Prasanna Venkatesh - GoodReturns : இந்தியாவில் இருந்து கடந்த 5 வருடத்தில் சுமார் 6 லட்சம் பேர் வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற காரணத்தால் இந்தியக் குடியுரிமையை விடுத்துள்ளனர்.
அப்படிக் குடியுரிமை வேண்டாம் என அறிவித்துள்ள இந்திய மக்களில் சுமார் 40 சதவீதம் பேர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து உள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்தாக ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகள் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.
வர்த்தகம், சிறப்பான வாழ்க்கைத் தரம், கல்வி, பிள்ளைகளின் எதிர்காலம், குறைவான வரி, கொண்டாட்டம் எனப் பல காரணத்திற்காக இந்தியர்கள் தற்போது வெளிநாடுகளுக்குக் குடியுரிமை பெற்று வருகின்றனர்.
உலகில் சுமார் 30 நாடுகளில் முதலீட்டு அடிப்படையில் கோல்டன் விசா அளிக்கப்படுகிறது. இத்தகைய விசா அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் உள்ளது. அமெரிக்காவில் விரைவாகக் குடியுரிமை வேண்டும் என விரும்புவோர் EB-5 விசா முறையைத் தேர்வு செய்கிறார்கள்.
கடந்த 5 வருடத்தில் இந்திய குடியுரிமை வேண்டாம் என அறிவித்துள்ள 6 லட்சம் பேருக்கும் இந்திய பாஸ்போர்ட்-ஐ அரசிடம் திரும்ப ஒப்படைத்துள்ளனர். அதாவது இந்த 6 லட்சம் பேருக்கும் இரட்டை குடியுரிமை கிடையாது. ஆனால் இவர்களால் ஓவர்சீஸ் சிட்டிசன் ஆப் இந்தியா கார்ட்-ஐ பெற்று இந்தியாவில் தங்கவும், வேலை பார்க்கவும், வர்த்தகம் செய்யவும் முடியும்.
இப்படி இந்தியாவில் இருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை 2017 முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் முக்கியமாக 2019ஆம் ஆண்டில் சுமார் 1,44,017 பேர் இந்தியக் குடியுரிமையைக் கைவிட அரசிடம் கோரிக்கை வைத்தனர். 2020ல் இதன் எண்ணிக்கை 85,248 ஆகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக