minnambalam.com - Kavi : கோயம்பேடு காவல் உதவி ஆணையர் யாஸ்மின் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஜெம் வீரமணி பாலியல் குற்றம் தொடர்பாக கடந்த ஆண்டே புகார் அளித்தும் காவல் அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்தசூழலில் ஜெம் வீரமணி குறித்து புகார் அளிக்கப்பட்ட காலக்கட்டத்தில் உரிய பணியில் இருந்தவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜெம் வீரமணி வழக்கை முன்பு விசாரித்த உதவி ஆணையர் யாஸ்மின், விபசார தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர்கள் மகேஷ்குமார், ராஜலட்சுமி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தற்போது கோயம்பேடு காவல் உதவி ஆணையராக இருக்கும் யாஸ்மின் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதுகுறித்து டிஜிபி பிறப்பித்துள்ள உத்தரவில், ”பெருநகர சென்னை காவல்துறையின் கோயம்பேடு சரக உதவி ஆணையராகப் பணியாற்றி வரும் யாஸ்மின், அடுத்தகட்டப் பணி நியமனங்களுக்காக நிர்வாகக் காரணங்களின் அடிப்படையில் உடனடியாகத் தலைமை அலுவலகக் காலிப்பணியிடக் காத்திருப்புப் பட்டியலுக்குக் கொண்டுவரப்படுகிறார்.
உரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்து, குறிப்பிட்ட உதவி ஆணையரை இன்றே (24.09.2026) பணியிலிருந்து விடுவிக்குமாறு பெருநகர சென்னை காவல் ஆணையர் கேட்டுக்கொள்ளப்படுகிறார். மேலும், உடனடியாக சென்னை, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல் படைத் தலைவர் அலுவலகத்தில் வந்து அறிக்கை அளிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அருண், கண்ணன் ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகளும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Photo of author
Kavi
சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக