வியாழன், 20 ஆகஸ்ட், 2026

நான்கு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; பாதிரியார் ஆபிரகாமுக்கு தூக்குத் தண்டனை

 dinamalar.com : திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேலஇலந்தகுளத்தில் நான்கு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்தவ பாதிரியார் ஆபிரகாம், 47, என்பவருக்கு தூக்குத் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம், மதபோதகராக ஊழியம் செய்து வந்தார். பல்வேறு மாவட்டங்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்று ஊழியம் செய்து வந்துள்ளார்.


 கடந்த 2022ல் ஊழியத்துக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12, 13, 8 வயது சிறுமிகள் உட்பட 4 சிறுமிகளை ஆபிரகாம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமிகள் தெரிவித்த தகவலின்பேரில், பெற்றோர் அளித்த புகாரில் திருநெல்வேலி மாவட்ட ஊரக அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆபிரகாமை கைது செய்தனர். மாவட்ட எஸ்.பி., உத்தரவின்பேரில், கூடுதல் எஸ்.பி., சண்முகம் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். திருநெல்வேலி போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில் சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இன்று நடந்த இறுதி விசாரணையில் ஆபிரகாம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். திருநெல்வேலி போக்சோ சிறப்பு கோர்ட்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: