புதன், 29 டிசம்பர், 2021

ஆ.ராசா: வன உரிமைச் சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும்

 மின்னம்பலம் :  “வன உரிமைச் சட்டம் 2006 முழுமையாக நடைமுறைக்கு வரும். வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதில் உள்ள பிரச்சினைகள் களையப்படும்” என்று நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா உறுதியளித்துள்ளார்.
பழங்குடி மக்களுக்கு வனத்தின் மீதான உரிமையை மீட்டெடுக்கும் வகையில் கடந்த 2006ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தமிழகத்தில் இந்தச் சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என பழங்குடி மக்களும், பழங்குடி மக்கள் நலன் செயற்பாட்டாளர்களும் புகார் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகையில் 2006 வன உரிமைச் சட்டம் மீதான ஆலோசனைக் கூட்டம் நேற்று (டிசம்பர் 28) நடைபெற்றது. நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ராசா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தமிழக வனத் துறை அமைச்சர் ராமசந்திரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் கயில்விழி செல்வராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, ஊட்டி எம்.எல்.ஏ கணேஷ், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நீலகிரி, கோவை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பிரதிநிதிகளும் வரவழைக்கப்பட்டனர். 2006 வன உரிமைச் சட்டத்தின் சாராம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதோடு தங்களுக்கு இருக்கும் இன்னல்களை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பழங்குடி மக்கள் புகார்களாகத் தெரிவித்தனர்.

நீண்ட நேரம் நடைபெற்ற இந்த விவாதத்துக்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, “வன உரிமைச் சட்டம் இயற்றுவது குறித்தும், அதில் உள்ள இடர்பாடுகள், அதனை எப்படி சரி செய்வது, நிறைவேற்றுவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. வன உரிமைச் சட்டம் 2006 முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய தனிக் குழுவோ அல்லது அதிகாரிகள் நியமனம் செய்யவோ தமிழக முதல்வரிடம் பரிந்துரைக்கப்படும்.

வனத் துறை மற்றும் பழங்குடியினர் நலத் துறை இணைந்து பழங்குடியின மக்களுக்கு வன உரிமைக்கான அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பழங்குடி மக்கள் பயன்படுத்தும் நிலங்களை அளவீடு செய்வது குறித்தும் உறுதிப்படுத்தப்படும்.

மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, இது தொடர்பாக எடுக்கும் முடிவுகளை உடனுக்குடன் தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிறார். பழங்குடியின மக்களின் முக்கிய கோரிக்கை நில உரிமைதான். எனவே, முறையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதில் பிரச்சினைகள் உள்ளன.

அவற்றை களையவே இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. பழங்குடியின இன மக்களுக்கு 2006 வன உரிமைச் சட்டத்தில் கூறியுள்ள சலுகைகள் வழங்கப்படவில்லை என கூறுகின்றனர். இதனை களையவே வனத் துறை, பழங்குடியினர் நலத் துறை இணைந்து செயல்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இந்த ஆய்வுக் கூட்டம் குறித்து பேசிய பழங்குடி மக்கள், “வன உரிமைச் சட்டம் 2006இல் குறிப்பிட்டிருக்கும் உரிமைகள் எங்களுக்கு முறையாக கிடைப்பதில்லை. வனத்திலும் எங்களின் வாழ்விடத்திலும் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் எடுத்து கூறியிருக்கிறோம். நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சொல்லியிருக்கிறார்கள். இனியாவது நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் ஊருக்குத் திரும்புகிறோம்” என்றனர்.

-ராஜ்

கருத்துகள் இல்லை: