வியாழன், 24 செப்டம்பர், 2026

மலையக ஆளுமை மு. சிவலிங்கம் ஐயா காலமானார் |

 kuruvi.lk :மலையகத்தின் பிரபல இலக்கியவாதியும், தொழிற்சங்க மற்றும் அரசியல் ஆளுமையுமான மு. சிவலிங்கம் இன்று (24) காலமானார்.
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான இவர், மத்திய மாகாண சபை உறுப்பினராகவும் பதவி வகித்து மக்கள் சேவையாற்றியுள்ளார்.
மலையகத் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடிவிற்காகத் தனது பேனா முனையைக் கூர்மையான ஆயுதமாகக் கொண்டு, அறவழியில் போராடிய ஒரு ஜனநாயகப் போராளியாக இவர் திகழ்ந்தார்.



சிறுகதைகள், நாவல்கள், அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் திறனாய்வுகள் எனப் பல்வேறு துறை சார்ந்த இலக்கியப் படைப்புகளைப் படைத்துள்ள மு. சிவலிங்கம், ‘ஒப்பாரி கோச்சி’ என்ற தனது புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பின் ஊடாக இன்றைய இளம் தலைமுறை வாசகர்களாலும் வெகுவாக அறியப்பட்டவர்.

தனது இறுதி மூச்சு வரை மலையக மண்ணினதும், உழைக்கும் மக்களினதும் உரிமைச் சார்ந்த விடிவுக்காகத் தன்னால் இயன்ற அனைத்துப் பணிகளையும் ஆற்றிய ஒரு ஒப்பற்ற ஆளுமையாகத் திகழ்ந்த இவரது மறைவு, மலையக சமூகத்திற்கும் இலக்கிய உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

மறைந்த மலையக இலக்கிய அரசியல் ஆளுமை திரு மு.சிவலிங்கம் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாக தொலைபேசி மூலம் உரையாடியபோது பல அரிதான செய்திகளை கூறினார் 


திரு எஸ் ஜெ வி செல்வநாயகத்தின் தமிழரசு கட்சியினர் தங்களின் பிரசார நடவடிக்கைகளுக்காக தன்னை போன்ற பல மலையக இளைஞர்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பிரசார நடவடிக்கைகளுக்காக அழைத்து  சென்றார் 
அப்போது நாம் என்ன பேசினோம் என்பது கூட சிறுவனாக இருந்த என்னை போன்றவர்களுக்கு இப்போது ஞாபகம் இல்லை.
அந்த மக்கள் நமது பேச்சுக்களை மிகவும் ஆரவாரமாக ரசித்தார்கள். 
திராவிட இயக்கங்களின் அரசியல் தாக்கங்களினால் மேடைப்பேச்சுக்களில் நாம் கொஞ்சம் வல்லமையோடு இருந்தோம்.
எம்மை தமது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி கொண்டார்கள் 
மலையக இளைஞர்கள் வடக்கு கிழக்கு தமிழர்களிடையே அரசியல் பிரசாரங்களுக்காக பயன்படுத்த பட்டார்கள் என்ற செய்தி எனக்கு புதிதாக இருந்தது 
இந்த இடத்தில் இவர் கூறிய இந்த செய்தியையும் கூறி வைக்கவிரும்புகிறேன் 

கருத்துகள் இல்லை: