சனி, 3 ஜூலை, 2021

சசிகலா சுற்று பயணம் அறிவிப்பு! ஜூலை 5 ஆம் தேதிக்குப் பின்பு

மின்னம்பலம் :ஜூலை 5 ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்ய இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
ஜூன் 1 ஆம் தேதி மின்னம்பலத்தில், தொண்டர்கள் சந்திப்புப் பயணம்; தயாராகும் சசிகலா என்று செய்தி வெளியிட்டிருந்தோம். அச்செய்தியை ஜூலை 2 ஆம் தேதி தன் வாயாலேயே உறுதிப்படுத்தியிருக்கிறார் சசிகலா.
அந்த செய்தியில், “விரைவில் ஜூலையில் அல்லது ஆகஸ்டு மாதம் தொண்டர்களை சந்திப்பதற்காக சசிகலா தமிழ்நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதிமுகவின் பிரச்சினையை அதிமுகவே பார்த்துக்கொள்ளட்டும், அதில் வேறு தேசிய கட்சிகளின் தலையீடு இருக்கக் கூடாது என்பதில் சசிகலா தெளிவாக இருக்கிறார். எனவே அதற்கான அடிப்படை வேலைகள் நடந்து வருகின்றன.



விரைவில் நிர்வாகிகளை அல்ல தொண்டர்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் . அந்த கணக்கின்படி கொரோனா பாதிப்பு நீங்கி ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் முதன் முதலில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று வணங்கிவிட்டு, தொண்டர்கள் சந்திப்புப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் சசிகலா”என்று குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில் ஜூலை 2 ஆம் தேதி அமமுக பிரமுகரும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டவருமான உமாதேவனோடு அலைபேசியில் பேசும் சசிகலா,

“நல்லா இருக்கீங்களா உமாதேவன். தடுப்பூசி போட்டீங்களா?”என்றே எடுத்த எடுப்பில் கேட்கிறார். ‘நான் நல்ல ஆரோக்கியமா இருக்கேம்மா...'’ என்று தடுப்பூசி போடவில்லை என்பதை உமாதேவன் சொல்ல, ‘முதல்ல தடுப்பூசி போட்டுக்கங்க. கொரோனா எப்படி வருது என்னனு சொல்ல முடியலை. அதனால தடுப்பூசி போட்டுக்கங்க’என்று முதலில் கொரோனா தடுப்பூசி பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார் சசிகலா.

அதன் பின் தொடர்ந்து பேசிய சசிகலா, “5 ஆம் தேதி வரைக்கும் லாக் டவுன் சொல்லியிருக்காங்க. அது என்னானு பாத்துக்கிட்டு, அம்மா சமாதிக்கு போயிட்டு வந்துடறேன். நான்கு வருஷமா எல்லாரும் எனக்கு பொதுச் செயலாளர்னு சொல்லித்தான் கடிதம் போட்டிருக்காங்க. சென்னைக்கு வந்த பிறகும் எனக்கு கடிதங்கள் வர ஆரம்பிச்சிடுச்சு. அதான் எல்லார்கிட்டையும் பேசிடுவோம்னு பேச ஆரம்பிச்சேன். அது நல்லபடியா போயிட்டிருக்கு. லாக் டவுன் முடிஞ்சதும் சுற்றுப் பயணம் வருவேன். எல்லா இடத்துக்கும் வர்றதா இருக்கேன். தொண்டர்கள் பூரா நம்மிடம் இருக்காங்க. அதனால எந்த கவலையும் இல்லை. எல்லாரையும் நான் வந்து பாக்குறேன்” என்று சொல்லியிருக்கிறார் சசிகலா.

இந்த சுற்றுப்பயணம் முடிவானதை அடுத்துதான் இப்போது பேசுகிறவர்களிடத்திலெல்லாம் தடுப்பூசி போட்டுவிட்டீர்களா என்ற கேள்வியை முன் வைக்கிறார் சசிகலா.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: