செவ்வாய், 8 ஜூன், 2021

ஓவியங்களின் அரசன் இளையராஜாவிற்கு ஓர் அஞ்சலி.

May be art of 2 people and people standing

விகடன்  : தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜாவிற்கு ஓர் அஞ்சலி.
புகைப்படமா, ஓவியமா என எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா. ஆனந்த விகடனில் 2010 முதல் வெளிவரத் தொடங்கிய இவரது ஓவியங்கள் உலகம் முழுக்கப் புகழ்பெற்றன. பல்வேறு விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற்றிருக்கும் ஓவியர் இளையராஜா நேற்று நள்ளிரவு 12 மணியளில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருக்கு வயது 43.
கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் எனும் கிராமத்தில் பிறந்தவர் இளையராஜா. ஐந்து அண்ணன்கள், ஐந்து அக்காக்கள் என மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்த கடைசி மகன். கடந்த வாரம் அக்கா மகளின் திருமணத்துக்காக கும்பகோணத்துக்குப்போனவர், சில நாட்களுக்கு முன்னர் சென்னை திரும்பியிருக்கிறார். ‘’ஊரில் குளத்தில் குளித்ததால் சளி பிடித்திருக்கிறது’’ என நண்பர்களிடம் சொன்னவர் அவராகவே மருந்து கடையில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டிருக்கிறார். பின்னர் அவர் குடும்பத்தில் பலருக்கும் கொரோனா தொற்றுப்பரவ ஆரம்பிக்க சில நாட்களுக்கு முன்னர் மூச்சடைப்பின் காரணமாக எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.


 அங்கே அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தொற்று நுரையீரல் முழுக்கப் பரவிய நிலையில் மருத்துவமனைக்கு வந்ததால், நேற்று நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட மரணம் அடைந்தார் ஓவியர் இளையராஜா.
ஓவியர் இளையராஜாவின் ‘திராவிடப் பெண்கள்' ஓவியங்கள் பெரும்புகழ் பெற்றவை. அடுப்படியில் சமைக்கும் பெண், வாசலில் உட்கார்ந்து பூ கட்டும் பெண், ஜன்னல் வழியே வெளியே வேடிக்கைப் பார்க்கும் பெண் என கிராமத்துப் பெண்களை மிகத்தத்ரூபமாக வரைவதில் தேர்ந்தவர் இளையராஜா.
கொரோனாவால் இன்னொரு தலைசிறந்த கலைஞனைப் பறிகொடுத்திருக்கிறோம்.
 சிறு அலட்சியம்கூட பேராபத்தில் கொண்டுபோய்விடும் என்பதை உணர்வோம்!
நன்றி:
விகடன் இணையம்.

கருத்துகள் இல்லை: