திங்கள், 27 டிசம்பர், 2021

திருமண போர்வையில் இலங்கைக்குள் ஊடுறுவும் தீவிரவாதிகள்.” – வெளிநாட்டவர் திருமணத்திற்கு பாதுகாப்பு அமைச்சு கட்டுப்பாடு

thesamnet.co.uk -  அருண்மொழி :   சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் வாழ்க்கைத் துணை விசாவில் இங்கு வசிப்பதற்கான அறிக்கைகள் அதிகரித்து வருவதாலேயே வெளிநாட்டுப் பிரஜையை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம் என அறிவிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறியுள்ளது.
இலங்கைப் பிரஜைகள் வெளிநாட்டவர்களைத் திருமணம் செய்துகொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி ஏன் கோரப்பட்டது என சமூக ஊடகங்களில் பெருகிய விமர்சனங்களைத் தொடர்ந்து, அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இந்த விடயம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கீதாநாத் காசிலிங்கம், வெளிநாட்டுப் பிரஜைகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த சட்டவிரோதச் செயல்களில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடிகளும் உள்ளடங்குவதாக பாதுகாப்பு அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் ஏழைப் பெண்களே இத்தகைய திருமணங்களுக்கு இலக்காகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் குறித்து ஆராய்ந்த ஆணைக்குழுவின் அறிக்கையில்கூட, தீவிரவாதிகள் இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்க வெளிநாட்டவர்கள் உள்ளூர் மக்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, உள்ளூர்வாசி ஒரு வெளிநாட்டவரைத் திருமணம் செய்ய விரும்பினால், ஒரு பாதுகாப்பு ஆவணத்தை பதிவாளர் ஜெனரல் திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் அறிவித்துள்ளார்.

மேலும் அவர் பூஜ்ஜிய குற்றப் பதிவுக்கான அனுமதியைப் பெற பாதுகாப்பிற்கு ஒப்படைப்பார் என்பதோடு, சுகாதாரச் சான்றிதழையும் ஒப்படைக்க வேண்டும் என்றும் பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அனுமதி கிடைத்ததும் பதிவாளர் உள்ளூர் தரப்பினருக்குத் தெரிவிப்பார் என்றும் அதன் பின்னர் திருமணம் நடக்கலாம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த நடைமுறை பல நாடுகளில் பின்பற்றப்படுவதோடு, இது தேசிய பாதுகாப்பையும் உள்ளூர் குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதாகும் எனவும் பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் தனது ருவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: