நல்ல பருவத்துடன்' திரும்பத்தொடங்குவார் ஊசிபாய்.
காலம் கரைந்தோட காத்தான்குடியின் அழகியொருத்தி ஊசிபாய்யின் கண்ணில் தைத்தாள்.
விரைவில் அவளே அவரது வாழ்க்கைத் துணைவியுமானாள்.
அந்த தம்பதிகளுக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தனர்.
அப்துல் ரசூல், துவான், ஹாஜாமுகைதீன் என அவர்களுக்கு பெயரிட்டனர்.
கடைக்குட்டியான ஹாஜா முஹைதீனை செல்லமாக ஹாஷிம் என்றழைப்பது வழக்கமாயிற்று.
நாளடைவில் குழந்தைகள் சிறுவர்களாயினர்.
சிறுவர்கள் இளைஞர்களாகி ஊசிபாய்யின் வாரிசுகளாக ஒவ்வொருவராக திருமணம் முடிக்கும் வயதை அடைந்தனர்.
தகப்பனைப்போலவே தத்தமக்குரிய வியாபாரங்களை தொடங்கிக்கொண்டனர்.
ஹாஷிமின் தவணையும் வந்தது. தனது நண்பனான அப்துல் சமத்தின் சகோதரியான சித்தி சமீமாவை விரும்பத்தொடங்கினான்.
இருவீட்டார் சம்மதத்துடனும் திருமணமும் நிறைவேறியது.
தொழிலில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக காசிம் வசதியின்றி சிலகாலம் கஸ்ரமுற்றான். ஒருநாள் சைக்கிள் ஒன்றை திருட முனைந்து கையும் களவுமாக பிடிபட நேர்ந்தது.
அன்றுமுதல் 'சைக்கிள் கள்ளன்' என்னும் அவப்பெயருக்கு ஆளாகநேர்ந்தது.
நீண்டகாலத்துக்கு இந்த பழிச்சொல்லிலிருந்து மீள அவனால் முடியவில்லை.
எனவே தன்னை அல்லாஹ்வுக்கு அர்ப்பணித்து 'தப்லீக் ஜமாஅத்'துடன் இணைத்துக்கொண்டு மார்க்க பிரச்சார பணிகளில் ஈடுபடலானான்.
அதேபோல தனது குழந்தைகளும் மார்க்க ஈடுபாடுகொண்டவர்களாக, மெளலவிகளாக வளரவேண்டும் என அவாக்கொண்டான்.
தமது முதலாவது குழந்தையை காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயத்தில் சேர்த்து மகிழ்ந்தனர் ஹாஷிம் தம்பதியினர். மூன்றாம் வகுப்பு தாண்ட முன்னரே திரு-குர்ஆனின் 30 ஜூஸ்வுகளையும் மனனம் செய்து தன் தாய் தந்தையரை மகிழ்வித்த அந்த குழந்தைதான் உலகைக் குலுக்கிய ஈஸ்டர் தாக்குதலில் பிரதான சூத்திரதாரி ஊசிபாய்யின் பேரன் 'ஷஹ்ரான் ஹாஷிம்' என்றால் அதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.
நமது மண்ணுக்கு எத்தனையோ ஆக்கபூர்வமான வரலாற்றைத் தந்த இந்த காத்தான்குடியில் இருந்துதான் இலங்கை முழுக்க இரத்தவெள்ளத்தில் மிதக்கச்செய்த வஹாபிஷ பயங்கரவாதம் முளைக்கொண்டது என்கின்ற அதிர்ச்சிதரும் செய்தி அன்றுதான் வெளியுலகுக்கு தெரியவந்தது.
கிறிஸ்தவர்கள் அனைவரும் தமது ஈஸ்டர் பெருநாளைக் கொண்டாட காலை வேளையிலே தேவாலயங்களில் கூடியிருந்தனர். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த அந்த புனித ஞாயிறின் மகிழ்ச்சி மிக்க தருணங்களை பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளச் சென்றவர்கள் குண்டுவெடிப்புகளில் அகப்பட்டு நூற்றுக்கணக்கில் மாண்டுபோனார்கள். அந்த ஆராதனை மண்டபங்களை இரத்தக்களரியாக்கிய பிரதான சூத்திரதாரி 'ஷஹ்ரான்' நமதுாரைச் சேர்ந்தவன் என்னும் செய்தி காத்தான்குடியின் ஒவ்வொரு மனிதனையும் அச்சத்தில் உறைய வைத்தது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் ஒரே நிமிட இடைவெளியில் இழுத்து மூடப்பட்டன. எல்லோரும் வீடுகளுக்குள் ஓடியொழிந்து முடங்கிக் கொண்டனர். ஈஸ்டர் குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து கொழும்பு பகுதிகளில் முஸ்லிம்களுக்கெதிராக வன்முறைகள் நடப்பதாக செய்திகளும் வதந்திகளும் எல்லோர் காதுகளையும் நிரப்பின. கொழும்பில் மட்டுமல்ல மட்டக்களப்பிலும் சீயோன் தேவாலயத்தில் குண்டுவெடித்த செய்திகள் வந்தபோது இங்கும் தம்மீது வன்முறைகள் தாவலாம் என்கின்ற அச்சம் காத்தான்குடி மக்கள் அனைவரையும் பீடித்தது.
ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. நடந்து முடிந்த சம்பவங்களை அறிந்த மட்டக்களப்பு இளைஞர்கள் கொதிப்புணர்வும் கோபமும் கொண்டு படுகாயமுற்றவர்களுக்கு இரத்த வங்கிகள் நிரம்பி வழியுமளவுக்கு இரத்ததானம் செய்வதிலேயே தமது ஆத்திரங்களை கொட்டித் தீர்த்தனர். மாறாக முஸ்லிம்களுக்கெதிராக ஒரு கல்லெறி கூட நடக்கவில்லை.
ஆம் அந்த ஷஹ்ரானும் அவனது கூட்டாளிகளும் இந்த காத்தான்குடியிலேதான் பிறந்து வளர்ந்தார்கள். எப்படியவர்கள் இப்படியான ஒரு வஹாபிஷ்டுகளாக மாறினார்கள்? ஷஹ்ரான் போன்றோரது இளமைக்காலங்கள் எப்படியிருந்தன? வன்முறையாளனாக அவனை வளர்த்தெடுத்த கருத்தியல்தான் என்ன? இவையெல்லாம் ஓரிரு மாதங்களுக்குள்ளாகவோ ஓரிரு வருடங்களுக்குள்ளாகவோ இடம்பெற்ற நிகழ்வுகளல்ல. அது பல பத்துவருடங்களைக்கடந்த ஒரு நீண்டவரலாறாகும்.
(சிவ.சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்டர் படுகொலை நூலிலிருந்து)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக