செவ்வாய், 28 டிசம்பர், 2021

மாநில அளவில் போதாது.. தேசிய அளவில் பாடம் புகட்ட வேண்டும் .. 'பாஜகவுக்கு' எதிராக முதல்வர் ஸ்டாலின் அறைகூவல்

 Rajkumar R  -  Oneindia Tamil :   சென்னை: பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் பாடம் புகட்ட கூடிய தேர்தலாக கடந்த சட்டமன்ற தேர்தல் இருக்கும் என கூறினேன்,
பாடத்தை தமிழக மக்கள் புகட்டிவிட்டனர்,
ஆனாலும் இந்திய அளவில் யாருக்கு பாடம் புகட்ட வேண்டுமோ அவர்களுக்கு புகட்ட அனைவரும் உறுதியேற்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மறைந்த மூத்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தா.பாண்டியன் அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி சென்னை எழும்பூர் பெரியார் திடலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தா.பாண்டியன் அவர்களின் திரு உருவப் படத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு திறந்து வைத்தார்.


மேலும் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி ராஜா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆகியோர் கலந்துகொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்..

நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது, சிறு வயது முதலே இந்திய சுதந்திர போராட்டத்திற்காக போராடியவர் தா.பாண்டியன்.சிறந்த பேச்சாளர்களை உருவாக்கிய பெருமை தா.பாண்டியன் அவர்ககளுக்கு உண்டு என்றார். தமிழகத்தில் சிலர் பெரியார் சிலையையும் அவமரியாதை செய்கிறார்கள், வேறு சிலர் மேடையில் காட்டு கத்து கத்துகிறார்கள்,

அரசியல் நாகரீகம் வேண்டும் , மிக அநாகரீகமாக பேசுவதை குடும்பத்தை குறித்து பேசுவதை மிக வன்மையாக கண்டிக்கிறோம் எனவும், இது தொடர்ந்தால் நிச்சயம் பின் விளைவுகளை எதிர் கொள்வீர்கள் என்றார். திருமாவளவன்,

சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசும்போது, இலங்கை தமிழர்கள் நலனில் கம்யூனிஸ்ட்களுக்கு அக்கறை உண்டு என்பதை வெளிப்படுத்தியவர் தா.பாண்டியன் என்றும், சங் பரிவாரின் பாசிசத்தை வேரறுக்க நாம் ஒன்றிணைந்து நிற்பதே தா.பாண்டியனுக்கு நினைவேந்தல் செலுத்துவதாக இருக்கும் என்றார்.
இதேபோல் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறும்போது, மோடியை மண்டியிடவைத்த திறமை டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு உண்டு எனவும்,
அப்படிப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தோழர் தா.பாண்டியன் என்றாலே தலை தாளாத பாண்டியன் என்றுதான் பொருள் எனவும், எப்போதும் யாருக்கும் அஞ்சாத நபராக மட்டுமே அவர் இருந்தார், திமுகவிற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உள்ளது வெறும் நட்பு அல்ல ,இது ஒரு குடும்பம் சாதாரண குடும்பம் அல்ல கொள்கை குடும்பம் எனவும், திராவிட இயக்கமும் பொதுவுடமை இயக்கமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தா.பாண்டியன் எப்போதும் கூறுவார் எனறார்.
அதைத்தான் நாம் தற்போது பின்பற்றி வருகிறோம் ,நமக்குள் உள்ளது தேர்தல் உறவு அல்ல கொள்கை உணர்வு எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் ஆட்சி மாற்றம் வேண்டும் என தா.பாண்டியன் பேசியிருந்தார் தற்போது அவர் இல்லை என்பது கவலை அளிக்கிறது எனக்கூறிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என சபதம் எடுத்தார், வெற்றி விழா கூட்டத்தில் சந்திப்போம் என முழங்கினார், இவ்வளவு பெரிய வெற்றியை அவர் பார்க்கவில்லை என்ற சோகம் வாட்டி வதைக்கிறது எனவும், பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் பாடம் புகட்ட கூடிய தேர்தலாக கடந்த சட்டமன்ற தேர்தல் இருக்கும் என கூறினேன், பாடத்தை தமிழக மக்கள் புகட்டிவிட்டனர், ஆனாலும் இந்திய அளவில் யாருக்கு பாடம் புகட்ட வேண்டுமோ அவர்களுக்கு பாடத்தை புகட்ட அனைவரும் உறுதியேற்க வேண்டும் என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: