வியாழன், 30 டிசம்பர், 2021

ரைட்டர் வெறும் எழுத்தர் அல்ல, எளியவர்களின் 'ரைட்ஸ்'களுக்காக போராடும் லெஃப்டர்

சமுத்திரக்கனியின் 'ரைட்டர்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு | Samuthirakani  Writer to release on December - hindutamil.in

Vini Sharpana  : 'ரைட்டர்' பார்த்தேன்...
காவல்நிலையத்திற்குள் சிசிடிவி பொருத்தவேண்டும் என்ற உத்தரவை போலீஸார் பின்பற்றுகிறார்களோ இல்லையோ ‘ரைட்டர்’ இயக்குநர்  ஃப்ராங்க்ளின்  ஜேக்கப்  தனது சினிமா கேமராவை சிசிடிவி கேமராபோல் வைத்து காவல்நிலையங்களில் நடக்கும் அவலங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.
'ஆறு பவுன் செயின் காணாம போயிடுச்சுன்னு கம்பளைண்ட் கொடுத்தீங்கல்ல?
 மூணு பவுன் செயின் ஒண்ணு இருக்கு, எழுதிக்கொடுத்துட்டு எடுத்துட்டு போங்க'...
'டிவிஎஸ் ஃபிஃப்டி காணாம போயிடுச்சுன்னு ஒருத்தன் கம்ப்ளைண்ட் கொடுத்தான்.
இந்த டி.வி.எஸ் சேம்பை கொடுத்துவிட்டு  கம்பளைண்ட்டை க்ளோஸ் பண்ணு'...


'கொலை பண்ணிட்டு கத்தியை ஆத்துல வீசிட்டு போயிடுறானுங்க' என்றெல்லாம் காவல்நிலையங்களில் நடக்கும் சம்பவங்களை ஃப்ராங்காக சொல்லியிருக்கிறார் ஃப்ராங்ளின்.  
அதுவும் 'கத்தி  வாங்கியே காசு செலவாகிடும்போல' என்ற வசனத்திற்குப் பின்னால் எத்தனை எத்தனை க்ரைம் சீன்கள் எழுதப்பட்டிருக்கின்றன?
எத்தனை எத்தனை பொய் சாட்சிகள்? எத்தனை எத்தனை பொய்யான ஆவணங்களை காவல்துறையால் சேகரிக்கப்பட்டிருக்கிறது என்பதை துல்லியமாக சொல்லிவிடுகிறது அந்த ஒற்றை வரி வசனம். ஐஏஎஸ், ஐபிஎஸ்களுக்கெல்லாம் சங்கங்கள் இருக்கும்போது, கடைநிலை காவலர்களுக்கு சங்கம் அமைக்க முடியவில்லையே ஏன்  என்கிற பின்னணி அரசியலையும் அலசியிருக்கிறது.
ரைட்டரில்  பிஹெச்டி படித்தது தேவக்குமார் அல்ல. காவல்துறைக் குறித்து இன்ச் பை இன்ச் பிஹெச்டி செய்ததுபோல் காட்சிப்படுத்தியுள்ள இயக்குநர் ஃப்ராங்ளின் ஜேக்கப்தான் ❤

போலீஸ் என்பவர் அதிகார மையத்திற்கு கட்டுப்பட்ட  அடியாள் என்பதை ரைட்டாக சொல்கிறார் ரைட்டர் தங்கராஜ் என்கிற தொங்கராஜ் என்கிற சமுத்திரக்கனி. உள்ளூர் சினிமாவுக்கு நடிக்கச் சொன்னால், உலக சினிமா லெவலில்  நடித்து பிரமிக்க வைக்கிறார்.  
உயரதிகாரியான டி.சிக்கு பயந்து நடுங்கும்  காட்சிகளில் சென்னை திருவெல்லிக்கேணி இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும்  கவிதாபாரதி, ஏட்டு உள்ளிட்டவர்கள்  திரையரங்கையே  திக்குமுக்காட வைக்கிறார்கள்.  திருந்திய திருடனாக வருபவர் சீரியஸாகவேப் பேசி செம கலாய் கலாய்க்கிறார்.
சின்ன ஃப்ளாஷ்பேக் காட்சியில் மட்டுமே வந்தாலும் கெத்தாக நம் மனதில் ஏறி உட்கார்ந்துவிடுகிறார் நடிகை இனியா.  

உயரதிகாரியின் டார்ச்சரால் மர்ம மரணம் அடைந்து இன்றுவரை நீதி கிடைக்காத, டிஎஸ்பி விஷ்ணுபிரியாவை கண்முன் காட்டி கலங்கடித்துவிடுகிறது இனியாவின் காட்சிகள்.  அதிமுக போலீஸ், சி.பி.ஐ போன்றவை மறைத்தாலும் பத்திரிகை ஊடகங்கள், சினிமா ஊடகங்கள் தொடர்ந்து விஷ்ணுபிரியா போன்றவர்களின் மரணங்களை ஆராய்ந்து கொண்டேதான் இருக்கும் ❤ அதுவும், தனது முதல் படத்திலேயே அழுத்தமாக ஆராய்ந்த ஃப்ராங்க்ளின் ஜேக்கப்புக்கு 'ஷேக் ஹேண்டுகள்' ❤
தேவக்குமாராக நடித்துள்ள ஹரிக்கிருஷ்ணன் இயல்பான நடிப்பில்  ‘தெறி’ கிருஷ்ணனாக கவனம் ஈர்க்கிறார். தமிழ் சினிமா கொக்கி போட்டு இழுத்துக்கொள்ளவேண்டிய 'குமார்' இவர்.  

ஆனால், அந்தக்காரணத்துக்காக  அப்பாவி கல்லூரி மாணவர் வெளியிடங்களில் ரகசியமாக அடைத்து வைக்கப்பட்டு, பொய்வழக்கு போடப்பட்டு, அப்படி ஆகப்போகிறார் என்பது ஊடகங்களுக்குத் தெரிந்தும் அது தடுக்கப்படவில்லை என்று காண்பிக்கப்பட்டிருக்கும் இடத்தில் மட்டும்  ‘ரைட்டர்’ கொஞ்சம்  ‘ராங்கர்’  ஆகிவிட்டாரோ என்று யோசிக்கத் தோன்றுகிறது.
இயக்குநர் சுப்பிரமணிய சிவாவா அது? 'சூப்பர்'மணிய சிவா. நம்மையும் தேம்பி அழவைத்து விடுகிறார். மாணவர் தேவக்குமாரின்  ஃப்ளாஷ்பேக் காட்சிகள் கொஞ்சம் நீளமாக இருந்தாலும்  “படிச்சா மேலத்தெருவுக்கு வருவியோ இல்லையோ… மேல வரலாம்”  போன்ற வசனங்களால்  ‘நீலம்’ ஆக வந்திருப்பதற்கு தயாரிப்பாளர்
பா. ரஞ்சித்திற்கு  பவர்ஃபுல் பாராட்டுகள் ❤
'ரைட்டர்' வெறும் எழுத்தர் அல்ல,  எளியவர்களின் 'ரைட்ஸ்'களுக்காக போராடும் 'லெஃப்டர்

கருத்துகள் இல்லை: