செவ்வாய், 29 ஜூன், 2021

சொத்து வரியிலிருந்து விலக்கு வேண்டும்’: திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்!

 மின்னம்பலம் : கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் மத்திய மாநில அரசுகள் முதலில் மூடுமாறு உத்தரவிட்டது திரையரங்குகளைத்தான்.
அதன் பின்னரே மால்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மூடப்பட்டு முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது
கொரோனாவையொட்டி நடைமுறையிலிருந்த ஊரடங்கு 2020 இறுதியில் ரத்து செய்யப்பட்டபோது சிறு, குறு தொழில்கள், கார்ப்பரேட் என அனைத்து நிறுவனங்களுக்கும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு வரி, மற்றும் பொருளாதார சலுகைகளை வழங்கியது
ஆனால் தினந்தோறும் வரி வருவாயை ஈட்டித் தரக்கூடிய திரையரங்குகளுக்கு எந்தவொரு சலுகையும் வழங்கப்படவில்லை.



இந்நிலையில், ”ஊரடங்கு முடிவுக்கு வந்து மீண்டும் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்குகிறபோது கடுமையான நிதி நெருக்கடியில் தொழில் மீண்டும் முதலிலிருந்து தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்து,திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் திருச்சி ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 மாதங்களாகத் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. 2020,2021ம் ஆண்டுகளில் மொத்தமாக 8 மாதங்கள்தான் திரையரங்குகள் திறந்திருந்தன. கொரோனா தொற்று பயம் காரணமாக மக்கள் வருகை குறைவாக இருந்ததால் வசூலும் மிகக் குறைவாகவே கிடைத்தது.

இந்த நிலையில் வருடா, வருடம் திரையரங்கு உரிமையாளர்கள் கட்ட வேண்டிய சொத்து வரி மட்டும் அதே அளவில்தான் இருக்கிறது. இந்தக் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தை மனதில் வைத்து தமிழக அரசு தியேட்டர்களுக்கான சொத்து வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

இயங்காத, செயல்படாத, வருவாய் வராத நிலையில் தியேட்டர்காரர்கள் எங்கேயிருந்து வரி கட்டுவார்கள்..? தமிழக அரசு இதை மனதில் வைத்து எங்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டுகிறோம்

தியேட்டர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் லைசென்ஸ் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். வருடா வருடம் தியேட்டர் உரிமத்தைப் புதுப்பிக்கும் நடைமுறையை ரத்து செய்திடவேண்டும்

ஒவ்வொரு ஆண்டும் 6 அரசுத் துறையினரிடம் சான்றிதழ் வாங்கி அதன் பின்பு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்து அதன் பின்பு அவர் எங்களுக்கு அனுமதியை வழங்கி வருகிறார். இது தற்போதைய நடைமுறைப்படி அரசுக்கும், எங்களுக்குமே பெரும் சிரமத்தைத் தந்து வருகிறது. இதனை அரசு முறைப்படுத்த வேண்டும்.

ஏற்கெனவே மாயவரத்தில் இருக்கும் ஒரு திரையரங்கு 13 மாதங்களுக்கு முன்பு உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப்பித்தும் இன்று வரையிலும் அது கிடைக்கவில்லை. இன்னும் பல ஊர்களில் தியேட்டர்காரர்கள் உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப்பிக்கவே இல்லை.

கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு அலுவலகங்கள் முழு வீச்சில் செயல்படாத காரணத்தினாலும், தேவையான ஊழியர்கள் அரசு அலுவலகங்களுக்கு வருகை தந்து பணியாற்றுவதில் சிரமம் உள்ளதாலும் தியேட்டர் அதிபர்கள் உரிமத்தை புதுப்பிக்க முடியாத நிலை தொடர்கதையாக உள்ளது

தற்போது தமிழக அரசு தியேட்டர்களை திறக்கலாம் என்று அனுமதியளித்தாலும்கூட உரிமம் புதுப்பிக்கப்படாததால் பல ஊர்களில் தியேட்டர்களை திறக்க முடியாத நிலையே ஏற்படும். எனவே தமிழ்நாடு அரசு உரிமம் புதுப்பிக்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவரும் வரை அதிலிருந்து தற்காலிகமாவது விதிவிலக்கு வழங்க வேண்டுகிறோம்.

தியேட்டர்கள் இயங்குகிற போது அதனை பராமரிப்பது, பாதுகாப்பது எளிதான காரியமாகும். மூடப்பட்டுள்ள திரையரங்குகளை எந்த வருமானமும் இன்றி இருக்கும் சூழலில் பராமரிப்பு செலவு கூடுதல் சுமையாகும். மேலும் திரையரங்க தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியமாவது வழங்க வேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ளது. எனவே அரசு மற்ற திரைப்பட அமைப்புகளுக்கு வாரியம் அமைத்து அவர்களுக்கு உதவி செய்வதுபோல, தியேட்டர் ஊழியர்களுக்கும், அதனை நம்பி தொழில் செய்துவரும் படப் பிரதிநிதிகளுக்கும் பொதுவான ஒரு வாரியத்தை அமைத்து அவர்களுக்கும் பிறதுறையினருக்கும் வழங்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கும்படி தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வேண்டுகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்

-இராமானுஜம்

கருத்துகள் இல்லை: