மின்னம்பலம் : கோவை தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஷாகா பயிற்சி நடைபெற்றதை எதிர்த்து பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் மற்றும் பிற அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை இந்து முன்னணி அமைப்பினர் தடுத்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தர்மசாஸ்தா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் சில நாட்களாக நடந்து வருகிறது. தகவல் தெரிந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் டிசம்பர் 30 ஆம் தேதி அந்த பள்ளிக்கு எதிராக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் அதிகாரம் உட்பட பல்வேறு அமைப்பினை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதாவை சந்தித்து, “அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது” என்று மனு அளித்துள்ளனர். இதேபோல நாம் தமிழர் கட்சியினரும் ஆர்.எஸ்.எஸ்.ஷாகா நடக்கும் பள்ளிக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி டிசம்பர் 31 வெளியிட்ட அறிக்கையில், “கோவை மாநகரில் தொடர்ந்து பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ். என்னும் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பின் ஷாகா என்னும் வன்முறைப் பயிற்சி நடந்து கொண்டுள்ளது. கே.எம்.சி.எச். என்னும் செவிலியர் பள்ளியில்கூட பெண்களுக்கு வன்முறைப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்ட நிலையில், எதிர்ப்பின் காரணமாக பள்ளி நிர்வாகம் அங்கு ஷாகா பயிற்சி அளிப்பதற்கு அனுமதி மறுத்துவிட்டது.
அதேநேரத்தில் கோவை விளாங்குறிச்சியில் உள்ள தர்மசாஸ்தா மேல்நிலைப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸின் வன்முறையைக் கற்றுத்தரும் ஷாகா பயிற்சி சில நாள்களாக நடத்தப்பட்டு வரும் நிலையில், பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருஷ்ணன் தலைமையில், 40-க்கும் மேற்பட்ட தோழர்கள், ஒரு கல்வி நிறுவனத்தில், மாணவர்களுக்கு வன்முறைப் பயிற்சியும், வன்முறைத் தொடர்பான வகுப்பும் நடத்தப்படுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்றபோது, காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிக் காவல்துறை வாகனத்தில் ஏற்றி, ரிமாண்ட் செய்ய ஆயத்தமானார்கள். பிரச்சினை பெரிய அளவுக்கு வெடித்துக் கிளம்பி- பொது மக்களின் ஆதரவும் பெருகும் என்ற சூழ்நிலையில், கடைசி கட்டத்தில் நேற்றிரவு 8 மணியளவில் தோழர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நேரத்தில், மற்றொரு நிகழ்வைக் குறிப்பிட்டாகவேண்டும். அப்பொழுதுதான் கோவை மாநகரக் காவல்துறையின் எண்ணமும், போக்கும் எந்த அளவில் இருக்கிறது - இரட்டை அணுகுமுறை இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.
கடந்த 17 ஆம் தேதி கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், எழுத்தாளர் ஓவியா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். இதனைக் கண்டிக்கும் வகையில் இரண்டு நாள்கள் கழித்து 19.12.2021 அன்று வாய்த் துடுக்குப் பேர்வழி எச்.ராஜா தலைமையில் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் வாசலில் மேடை போட்டு ஆர்ப்பாட்டத்தை காவல்துறை அனுமதியோடு நடத்தியுள்ளனர். 300 பேர் வரை ஆட்களைத் திரட்டிக் கொண்டு வந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். தந்தை பெரியார் பற்றியும், முதலமைச்சரைப்பற்றியும் வாய்க்கு வந்தவாறு கேவலமாகவும், கீழ்த்தரமாகவும் பேசியுள்ளார்.
ஒரு கல்வி நிறுவனத்தின் வன்முறை ஷாகா பயிற்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினால், கைது நடவடிக்கை - ஒரு பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கம் நடத்துவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினால், அதற்குச் சிவப்புக் கம்பளம் விரித்து, அனுமதி என்றால், இது என்ன இரட்டை அணுகுமுறை? முதலமைச்சர் அவர்கள் இதில் உரிய வகையில் கவனம் செலுத்தி, தக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசர அவசியமாகும். தமிழ்நாடு உத்தரப்பிரதேசமல்ல” என்று காட்டமாக கூறியுள்ளார் கி.வீரமணி.
இதற்கு பதிலளித்துள்ள பாஜக தேசிய மகளிரணி தலைவியும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன்,
“கோவையில் சில தனியார் கல்வி நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஷாகா பயிற்சி நடைபெறுவதாகவும், இது வன்முறை பயிற்சி என்றும், இதனை எப்படி காவல் துறை அனுமதித்தது என்றும் திராவிடர் கழகத் தலைவர் திரு. கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் என்றழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல. இந்திய அரசியல் சட்டப்படி, மற்ற பொது அமைப்புகளைப் போலவே இயங்கி வரும் பேரியக்கம்.
ஆர்எஸ்எஸ்ஸின் தினசரி ஷாகா பயிற்சிக்கு மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் வருகை தந்து, ஜாதி பேதமற்ற ஆர்எஸ்எஸ்ஸின் அணுகுமுறையை பாராட்டியுள்ளனர். இதுவெல்லாம் வரலாற்றில் பதிவாகியுள்ளது. ஆனால், ஆர்எஸ்எஸ் பற்றி மாற்று மதத்தினரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தி, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் ஆர்எஸ்எஸ் மீது பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் அவதூறுகளைப் பரப்பி வருகின்றன.
ஆர்எஸ்எஸ் பற்றிய அவதூறுகளை மக்கள் ஒருநாளும் பொருட்படுத்தியதில்லை. அப்படி பொருட்படுத்தியிருந்தால் மாபெரும் மக்கள் இயக்கமாக வளர்ந்திருக்க முடியாது. குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், முதல்வர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்எஸ்எஸ் ஷாகா மூலம் பொதுவாழ்வுக்குள் வந்தவர்கள்தான்.
திராவிடர் கழகத் தலைவர் கூறுவதுபோல ஆர்எஸ்எஸ் வன்முறை இயக்கமாக இருந்திருந்தால் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது. எனவே, ஆர்எஸ்எஸ் பற்றிய அச்சத்தை விதைத்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடையும் முயற்சிகளை கைவிட வேண்டும். ஏனெனில் உண்மை என்ன என்பதை மக்கள் நன்கறிவார்கள். இந்திய அரசியல் சாசனத்தின்படி இயங்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு இந்தியாவின் எந்தப் பகுதியிலும் செயல்பட உரிமை உள்ளது” என்று கூறியுள்ளார்.
-வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக