திங்கள், 7 ஜூன், 2021

மணியரசனும், தியாகுவும் திராவிடத்தையும், சுபவீயையும் ....

May be an image of 1 person

Suba.Veerapandian  :  இராணுவ உடையில் மணியரசனும் தியாகுவும்! மணியரசனும், தியாகுவும் திராவிடத்தையும், சுபவீயையும்  கிழித்துத் தொங்கவிட்டு விட்டார்கள்" என்று பாஜக, ஆர்எஸ் எஸ், நாம் தமிழர் குழுவினர் தங்களின் புலனக் குழுக்களில் (வாட்சப்) பதிவிட்டு மகிழ்ந்திருந்ததைப் பார்த்தபோது நான் பயந்தே போய்விட்டேன்.
(ஆம், அவர்கள் தங்களின் பல குழுக்களில் என்னை இணைத்து வைத்துள்ளனர். அதுவும்  நல்லதாகத்தான் இருக்கிறது).
இருவரும் நாம் தமிழர் ஆதரவு  காணொலிகள்   வாயிலாகவும்,  கூடுதலாகத் தோழர் தியாகு  தன் முகநூல் வாயிலாகவும் தங்கள்  கருத்துகளைப்  பதிவிட்டிருந்தனர்.
 "திராவிட இயக்கம்தான் தமிழர்களுக்குப் பல் விளக்கவும், கோவணம் கட்டவும் கற்றுக் கொடுத்ததாம்"  என்று கூறி  மணியரசன் கோபப்பட்டுக் கொந்தளித்துள்ளார். நியாயமான கோபம்தான்.
(ஆனால் அப்படியெல்லாம் யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை).
தியாகு, தனக்கிருக்கும் தேசிய விடுதலைப் பணிகளையெல்லாம் ஒதுக்கி வைத்ததுவிட்டு
(அவர் இயக்கத்தின் பெயரே 'தமிழ்த்தேச விடுதலை இயக்கம்') எனக்காகப் பல மணி நேரத்தைச் செலவழித்து,  தன் முகநூலில் மூன்று நாள்கள் பக்கம் பக்கமாய் எழுதியுள்ளார்.

என்னை மதித்து, தங்களின் நேரத்தை ஒதுக்கிப்  பேசியுள்ள, எழுதியுள்ள இருவருக்கும் என் நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். ரங்கராஜ் பாண்டே, நாராயணன் திருப்பதி போன்றவர்கள் மணியரசனையும். சங்கிகள் பலர் தங்கள் குழுக்களில்,  .திராவிட எதிர்ப்புக்காகத் தியாகுவையும்   பாராட்டி மகிழ்ந்துள்ளனர். பாராட்டுகளைப்  பெற்றுள்ள நம் தோழர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தியாகுவின் கடிதத்திற்கு வரிக்கு வரி விடை எழுதலாம் என்ற தவறான எண்ணம் எனக்குள்ளும் முதலில் தோன்றியது.  ஆனால்,  ஓர் அறையில் அமர்ந்து, பதிலுக்குப் பதில் எழுதி, மயிர் பிளக்கும் வாதங்களில் ஒரு ருசி கண்டு, செயலாற்றுப் போய்விடக் கூடாது என்று தோன்றியதால் அந்த முயற்சியைக் கைவிட்டேன்.
 

அவர்கள் இருவரும்  என்னினும், அரசியலில், அனுபவத்தில், படிப்பறிவில் சிறந்தவர்கள். அதனால்தான், அப்படியிருந்த சுபவீ, இப்படி ஆகிவிட்டாரே என்று தியாகு  எனக்காகப் பரிதாபப்படுகின்றார். "திராவிடம் எப்போது கருத்தியலாக மாறியது சுபவீ?" என்று ஒரு கேள்வி கேட்டார் பாருங்கள்! நான் மிரண்டு போய்விட்டேன்.  .எனக்கு விடை தெரியவில்லை. எந்தத் தேதியிலிருந்து அது கருத்தியலாக மாறியது என்பதை நான் குறித்துக் கொள்ளத்  தவறிவிட்டேன்.  வாதத்தில் தியாகு வென்றுவிட்டார்.
 

அவர்கள் இருவரும், இறையாண்மை கொண்ட தமிழ்த் தேசியத்த்திற்காக - ஏன் சுற்றி வளைப்பானேன் - தனித்தமிழ் நாடு பெறுவதற்காகப் போராடுகிறவர்கள். அதற்குக்  குறைவாக எதனையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மாநில சுயாட்சி எல்லாம் அவர்ளுக்குச் சிறுபிள்ளை விளையாட்டு! திராவிட இயக்கத்தைப் போல, அதுவும் அண்ணாவைப் போல ஒரு கோழையாக. இறையாண்மை கொண்ட தமிழ்த் தேசியக்   கோட்பாட்டைக் கைவிட்டுவிட மாட்டார்கள். தனித்தமிழ் நாடு அடையாமல் அவர்கள் இனி ஒருநாளும் ஓய மாட்டார்கள். .ஆனால் அப்படி அவர்கள் 'களமாடிக் கொண்டிருக்கும் வேளையிலும் இவ்வளவு விரிவாகத் திராவிடத்தைத்  தாக்குவதற்கு நேரம் ஒதுக்குகிறார்களே,  அதுதான் அவர்கள் சிறப்பு! அதனால்தான் அவர்களை ஆர் எஸ் எஸ் கூட்டம் அவ்வளவு  பாராட்டுகிறது. ஆர் எஸ் எஸ், பாஜக வின்  ஒரே நோக்கமும் திராவிடத்தை ஒழிப்பதுதானே!
 

பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரம், லட்சத்தீவு குறித்தெல்லாம் தியாகு என்ன எழுதியுள்ளார் என்று தேடிப்  பார்த்தேன். ஒன்றும் அவர் முகநூலில் கிடைக்கவில்லை. மணியரசபைப் போல ஒரு மயிலிறகாலாவது வருடிக் கொடுத்திருக்கலாம். ஆனால் தியாகுவிற்கு அதற்கும் கூட நேரம் கிடைக்கவில்லை. திராவிடம் என்ற ஒரே ஒரு சொல்லை ஒழித்துவிட்டால் போதும், எல்லாம் சரியாகிவிடும் என்று கருதியிருப்பார் போலிருக்கிறது.  சுப்ரமணிய சாமி சொல்வதைப் போல அதெல்லாம் 'சில்லறை விஷயம்' என்றும் அவர்  எண்ணியிருக்கலாம்.
 

திராவிட இயக்கத்தைப் போலன்றி, இறுதிவரையில் போராடித் தனித்தமிழ் நாடு பெற்றுக்கொடுத்து விடுவார்கள் என்று சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்கத்  தோன்றும்.   வெறுமனே எழுதியும், பேசியும் அல்லது நண்பர் சீமானைப் போலத் தொடர்ந்து தேர்தலில் கட்டுத்தொகையைப் பெறுவதற்குக்  'களமாடியும்' ஒரு நாட்டின் விடுதலையைப் பெற்று விட முடியாது என்பது அவர்களுக்குத் தெரியாதா என்ன! ரகசியமாக ஒரு விடுதலைப் படையை அவர்கள்  உருவாக்கியிருக்கக்  கூடும். எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்லிவிட முடியாதல்லவா? லட்சக் கணக்கானவர்கள் திடீரென்று  ஒருநாள் அணிவகுக்கவும் கூடும். அந்த நாளில், நம்  தோழர்கள் மணியரசனும், தியாகுவும் இராணுவ உடையில் தலைமையேற்று முன்னால் நடந்து வரும்போதுதான் வீணாய்ப் போன என்னைப் போன்றவர்களுக்கும்,  இந்தத் திமுக காரர்களுக்கும் உண்மை  புரியும்!

கருத்துகள் இல்லை: