Arsath Kan - Oneindia Tamil : கோவை: திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாம்கள் நடைபெறத் தொடங்கியுள்ள நிலையில், அக்கட்சியின் மகளிரணி மற்றும் இளைஞர் அணிக்கு இடையே கடும் போட்டி உருவாகியிருக்கிறது.
திமுக இளைஞரணியில் இளம்பெண்களை புதிய உறுப்பினர்களாக இணைக்க உதயநிதி ஸ்டாலின் முயற்சித்து வரும் வேளையில், கனிமொழியும் மகளிரணியில் இளம்பெண்களை புதிய உறுப்பினர்களாக இணைக்க தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கிறார்.
இதனால் இந்த விவகாரம் தான் திமுக மேல்மட்ட நிர்வாகிகள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.அண்மையில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ஆளுங்கட்சி என்பதற்காக நாம் அஜாக்கிரதையாக இருந்துவிடக் கூடாது என்றும், புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து அது தொடர்பான பணிகளில் மாவட்டச் செயலாளர்கள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் திமுக இளைஞரணியில் இளம்பெண்களை உறுப்பினர்களாக இணைக்கும் நிகழ்ச்சியை அமைச்சர் செந்தில்பாலாஜி கோவையில் ஏற்பாடு செய்து அதை நடத்தியும் முடித்துவிட்டார். மகளிரணி என தனி அணி இருக்கிற போது இளைஞரணியில் எதற்கு இளம்பெண்கள் என கனிமொழி ஏற்கனவே ஆட்சேபனை தெரிவித்து வரும் நிலையில், இன்றைய நிகழ்வு கனிமொழிக்கு கடும் கோபத்தையும் அப்செட்டையும் ஏற்படுத்தியதாம்.
இது தொடர்பாக தனக்கு நெருக்கமான சீனியர் நிர்வாகிகளிடம் பேசிய கனிமொழி, அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான ஆத்திரத்தை கொட்டித் தீர்த்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கோவையில் செந்தில்பாலாஜி நடத்திய நிகழ்ச்சி தொடங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக, கனிமொழி விடுத்த அறிக்கையில் 18 வயதிலிருந்து 30 வயதுடைய பெண்களை மகளிர் அணியில் புதிய உறுப்பினர்களாக இணைக்க நிர்வாகிகள் இன்றே பணியை தொடங்க வேண்டும் என வேகம் காட்டியிருந்தார்.
இதுமட்டுமல்லாமல் மகளிர் அணியில் புதிதாக இளம்பெண்களை இணைப்பது குறித்த ரிப்போர்டை நாள்தோறும் தன்னிடம் மகளிர் அணி நிர்வாகிகள் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருக்கிறார். இதன் மூலம் திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி இடையேயான உரசலுக்கு கோவை நிகழ்ச்சி பிள்ளையார் சுழி போட்டிருப்பதாக கூறப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக