திங்கள், 27 டிசம்பர், 2021

சக்திதான் என்னை இயக்குகிறது: திடீர் சாமியார் அன்னபூரணி ஆவேசம்!

 மின்னம்பலம் : கடந்த மூன்று தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருபவர் அன்னபூரணி. இன்னொருவரின் கணவருக்காக லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் தொலைக்காட்சி விவாதத்தில் சண்டை போட்ட இவர் இன்று அருள்வாக்குத் தரும் அன்னபூரணியாம்.
இவரது சில வீடியோக்கள் பாலியல் வழக்கில் சிக்கிய நித்தியானந்தாவுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு உள்ளது. நித்தி தன்னை ஆதிபரமேஸ்வரன் என கூறிக்கொள்ளும் நிலையில், அன்னபூரணி தன்னை ஆதிபராசக்தி என்று சொல்கிறார்.
அன்னபூரணியின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், ஜனவரி 1ஆம் தேதி அவர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்குச் செங்கல்பட்டு போலீசார் தடை விதித்ததாகவும், அவரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் பிகைண்ட் வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ள போலி சாமியார் அன்னபூரணி, “ எனக்குப் பிறவி கொடுக்கப்பட்டதே இந்த வேலைக்காகத் தான், நான் எதற்காகவும் மறைந்து வாழ வேண்டும் என்ற அவசியமில்லை.

சொல்வதெல்லாம் உண்மையில் வந்ததை பற்றித்தானே கேட்கிறீர்கள். எனக்கும் அரசுக்கும்(வேறு ஒருவரின் கணவர்) பிறவி கொடுக்கப்பட்டதே ஆன்மிகத்துக்காகத்தான். இந்த பிரபஞ்சத்தையே இயக்குகிற சக்திதான் எல்லோரையும் இயக்கி கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் இந்த சக்திதான் எல்லோரையும் இருக்கிறது என உணரவைக்கும். இந்த சக்திதான் எங்கள் உடம்பிலிருந்து இயக்கியது. இந்த சக்திதான் எங்களை இணைத்தது. எங்களைப் பற்றிய வதந்திகள் பரவி கொண்டிருக்கிறது” என்றார்.

அப்போது அவரிடம் ஆன்மிகத்துக்கு முந்தைய வாழ்க்கை குறித்து நெறியாளர் கேள்வி எழுப்பியதும், “ என்னைத் தனிப்பட்ட உடலாகத்தான் பாக்குறீங்க... அதனால் தான் எங்கே பிறந்தீங்க, என்ன பண்றீங்கனு, என்ன செய்யறனு கேக்குறீங்க... நான்தான் சொல்றேனே சக்தியாக இருக்கேன்... சக்தியாக இருக்கேனு... சாதாரணமாக நினைச்சிகிட்டு இருக்கீங்களா... உங்களுக்கெல்லாம் புரியவில்லை” என்று ஆவேசமாகக் கத்துகிறார் இந்த திடீர் ஆதிபராசக்தி.

தொடர்ந்து பேசிய அவர், “இயற்கை ஒலி என்ற ஆன்மிக பயிற்சியை எடுத்தோம். அப்போது இந்த சக்திதான் பயிற்சி கொடுத்தது. அரசின் உடலில் இயற்கை ஒலி என்கிற ஆன்மிக பயிற்சி கொடுத்துக்கொண்டு இருந்தோம். 2019 வரை இந்த ஆன்மிக பயிற்சி போய்க்கொண்டிருந்தது. 2019ல் ஒரு காலகட்டத்தில் இரண்டு உடலும் தேவைப்பட்டது. அதனால் இரண்டு உடலில் ஒரு சக்தி செயல்பட்டது. அந்த காலகட்டம் முடிந்ததும், அரசின் உடல் எந்த இயற்கை கொடுத்ததோ அந்த இயற்கையே எடுத்துக்கொண்டது. என்னுடைய உடலிலிருந்து ஆன்மிக பயிற்சியை கொடுத்துக்கொண்டிருந்தேன்” என்று கூறுகிறார்.

மாரடைப்பு ஏற்பட்டு அரசு உயிரிழந்ததாகத் தெரிவித்த அவர், இந்த சமூக சம்பிரதாயப்படி அவரது உடலுக்கு அனைத்து நடைமுறைகளும் செய்யப்பட்டன. அரசின் உடல்தான் இறந்ததே தவிர, உயிர் இறக்கவில்லை என்கிறார்.

கடைசி வரை நடந்த அனைத்துக்கும் சக்தி மட்டுமேதான் காரணம் என கூறும் அவர் “ சக்தி என்பது ஒரு உணர்வு பரிமாற்றம். என்னை உணர்ந்த என் குழந்தைகளையும் கொண்டாட்டத்தின் உச்சத்தில்தான் வைத்துள்ளேன். இவ்வளவு வதந்திகள் போய் கொண்டிருக்கிறது. இப்போதும் கொண்டாட்டத்தில் தான் இருக்கிறேன். எந்த மதங்களையும் நான் இழிவுபடுத்தவில்லை. யாரையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கமும் எனக்கில்லை. நான் எதற்காகவும் நடிக்கவில்லை. எனக்கு பிடித்திருப்பதால் அலங்காரம் செய்து கொள்கிறேன். இது என்னுடைய இயல்பு. காவியை கட்டிக்கொண்டு ருத்ராட்சம் அணிந்து வேடமிடுவது ஆன்மிகம் அல்ல. அது வேஷம். என்னை எது வழிநடத்துகிறதோ, அதுவழியில் சென்றுகொண்டிருக்கிறேன். என்னை யாரும் தேடவும் இல்லை, நான் தலைமறைவாகவும் இல்லை. நான் சாமியார் வேஷம் போட்டு பணம் சம்பாதிக்க வரவில்லை” என்றும் கூறுகிறார்.

இந்நிலையில் அன்னபூரணி இந்த பேட்டியில் ஆவேசமாக கத்தும் வீடியோவை எடிட் செய்து சமூக வலைதளங்களில் பகிரும் நெட்டிசன்கள், ‘இது என்ன நடிப்பு சாமி’ எனவும் விமர்சித்து வருகின்றனர்.

-பிரியா

கருத்துகள் இல்லை: