திங்கள், 28 ஜூன், 2021

கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து ஒப்படையுங்கள் : அமைச்சர் சேகர் பாபு

மின்னம்பலம் :கோயிலுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் யாராக இருந்தாலும், தாமாக முன்வந்து நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை, குரோம்பேட்டை நெமிலிச்சேரியில் உள்ள ஆனந்தவள்ளி அகத்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 2.02 ஏக்கர் நிலம் பல ஆண்டுகளுக்கு முன்பு வணிக நோக்கத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. 

இந்த சொத்தை மீட்பதற்காக கடந்த 2017ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஆக்கிரமிப்பை வெளியேற்ற, கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரவு பெறப்பட்டது.


இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் முன்னிலையில் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று(ஜூன் 28) நடைபெற்றது.

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை பார்வையிட்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ” இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கோயில்களின் இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால், அவற்றை அகற்றி கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்ற முதல்வரின் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதுபோன்றுதான், நெமிலிச்சேரியில் அமைந்துள்ள அருள்மிகு அகத்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பை ஒருவர் ஆக்கிரமித்து, அதை கடைகளாக வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டி வந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன், கடந்த 20 நாட்களாக இந்த இடங்களின் அனைத்து விவரங்களையும் சேகரித்து ஆராய்ந்து பார்த்ததில், இந்த இடம் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

பல ஆக்கிரமிப்பு இடங்களை கைப்பற்றுவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து இந்த பணிகள் நடைபெறும். கோயில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள், இது நம்முடைய சொத்தல்ல; இறைவன் சொத்து; என்று எண்ணி தாமாக முன்வந்து இடங்களை ஒப்படைக்க வேண்டும். இன்றோடு சேர்த்து சுமார் 79 ஏக்கர் நிலங்களை இந்து அறநிலையத் துறை கைப்பற்றியுள்ளது” என்று தெரிவித்தார்.

மற்றொரு இடத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “தற்போது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர் மாவட்டங்களில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டும். கொரோனா தொற்று முற்றிலும் குறைந்த மாவட்டங்களில் படிப்படியாக வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்படும்” என்று கூறினார்.

-வினிதா

கருத்துகள் இல்லை: