செவ்வாய், 29 ஜூன், 2021

மதுரை விமான நிலைய விரிவாக்கம் ! நிதியமைச்சரின் கோரிக்கைக்கு உடன் அனுமதி அளித்த முதலமைச்சர் ஸ்டாலின்

கோரிக்கை

Hemavandhana  - /tamil.oneindia.com :  சென்னை: "நான் 2016-ல் இருந்து எம்எல்ஏவாக இருக்கேன்.. அப்போதிருந்து சொல்லி வருகிறேன்.. ஆனால், முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்றதுமே, என் கோரிக்கைக்கு ஓகே சொல்லிவிட்டார்..
நாங்களும் நேற்றே இதை பற்றி ஆலோசித்தோம்" என்று நிதியமைச்சர் பூரித்து போய் சொல்கிறார்..! செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,
"மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணியில் நீண்ட காலமாக தாமதம் ஏற்பட்டுள்ளது...
இதற்காக 615 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். அரசு புறம்போக்கு நிலம் 150 ஏக்கருக்கு மேல் உள்ளது. மீதி 450 ஏக்கரை மாநில அரசு கையகப்படுத்தி விமான நிலைய நிர்வாகத்திடம் கொடுக்க வேண்டும்.
அதன்பிறகுதான் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள முடியும்.
இப்போது 7,500 அடி நீளமே ரன் வே இருக்கிறது.. விரிவாக்கப் பணிகள் நிறைவு பெற்றால் ரன் வே 12,500 அடி நீளமாக நீட்டிக்கப்படும். இப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் வைத்துள்ளோம்... அவரின் ஆலோசனையில் மாவட்ட ஆட்சியர் அந்தப் பணிகளை மேற்கொள்வார்.



இன்னும் 2 வாரத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடையும். இதற்காக மத்திய அரசிடம் நிதி பெறுவதற்கும், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் விமானத்துறை அமைச்சரிடம் வைத்துள்ளோம்.

தற்போது சிங்கப்பூர் போன்ற ஒருசில நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டாலும், சுங்க விமான நிலையமாக மட்டுமே மதுரை விமான நிலையம் செயல்படுகிறது. அதை முழு அளவில் சர்வதேச விமான நிலையமாக மாற்றினால் இன்னும் கூடுதலாக வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வரும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் விரிவாக்கப் பணிகளை முடித்து, சர்வதேச விமான நிலைய அந்தஸ்தைப் பெற்றால் தென் மாவட்டங்கள் மிகப்பெரிய பலன் அடையும் என்று எதிர்பார்க்கிறோம்'' என்றார்.

இப்படி பேட்டி தந்த உடனேயே, இதுகுறித்த ஆலோசனையிலும் பிடிஆர் ஈடுபட்டார்.. அந்த கூட்டத்தில், மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கேபி கார்த்தி கேயன், விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன், அமைச்சர் பி.மூர்த்தி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இதை ட்வீட்டாகவும் தற்போது பதிவிட்டுள்ளார்.

அந்த ட்வீட்டில்,"MLAவாக பொறுப்பேற்ற 2016 முதல் மதுரை விமான நிலைய விரிவாக்கம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். கிடப்பிலிருந்த பணியை முதல்வர் @MKStalin விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளார். ஓடுதளம் நீட்டிப்பு, NH சுரங்கப்பாதை, சர்வதேச முனையமாக மாற்றுவது குறித்து நேற்று கலந்துரையாடினோம்" என்று பதிவிட்டுள்ளார்.

பிடிஆரின் இந்த அடுத்தடுத்த செயல்பாடுகள் தென்மண்டல மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.. ஒரு கோரிக்கையை வைத்து, அதை உடனடியாக செயல்படுத்தும் நடவடிக்கைகளில் திமுக அரசு இறங்கி வருகிறது.. இந்த விமான நிலையம் விரிவுபடுத்தப்பட்டால், மதுரைக்கு நிறைய பலன்கள் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது..

கடந்த காலங்களில் அதிமுக அரசை பலமுறை கேட்டுக் கொண்டும், இதுசம்பந்தமான எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், முக ஸ்டாலின் இதற்கு ஓகே சொல்லி உள்ளதும், நிலம் கையகப்படுத்தும் பணிகள் 2 வாரங்களிலேயே முடிக்கப்படும் என்று சொல்லி உள்ளதும், தென்னக மக்களுக்கு டபுள் மகிழ்ச்சியை தந்து வருகிறது.

கருத்துகள் இல்லை: