வெள்ளி, 2 ஜூலை, 2021

எம்ஜியாரின் உளவாளியாக ஜெயலலிதா வீட்டில் குடிபுகுந்த சசிகலா .. வலம்புரி ஜான் வரலாறு ..

எம்.ஜி.ஆர். வீட்டில் சசிகலா:  வலம்புரிஜானுக்கு ’வணக்கம்’  வைக்கும் ஆதரவாளர்கள்!
No photo description available.
 வலம்புரி ஜான் Book

minnambalam :கொரோனா ஊரடங்கு காலத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் தொண்டர்களுடன் பேசி அந்த உரையாடலைப் பதிவு செய்து ஆடியோ அரசியல் என்ற புதிய உத்தியைத் தொடங்கியிருக்கிறார் சசிகலா. தினம் தினம் ஊடகங்களில் பேட்டி, வீடியோ வெளியீடு என்றிருந்தால் கூட சலித்துப் போய்விடும். ஆனால் ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதிலும் இருக்கும் பல்வேறு தொண்டர்களிடம் பேசி அதை, சசிகலாவின் தரப்பில் இருந்தே பதிவு செய்கிறார்கள்.(உரையாடலில் சசிகலாவின் குரல் எதிர்முனைத் தொண்டரின் குரலை விட தெளிவாகக் கேட்கிறது). இதை எதிர்பாராத எடப்பாடி பழனிசாமி, ‘ஆயிரம் பேரோடு பேசினாலும் பரவாயில்லை சசிகலாவால் ஒன்றும் செய்ய முடியாது’ என்கிறார். ஆனாலும் உள்ளுக்குள் சசிகலா என்ட்ரி பற்றி சீரியசாக விவாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இந்த நிலையில்தான் ஜூலை 1 ஆம் தேதி சசிகலா தரப்பு வெளியிட்ட ஆடியோக்களில் தூத்துக்குடி ஹென்றிதாஸ் என்ற பழைய அதிமுக தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

’அம்மா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிச்சப்ப நான் கருப்பசாமி பாண்டியன் எல்லாம் போயஸ் தோட்டத்து வெளிய கூடியிருக்கோம். தொண்டர்கள் நிறைய பேரு கூடியிருக்காங்க. அப்ப நீங்க மன்னார்குடி போயிருக்கீங்கனு சொன்னாங்க’ என்றதும், சசிகலா, ‘அப்பதான் நான் ஊருக்கு போயிருந்தேன். இது மாதிரி தகவல் கிடைச்சதும் உடனே புறப்பட்டு வந்துட்டேன்’ என்கிறார்.

அப்போது ஹென்றிதாஸ், ‘அம்மாவே அரசியலில் இருந்து விலகினப்ப அவங்களை மறுபடியும் அரசியலுக்குள்ள கொண்டுவந்த சாமர்த்தியமான தலைவிம்மா நீங்க. உங்களுக்கு எவ்வளவோ பேரு துரோகம் செஞ்சிருந்தாலும் இன்னிக்கு வரைக்கும் உங்கள்ட்டேர்ந்து உஷ்ணமான வார்த்தைகள் எதுவுமே வரலைம்மா..’ என்றதும் அதற்கு சசிகலா அளித்த பதில்தான் வைரலாகிவிட்டது.

“தலைவர் அப்படித்தான் இருக்கணும்னு சொல்லுவாரு. தலைவரோடயும் நான் சேர்ந்து பயணிச்சிருக்கேன். அது ரொம்ப பேருக்குத் தெரியாது. அப்ப நிறைய விசயங்களை தலைவரோட பேசும்போது கட்சி விசயமா நிறைய கருத்துகளை எல்லாம் என்கிட்ட கேட்டிருக்காரு. அப்ப கூட நான் ரொம்ப பொறுமையா, ‘இப்படி செஞ்சா நல்லா இருக்கும் தலைவரே... அப்படி செஞ்சா நல்லா இருக்கும் தலைவரேனு சொல்லுவேன். அப்படியே இருந்து பழகிட்டேன்’ என்று பதில் அளிக்கிறார் சசிகலா. தலைவர் என்று சசிகலா குறிப்பிட்டது அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆரைத்தான்.

இதை அடிப்படையாக வைத்து அரசியல் களத்தில் விவாதங்கள் நடக்கின்றன. எம்.ஜி.ஆருக்கு சசிகலா ஆலோசனை சொன்னாரா? நல்ல வேளை அண்ணாவுக்கும் ஆலோசனை சொன்னதாக சொல்லவில்லையே என்று முன்னாள் அமைச்சரும் சசிகலாவை தாக்குவதில் எக்ஸ்பர்ட்டுமான ஜெயக்குமார் கிண்டல் செய்திருக்கிறார். இப்போது வரை சமூக தளங்களில் எம்.ஜி.ஆருக்கே ஆலோசனை சொன்ன சசிகலா பற்றித்தான் பேச்சு.

இந்த நிலையில்தான் சசிகலா ஆதரவாளர்கள் வரலாற்றைத் தேடிப் பிடித்து வலம்புரிஜானை பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆரால் ஜெயலலிதாவோடு ராஜ்யசபாவுக்கு அனுப்பப்பட்ட பத்திரிகையாளரும் எழுத்தாளருமான வலம்புரி ஜான் தனது அரசியல் அனுபவங்களை வணக்கம் என்ற பெயரில் அன்றைய நக்கீரன் இதழில் தொடராக எழுதினார். அதில் பல இடங்களில் சசிகலாவை கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆனால் எம்.ஜி.ஆரின் ராமவாரம் தோட்டத்தில் சசிகலாவைப் பார்த்ததாகவும் சில விஷயங்களை வலம்புரி ஜான் அன்று எழுத, இப்போது அதை கையிலெடுத்துப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் சசிகலா ஆதரவாளர்கள்.

வணக்கம் புத்தகத்தில் வார்த்தை சித்தர் வலம்புரிஜான், “ போயஸ் தோட்டத்தில் நான் பார்த்த சசிகலாவை தியாராய நகர் அலுவலகத்திலும் சில வேளை எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திலும் நான் பார்த்திருக்கிறேன். வி.என்.ஜானகி, ஜெயலலிதா என்கிற இரண்டு வலிமை வாய்ந்த பெண்களுக்கு மத்தியில் ஒரு பத்திரிகை ஆசிரியராக பன்னிரண்டு ஆண்டுகள் காலம் தள்ளிய எனது சாதனையே உலக மகாசாதனை என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எம்.ஜி.ஆருக்குத் தெரியாமல் ஜெயலலிதாவையும், ஜெயலலிதாவிற்குத் தெரியாமல் எம்.ஜி.ஆரையும் கண்காணித்த சசிகலா வரலாற்றின் வணக்கத்திற்கே உரியவர்.

ஜெயலலிதாவைப் பொறுத்தமட்டில் இதுதான் நடந்திருக்கும் என்று எம்ஜிஆர். நம்புகிறவைகளை ஓங்கிச் சொல்லுகிற வேலையைக் கனகச்சிதமாகச் செய்து வந்தார் சசிகலா.

அந்தநாளில் அமைச்சர்களாக இருந்த திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திருச்சி சௌந்தர்ராஜன் போன்றோர்களிடம் ஜெயலலிதாவின் தூதுவராக சசிகலா செல்வதுண்டு. காரணம் இவர்கள் மூவரும்தான் ஜெயலலிதா சொன்னவைகளையும், ஜெயலலிதா சொன்னதாக சசிகலா சொன்னவற்றையும் செய்து கொடுத்தார்கள்.

சசிகலா, நடராசன் இரண்டு பேர்களது உடம்பிலும் மொகலாய இரத்தமே ஓடிக் கொண்டிருக்கிறது. இவர்கள் மொகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்திருந்தால், ஆங்கிலேய ஆட்சியையே வரவிடாமல் செய்திருப்பார்கள் அவ்வளவு சாமர்த்தியசாலிகள்.

இப்போதும்கூட எங்களில் சிலபேர் அவரது தயவால் தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தனது மனைவியின் மூலமாக நடராசன் தமிழ்நாட்டையே ஆண்டு பரிபாலித்து வருகிறார். இந்த சசிகலா, எம்.ஜி.ஆர். ஆளா? ஜெயலலிதா ஆளா? என்று கேட்டிருந்தேன். சசிகலா எம்.ஜி.ஆர். ஆளுமல்ல; ஜெயலலிதாவின் ஆளுமல்ல. சசிகலா சசிகலாவின் ஆள்.

நான் கீழே அவருக்காகக் காத்திருந்த போது வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பிரபாகரன் ஏற்கனவே அங்கே இருந்தார். அவர் ஏதோ ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார். என்னவென்று கேட்டபோது தலைவரிடம் ஏதோ கேட்க வந்திருப்பதாகவும், அந்த வெற்றிக்காக பிரார்த்திப்பதாகவும் சொன்னார். கொஞ்ச நேரத்தில் மஞ்சள் புடவையில் சசிகலா இறங்கினார். எதிர்பாராமல் சசிகலாவை எம்.ஜி.ஆர். தோட்டத்தில் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

எம்.ஜி.ஆரிடத்திலே சென்று சசிகலாவால் உங்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் சரிவு வரவே வரும் என்று எடுத்துச் சொன்னேன். அவரோ நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இது அவர் பொதுவாக சொல்லுவது என்றுதான் முதலில் நினைத்தேன்.

ஜெயலலிதா முதலமைச்சராகி ஏறத்தாழ 4 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராகவே தொடர்ந்து விட்ட பிறகு, நடராசனோ, சசிகலாவோ தமிழ்நாட்டின் முதல்வர்களாக ஆகிவிடமாட்டார்கள் என்று சொல்லுவதற்கு இல்லை. இதை எழுதுகிறவன் விரக்தியால் எழுதவில்லை. விபரத்தோடுதான் எழுதுகிறேன்” என்று சசிகலாவை பற்றி வலம்புரி ஜான் அன்று எழுதியதை இன்று சமூகதளங்களில் எடுத்து பகிரத் தொடங்கியிருக்கிறார்கள் சசிகலா ஆதரவாளர்கள்.

2017 ஆம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஜனவரி 17 ஆம் தேதி எம்.ஜிஆர். பிறந்தநாளன்று சசிகலா ராமாவரம் தோட்டத்துக்கு சென்று புதுப்பிக்கப்பட்ட சிலையைத் திறந்து வைத்தார். ஜெயலலிதா நெடுங்காலமாக ராமாவரம் தோட்டத்துக்கு செல்லாத நிலையில் சசிகலா எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு சென்றது அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் இப்போது சசிகலா, தான் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர் மட்டுமல்ல, எம்.ஜி.ஆருக்கே அறிமுகமானவர்தான் என்ற கருத்தை வலுப்படுத்தும் வகையில் ஹென்றிதாஸிடம் இந்த விஷயத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். இது தொண்டர்களிடையே தொடர் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: