![]() |
Guna Pdkgobi : கோட்டை விட்ட விஜய்.. ஆளுநரின் பிடியில் சிக்கிய 'ஆதரவு கடிதம்' - நீதிமன்றம் சென்றாலும் பலன் இல்லை?
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு சட்டச் சிக்கலில் சிக்கியிருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். "தனிப்பெரும் கட்சிக்குத்தான் முதல் முன்னுரிமை" என்ற ஜனநாயக மரபு, விஜய்யின் ஒரே ஒரு 'நிர்வாகத் தவறால்' தற்போது அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளது. ஆளுநர் ஆர்லேகரின் பிடிவாதம் ஒருபுறமிருக்க, இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
விஜய் செய்த அந்த விபரீத 'பிளண்டர்'!
சட்டசபைத் தேர்தலில் 107 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக தவெக நின்றபோது, விஜய் அமைதியாக இருந்திருக்கலாம். ஆளுநர் அழைக்கும் வரை காத்திருந்து, பிறகு சட்டசபையில் தனது பலத்தை நிரூபித்திருக்கலாம். அல்லது நான்தான் பெரிய கட்சி என்று சொல்லி இருக்கலாம். ஆனால், கிண்டி ஆளுநர் மாளிகையில் அவர் சமர்ப்பித்த அந்த ஆதரவுக் கடிதம்தான் இப்போது அவருக்குப் பெரும் வினையாக முடிந்துள்ளது.
தன்னிடமுள்ள 107 எம்.எல்.ஏ-க்களுடன் காங்கிரஸ் கட்சியின் 5 பேரைச் சேர்த்து மொத்தம் 112 பேர் என அவர் கணக்குக் காட்டியது, அவராகவே தனது பலவீனத்தை ஒப்புக்கொண்டது போல் ஆகிவிட்டது. "உங்களிடம் 118 பேர் இல்லை என்பது உங்கள் கடிதத்திலேயே தெரிகிறது, பிறகு எப்படி உங்களை ஆட்சி அமைக்க அழைக்க முடியும்?" என்ற ஆளுநரின் தர்க்கரீதியான கேள்விக்கு விஜய்யிடம் தற்போது பதில் இல்லை.
ஒருவேளை விஜய் ஆதரவுக் கடிதமே தராமல் இருந்திருந்தால், ஆளுநர் அவரைத் தனிப்பெரும் கட்சித் தலைவராகப் பார்த்திருப்பார். ஆனால், விஜய் தானாகவே முன்வந்து கூட்டணிக் கணக்கைக் காட்டியதால், "ஏன் 118 வரவில்லை?" என்ற கேள்வியை ஆளுநர் எழுப்ப வழிவகை செய்துவிட்டார். 112 என்பது ஆட்சியமைக்கத் தேவையான 118-ஐ விட 6 இடங்கள் குறைவு என்பதால், "முழு பெரும்பான்மை இல்லாத ஒருவரை எப்படி அழைப்பது?" என ஆளுநர் தரப்பு பிடிவாதம் காட்டத் தொடங்கியுள்ளது.
எஸ்.ஆர். பொம்மை தீர்ப்பு உதவுமா?
அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்துவது குறித்துப் பேசும் புகழ்பெற்ற 'எஸ்.ஆர். பொம்மை (1994)' வழக்கின் தீர்ப்பு, "ஒரு அரசின் பெரும்பான்மையை ஆளுநர் மாளிகையில் தீர்மானிக்கக் கூடாது, சட்டசபையில்தான் (Floor Test) தீர்மானிக்க வேண்டும்" என்று கூறுகிறது. இதை வைத்து விஜய் தரப்பு நீதிமன்றத்தை அணுகத் திட்டமிட்டுள்ளது.
ஆனால், இங்கே ஒரு பெரிய சிக்கல் உள்ளது. எஸ்.ஆர். பொம்மை வழக்கின் சாராம்சம், ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் ஒரு முதலமைச்சரின் பெரும்பான்மையைப் பற்றியது. அல்லது தனிபெரும்கட்சி பற்றியது. ஆனால், புதிய அரசு அமையாத நிலையில், ஒருவரை ஆட்சி அமைக்க அழைப்பதற்கு முன்னரே அவரிடம் பெரும்பான்மை இல்லை என்பது ஆளுநருக்கு ஆவணப்பூர்வமாகத் (விஜய்யின் கடிதம் மூலம்) தெரிந்துவிட்டால், ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அழைக்க மறுக்கலாம்.
நீதிமன்றம் ஏன் கைகொடுக்காது?
விஜய் நீதிமன்றம் சென்றால், "நான் தனிப்பெரும் கட்சியின் தலைவர், என்னை ஏன் அழைக்கவில்லை?" எனக் கேட்கலாம். ஆனால், ஆளுநர் தரப்பு விஜய்யின் 112 பேர் ஆதரவு கடிதத்தைக் காட்டி, "மனுதாரரே தனக்கு 118 பேர் இல்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். நிலையற்ற ஒரு அரசை அமைக்க அனுமதிப்பது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும்" என்று வாதிடும்.
மேலும், சமீபத்திய கர்நாடகா, கோவா மாநில வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின்படி, ஒரு கூட்டணிக்குத் தெளிவான பெரும்பான்மை இருக்கும்போது, தனிப்பெரும் கட்சியை விட அந்தக் கூட்டணிக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இங்கே விஜய் காட்டிய 112 என்ற எண்ணிக்கை, அவரிடம் மெஜாரிட்டி இல்லை என்பதை உறுதிப்படுத்துவதால், ஆளுநரின் முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பாது என்றே தெரிகிறது.
வி.சி.க மற்றும் இடதுசாரிகளின் பிடியில் விஜய்!
இப்போது விஜய்க்கு இருக்கும் ஒரே வழி, வி.சி.க, சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ போன்ற கட்சிகளிடம் இருந்து அந்த மீதமுள்ள 6 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்று, புதிய கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பிப்பதுதான்.
தவறான ஒரு 'மூவ்' மூலம் ஆளுநருக்குக் கூடுதல் அதிகாரத்தைக் கொடுத்துவிட்ட விஜய், இப்போது சட்டப் போராட்டத்திலும் பின்னடைவைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. கிண்டி ஆளுநர் மாளிகையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? அந்த 6 எம்.எல்.ஏ-க்கள் யார்? தமிழக அரசியலின் 'கிளைமாக்ஸ்' இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். See less

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக