புதன், 29 டிசம்பர், 2021

சாமியாரிணி அன்னபூரணி சென்னை காவல் அலுவலகத்தில் ... மர்மமான முறையில் உயிரிழந்த கணவர்!

 .hindutamil.in  : சென்னை: ஆன்மிகப் பணி செய்ய வந்த என்னைப் பற்றி அவதூறு பரப்பிக் கொண்டிருகிறார்கள் என்று பக்தர்களுக்கு அருள்வாக்கு தருபவராக அறியப்படும் அன்னபூரணி பேட்டிளித்துள்ளார்.
சில தினங்களாகவே ''அன்னபூரணி அரசு அம்மா'' என்ற பெயர் ஊடகங்களிலும் பொதுவெளிகளிலும் பரபரப்பாக பவனி வந்துகொண்டிருக்கிறது. அந்த பரபரப்புக்குச் சொந்தக்காரரான அன்னபூரணி தன்னைக் கடவுள் என்று கூறிக்கொண்டு மக்களுக்கு அருள்வாக்குகளைக் கூறிவந்ததாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவரைப் பற்றிய பல்வேறு வீடியோக்கள் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவற்றில் ஒன்று, அவருக்கு பக்தர்கள் பூஜை செய்யும் காட்சி. அதில் அவர் வெல்வெட்டு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க தோழியர்கள் சாமரம் வீச பக்தர்கள் அவர் காலில் விழுந்து வணங்குகின்றனர். இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வையாளர்களைச் சென்றடைந்து வைரலானது.
அன்னபூரணி

இன்னொன்று 2013-ல் அவர் வேறொருவரின் கணவரைப் பிரித்து தன்னோடு வாழ்வதற்காக சொல்வதெல்லாம் உண்மை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றது. பின்னர் வேறொருவரிடமிருந்து பிரிந்து வந்த அவரது கணவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. அவற்றையெல்லாம் சேர்த்து வெவ்வேறு புதுக்கதைகளும் உலவத் தொடங்கின.

பின்னர், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜனவரி 1ஆம் தேதி அருள்வாக்கு தரும் அன்னபூரணி அரசு அம்மா எனக் கூறி ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டதாகவும் போலீஸார் அதைத் தடுத்து நிறுத்தியதாகவும் அன்னபூரணி, தலைமறைவு, போலீஸார் வலை என்றெல்லாம் கூட செய்திகள் வந்தன. இதனால் அவரைப் பற்றிய பிம்பங்கள் பன்மடங்காகப் பெருகத் தொடங்கின.
2013 தொலைக்காட்சியில் தோன்றிய அன்னபூரணி

அன்னபூரணி பேட்டி:

இந்நிலையில்தான் இன்று அன்னபூரணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்து புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களையும் அவர் சந்தித்தார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்த விவரம்:

''என்னைப் பற்றி தவறான செய்திகளை அவதூறாகப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் காவல் ஆணையரைப் பார்த்து மனு அளிப்பதற்காக இங்கே வந்துள்ளேன்.
பக்தர் ஒருவர் அன்னபூரணியின் காலில் விழுந்து கதறுவதைக் கூடிநிற்கும் பக்தர்கள் பரவசத்தோடு வணங்கும் காட்சி

என்னவென்று புகார் அளிக்க வந்துள்ளீர்கள்?

என்னை வந்து போலிச் சாமியார், சாமியார் என்று தேவையில்லாத விஷயங்கள் எல்லாம் அவதூறாகப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். நான் வந்தது ஆன்மிகப் பணி புரிவதற்குத்தான். என் வேலையும் அதுதான். ஆன்மிகப் பயிற்சிஅளித்து தீட்சை கொடுத்துவருகிறேன். என்னிடம் தீட்சை பெற்று பயிற்சி பெற்றவர்களுக்குத் தெரியும் நான் என்னவாக இருக்கிறேன் என்று. உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். பார்க்கிறவர்களுக்குத் தெரியாது.

நீங்க சாமியாரா? போலிச் சாமியாரா?

நான் முதலில் என்னை சாமியார் என்றே சொல்லிக் கொள்ளவில்லையே... அப்புறம் எப்படி என்னை போலிச் சாமியார் என்று சொல்ல முடியும்.

நான் என்றுமே என்னை ஆதிபராசக்தியாகவும் கடவுளாகவும் சொல்லிக் கொள்ளவில்லை. என்னை சிலர் உணர்ந்தவர்கள் அப்படி என்னை அழைக்கிறார்கள். என்னைப் பற்றி எல்லோருமே தவறுதலாகத்தான் அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆன்மிகப் பணியைத் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருப்பேன். அதற்காகத்தான் நான் வந்தேன்.

நீங்க அருள்வாக்கு கொடுப்பதுபோல வீடியோ வந்துள்ளதே?

நான் எந்த அருள்வாக்கும் கொடுக்கவில்லை.

அப்படியென்றால் அந்த வீடியோவில் உள்ளது நீங்கள் இல்லையா?

அது நான்தான். நான் அருள்வாக்கு எதையும் கொடுக்கவில்லை. ஆன்மிகம் என்றால் என்ன? கடவுள் யார், என்னை நாடி வருபவர்களை எந்த சக்தி இயக்குகிறது என்பதைக் கூறுவேன். இறுதியில் சத்தியம்தான் ஜெயிக்கும். தர்மம்தான் வெல்லும்

மக்கள் உங்கள் காலில் விழுகிறார்கள், ஆன்மிகப் பணி என்றால் என்ன? தாங்கள் வழிபட்ட சிலையை எடுத்துச்சென்றுவிட்டார்கள் எனத் தகவல் வந்ததே?

எல்லாவற்றுக்கும் அடுத்த சூழ்நிலை வரும்போது பதில் சொல்கிறேன்.

இவ்வாறு அன்னபூரணி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: