தினத்தந்தி : வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.300 கோடி நிலம் மீட்பு அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்து அதிரடி
விருகம்பாக்கத்தில்வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.300 கோடி நிலத்தை அமைச்சர் சேகர்பாபு தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மீட்டனர்.
பூந்தமல்லி, சென்னை விருகம்பாக்கம், கருணாநிதி நகர் பகுதியில் வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 5½ ஏக்கர் நிலம் உள்ளது.
தனியார் சிலரால் இந்த நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றி இருப்பதாகவும், இதனால் கோவிலுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதால் கோவில் நிலத்தை மீட்கும்படியும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ரூ.300 கோடி நிலம் மீட்பு
அங்கு பெப்சி சினிமா துறை சார்ந்த படப்பிடிப்பு வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்த நிலத்தின் மற்றொரு பகுதியில் தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட, பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதி உள்ளது. மீதமுள்ள இடம் காலியாக இருந்தது.
இதையடுத்து கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து நிறுத்தி இருக்கும் வாகனங்களை ஒரு நாளில் அகற்ற வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார். பின்னர் கோவில் நிலம் மீட்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த நிலத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அத்துடன் அந்த இடத்தில், ‘இது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம். அத்துமீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. மேலும் அந்த இடம் முழுவதும் பொக்லைன் எந்திரங்கள் கொண்டு சமன் செய்யப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.300 கோடி என கூறப்படுகிறது.
அதன்பிறகு அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவிலுக்கு வருமானம்
கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கையாக வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 5½ ஏக்கர் நிலத்தை போலீஸ், இந்து சமய அறநிலைத்துறை, சென்னை மாநகராட்சி ஆகியோர் கூட்டாக சேர்ந்து மீட்டு உள்ளோம். இங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த ஒருநாள் கால அவகாசம் கொடுத்துள்ளோம். இனி இந்த இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானதாகும்.
அரசுக்கு வர வேண்டிய வருவாய், அறநிலையத்துறைக்கு சேர வேண்டிய வருவாய்க்கு தடை இருந்தால் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கோவில்களுக்கு வருமானம் வருவதில் இருக்கும் தடைகள் அனைத்தையும் உடைத்து வருமானத்தை கொண்டு வரும் முயற்சிகள் தொடரும்,
ஊரடங்கு முடிந்து மீண்டும் கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்ட பிறகு தமிழில் அர்ச்சனை செய்வதற்கான பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது எம்.எல்.ஏ.க்கள் கருணாநிதி, பிரபாகர்ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக