ஞாயிறு, 6 ஜூன், 2021

மலையாளம் பேசக்கூடாது என்ற சுற்றறிக்கையை மீளபெற்றது டெல்லி மருத்துவமனை

 மாலைமலர் : அனைத்து செவிலியர்களும் பணியில் இருக்கும்போது தொடர்பு மொழியாக இந்தி அல்லது ஆங்கிலத்தையே பயன்படுத்தவேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
மலையாளம் பேசக்கூடாது என்ற சுற்றறிக்கையை வாபஸ் பெற்றது டெல்லி மருத்துவமனை
டெல்லியில் உள்ள கோவிந்த் பல்லப் பந்த் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) பணியாற்றும் செவிலியர்கள் மலையாளத்தில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த மருத்துவமனையில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர்கள் அதிக அளவில் பணியாற்றுகின்றனர். அவர்கள் மலையாளம் தெரியாத சக ஊழியர்கள் மற்றும் நோயாளிகளிடம் மலையாளத்தில் பேசுவதாகவும், அது நிறைய சிரமங்களை ஏற்படுத்துவதாகவும் செவிலியர் கண்காணிப்பாளருக்கு புகார் சென்றுள்ளது.



இதனைத் தொடர்ந்து செவிலியர் கண்காணிப்பாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் “பெரும்பாலான நோயாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு மலையாளம் தெரியாதபோது அந்த மொழியில் பேசுவது உதவியற்ற நிலையையும், சிரமங்களையும் ஏற்படுத்துகிறது. எனவே அனைத்து செவிலியர்களும் பணியில் இருக்கும்போது தொடர்பு மொழியாக இந்தி அல்லது ஆங்கிலத்தையே பயன்படுத்தவேண்டும். அப்படி இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என கூறியிருந்தார்.

இந்த சுற்றறிக்கை சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இந்த சுற்றறிக்கைக்கு செவிலியர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

காங்கிரஸ் கட்சியின் வயநாடு எம்.பி. ராகுல் காந்தி, திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் ஆகியோர் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிக்கை வெளியிட்டனர். சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து அந்த சுற்றறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் இன்று வாபஸ் பெற்றுள்ளது

கருத்துகள் இல்லை: