கலைஞர் செய்திகள் : "இந்த நேரத்தில் இந்த விழா தேவைதானா என்றார்கள்.. ஆனால்..” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கொரோனா பரவல் அதிகரித்து வரும் நேரத்தில், இப்படியான விழா தேவைதானா என நானும் யோசித்தேன்.." எனப் பேசினார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கொரோனா பரவல் அதிகரித்து வரும் நேரத்தில், இப்படியான விழா தேவைதானா என நானும் யோசித்தேன்.." எனப் பேசினார்.
தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் இதில் திரள்வார்கள் என்ற எண்ணத்தில்தான் இந்த நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டோம். ஆனால், இன்றைக்கு கொரோனாவின் தாக்கத்தை தமிழகத்தை பொறுத்தவரை கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும் இன்றைக்கு வேறு பெயரில் அந்தத் தொற்று வரக்கூடிய சூழலில் ஆங்காங்கே பல்வேறு மாநிலங்களில், பல்வேறு நாடுகளில் அது பெரிய அளவிற்கு உச்சத்தை தொட்டுக் கொண்டிருந்தாலும், நம் தமிழகத்திற்கு அதுபோன்ற நிலைமை வந்துவிடக்கூடாது என்பதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு அமைச்சர் கே.என்.நேரு அவர்களையும், அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களையும் நான் சென்னைக்கு அழைத்து இப்போது நிகழ்ச்சி தேவையா?
அந்த நிகழ்ச்சி நடத்தும்போது அதனால் தொற்று ஏற்பட்டுவிடுமா என்று அதிகாரிகளுடன் கலந்துபேசி அதற்குப்பிறகு மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் கலந்துபேசி, இந்த தஞ்சையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு ஏறக்குறைய 22,000 பயனாளிகள் பயன்பெறக்கூடிய வகையில் இந்த நிகழ்ச்சியை நடத்தப்போகிறோம் என்று சொன்னார்கள்.
அப்படியென்றால், லட்சத்தை தாண்டக்கூடிய அளவிற்குத்தான் பொதுமக்கள் இங்கு வருவார்கள். அதற்கேற்ற வகையில்தான் பந்தலும் அமைக்கப்பட்டது. ஆனால், இப்போது தொற்று ஆங்காங்கே தலைதூக்க தொடங்கியுள்ளதால், தயவு கூர்ந்து நிகழ்ச்சியை ஒத்திவைக்கலாமா, இரத்து செய்யலாமா என்று யோசித்தபோது, கொரோனாவின் தாக்கத்தைக் குறைக்க அரசு விதிக்கும் நிபந்தனைகளை கடைபிடிக்கக் காத்திருக்கிறோம், எனவே, 5000 நபர்களுக்கு மட்டும்தான் வழங்கி நிகழ்ச்சியை நடத்தி முடிக்கலாம் என்று திட்டமிட்டு அதற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியை நாம் இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இதைக் குறிப்பிட்டுச் சொல்வதற்குக் காரணம், ஏறக்குறைய 22,000 நபர்களுக்கு நாம் தகவல் சொல்லியிருக்கிறோம். அவர்கள் ஏமாற்றமடைய வேண்டாம். இங்கே 5,000 பயனாளிகளுக்குத் தான் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது. மீதமுள்ள பயனாளிகளுக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நம்முடைய ஆட்சித் தலைவர் மூலம் நியமிக்கப்படக்கூடிய சில அதிகாரிகள் மூலம் உங்கள் வீடுதேடி வந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்பதை நான் உறுதியோடு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.” எனத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக