வெள்ளி, 31 டிசம்பர், 2021

விக்கிப்பீடியாவின் என்சைக்ளோபீடியா... சாதனை தமிழர் மூர்த்தி

Wikipedia encyclopedia: Moorthi from Tamil Nadu wrote 6000 articles, Know more in Detail

tamil.abplive.com - க.சே.ரமணி பிரபா தேவி |   : Wikipedia | விக்கிப்பீடியாவின் என்சைக்ளோபீடியா... மகத்தான சாதனை படைத்த தமிழர் மூர்த்தி
இணையத்தில் தொடர்ந்து வாசிப்பவரா நீங்கள்? உங்களுக்கு மூர்த்தியைத் தெரியாது. ஆனால் அவரது எழுத்துகளை வாசிக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள்.
இணையத்தில் தொடர்ந்து வாசிப்பவரா நீங்கள்? உங்களுக்கு மூர்த்தியைத் தெரியாது. ஆனால் அவரது எழுத்துகளை வாசிக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள். விக்கிபீடியாவில் இருக்கும் அறிவியல் தமிழ் கட்டுரைகளில் பெரும்பான்மையானவை இவரது பங்களிப்புதான்.
இணையத்தில் இருக்கும் மிக முக்கியமான தகவல் கலைக் களஞ்சியம் விக்கிப்பீடியா. உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் விக்கிப்பீடியா தமிழில் தற்போதுவரை 1.43 லட்சம் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.


அதிகக் கட்டுரைகள் பங்களிப்பில் தேசிய அளவில் உருது, இந்தி மொழிகளுக்கு அடுத்து, மூன்றாவது இடத்தில் தமிழ் விக்கிப்பீடியா உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து விக்கிப்பீடியா தமிழுக்கு எழுத சுமார் 2 லட்சம் பயனர்கள் பதிவு செய்திருந்தாலும், 300 பயனர்களே இதில் தொடர் பங்களிப்பாளர்களாக உள்ளனர்.

அதில் தனி ஒருவராக 6,000 கட்டுரைகளை எழுதி முடித்து சாதனை படைத்திருக்கிறார் வேலூரைச் சேர்ந்த 56 வயது அரசு ஊழியர் மூர்த்தி. முன்னதாக இலங்கையைச் சேர்ந்த புன்னியாமீன் என்பவர், உலக அளவில் தமிழ் மொழியில் அதிகக் கட்டுரைகளை எழுதியிருந்தார். அவர் 2018-ம் ஆண்டு காலமான நிலையில், தற்போது தமிழ் மொழியில் அதிகக் கட்டுரைகள் எழுதிய நபர்களின் பட்டியலில் மூர்த்தி முதலிடத்தில் உள்ளார்.

சாதனை படைக்கும் குடும்பம்

அரசு ஊழியராக இருந்தாலும், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எட்டாண்டுகளுக்கும் மேல் தமிழ் சமூகத்துக்காகப் பங்களித்து வருகிறார் மூர்த்தி. வேதியியல் துறை சார்ந்து தமிழில் கட்டுரைகள் குறைவாகவே உள்ள நிலையில், அதில் கவனம் செலுத்தி எழுதுகிறார். அவரின் மனைவி, மகளும் விக்கிப்பீடியாவில் எழுதி வருகின்றனர்.

இதுகுறித்து ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திடம் மூர்த்தி கூறும்போது, ''குரூப் 4 தேர்வெழுதி, அரசுப் பணியில் இணைந்தேன். தற்போது கரூவூலத் துறையில் உதவி கருவூல அலுவலராகப் பணியாற்றி வருகிறேன். 2013-ம் ஆண்டு இணையத்தில் உலவிக் கொண்டிருந்தபோது யதேச்சையாக தமிழ் விக்கிப்பீடியாவைப் பார்த்தேன். அதில் நீங்களும் கட்டுரை எழுதலாம் என்று குறிப்பிட்டிருந்ததைப் பார்த்துவிட்டு, தமிழ் மொழிக்கு நம்மால் ஆன பங்களிப்பைச் செய்யலாம் என்று முடிவெடுத்தேன்.

கல்வெட்டு, ஓலைச்சுவடிகளில் தமிழ்

தட்டுத்தடுமாறி விக்கிப்பீடியாவில் எழுதிப் பதிவேற்றக் கற்றுக்கொண்டேன். அந்த வகையில் காலை 1, மாலை 1 என தினந்தோறும் குறைந்தபட்சம் 2 கட்டுரைகளை எழுத வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு, எழுத ஆரம்பித்தேன். 8 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவருகிறேன். இதுவரை 6 ஆயிரம் கட்டுரைகளை முடித்திருக்கிறேன். முந்தைய காலத்தில் மக்கள் கல்வெட்டு, ஓலைச்சுவடிகளில் எழுதி தமிழை அடுத்த தலைமுறைக்குக் கடத்தினர். நாம் நமக்கு அடுத்த தலைமுறைக்குத் தமிழைக் கடத்த ஒரே வழி இணையம்தான். அதில் நம்முடைய பங்குக்கு எவ்வளவு செய்ய முடியுமோ, செய்யலாம் என்று நினைத்து எழுதி வருகிறேன்.

தமிழ் வழியில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்காக எளிமையான வேதியியல் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறேன். அமைவிடங்கள், வெளிநாட்டு விநோதங்கள், விண்வெளி செய்திகளையும் எழுதி வருகிறேன்.  2015-ல் இதையறிந்த உதயசந்திரன் ஐஏஎஸ், அவரின் அலுவலகத்துக்கு நேரில் வரவைத்து என்னை தினசரி முழு நேரம் விக்கிப்பீடியா கட்டுரைகளுக்குப் பங்களிக்கச் செய்தார். 2 மாதங்கள் முழுமையாகக் கட்டுரைகளை எழுதிக் குவித்தேன். அதேகாலகட்டத்தில் உதயசந்திரனின் வழிகாட்டலில், பொறியியல் கல்லூரிகளுக்குச் சென்று விக்கிப்பீடியா என்றால் என்ன, அதில் கட்டுரைகள் எழுதுவது எப்படி? அது ஏன் முக்கியம்? என்றெல்லாம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளேன்.

அனைவரின் கடமை

நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் நிச்சயம் ஆர்வம் இருக்கும். அத்தகைய துறைசார் தகவல்களைக் கட்டுரைகளாக எழுத முயற்சி செய்யுங்கள். இது அனைவரின் கடமையும் கூட. அவற்றை விக்கிப்பீடியாவில் பதிவேற்றினால் வருங்கால மாணவர்களுக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும்.

இதை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். தமிழில் படியுங்கள் என்று மாணவர்களிடம் தொடர்ந்து சொல்கிறோம். ஆனால் படிக்க அவர்களுக்கு உள்ளடக்கம் வேண்டுமே? பழங்கால இலக்கியம் மட்டுமே போதுமா? அவர்களுக்குத் தேவையான தகவல்களைக் கொடுத்துவிட்டு, பிறகு படிக்க ஊக்கப்படுத்தலாம். ஏனெனில் இணையத்தில்தான் இப்போதைய தலைமுறையினர் அதிகம் படிக்கின்றனர்''  
என்கிறார் மூர்த்தி.

விக்கிப்பீடியாவில் மட்டுமல்லாமல் அதன் சகோதரத் திட்டங்களான விக்சனரி (இணையத்தில் பலரால் உருவாக்கப்படும் பன்மொழி அகராதி), விக்கிமூலம் (ஓசிஆர் செய்து நூல்களைத் தொகுக்கும் நூலகம்), விக்கித்தரவு (கேள்வி - பதில் வடிவிலான, தன்னார்வலர்களால் உருவாக்கப்படும் இணைய நூலகம்), பொதுவகம் உள்ளிட்ட திட்டங்களிலும் மூர்த்தி கணிசமான பங்களிப்புகளைக் கொடுத்துள்ளார். கட்டுரைகளை எழுதியதோடு மட்டுமல்லாமல், மொத்தம் 13 ஆயிரம் கட்டுரைகளில் சுமார் 38 ஆயிரம் திருத்தங்களைச் செய்துள்ளார்.


இன்னும் பலர் விக்கிப்பீடியாவில் தமிழை வளர்க்க, தன்னார்வத்துடன் எழுத முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார் மூர்த்தி. ''தமிழில் இயற்பியல், கணிதம், கணிப்பொறி இயல் உள்ளிட்ட துறைகள் அதிகம் எழுதப்படாமல் இருக்கின்றன. ஆங்கிலத்தில் சுமார் 60 லட்சம் கட்டுரைகள் விக்கிப்பீடியாவில் உள்ளன. ஆனால் தமிழில் 1.5 லட்சத்தையே இன்னும் நாம் தாண்டவில்லை. மாணவர்கள் தமிழில் தேடும்போது தேவையான கட்டுரைகள் இருந்தால், நிச்சயம் ஆர்வத்துடன் படிப்பார்கள்.

சர்வதேச அளவில் அனைவருமே ஏற்றுக்கொள்ளக் கூடிய, நம்பகத்தன்மையான தகவல் தளமாக இருப்பதால் விக்கிப்பீடியாவில் எழுதுவது, எழுதுவோருக்கான அங்கீகாரமாகவும் இருக்கும்'' என்கிறார் மூர்த்தி.  

மூர்த்தி உள்ளிட்டோரின் எழுத்துப் பணி விக்கிப்பீடியாவை மட்டும் அல்லாமல், அறிவியல் தமிழையும் வளர்ப்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை.

மூர்த்தி பங்களித்துள்ள விக்கிப்பீடியா கட்டுரைகளைக் காண: https://xtools.wmflabs.org/pages/ta.wikipedia.org/%E0%AE%95%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF

கருத்துகள் இல்லை: