வியாழன், 20 ஆகஸ்ட், 2026

கிழக்கு பல்கலை கழக விடுதியில் மாணவியின் சடலம் மீட்பு: இரு மாணவிகள் மயங்கினர்

  ilakkiyainfo.com  : கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில், மாணவி ஒருவர் புதன்கிழமை (19) பிற்பகல் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 84 பேர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் ஆர்.டி.ஏ. வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய கே. யாழினி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

குறித்த கல்லூரிக்கு நாடகத்துறைக்குத் தெரிவு செய்யப்பட்டு, கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, மாணவி விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்துள்ளார்.

இந்நிலையில், விடுதியிலுள்ளறையில் சம்பவ தினமான புதன்கிழமை (19) பிற்பகல் சுமார் 12.00 மணியளவில் குறித்த மாணவி தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இதனைக் கண்ட அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்தனர். உடனே அங்குள்ள மாணவர்கள், மூன்று  மாணவிகளையும்  மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

  உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காகப் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி 1ஆம் திகதி தொடங்கி ஜூலை 31 வரையிலான கடந்த 7 மாதங்களில் 84 பேரும்; கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 8 பேர் பேரும் கடந்த வருடம் (2025) ஜனவரி 1ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 31 வரை  164 பேர் பேரும் தங்கள் உிரை மாய்த்துக்கொண்டுள்னர் என மாவட்ட பொலிஸ் தலைமைக் காரியாலயப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: