வியாழன், 10 ஜூன், 2021

சீன யானை கூட்டம் இடம் பெயர்ந்து செல்லும்.. படுத்துறங்கும் காட்சி!

 தினமணி :சீனாவில் வலசை (பறவைகள், விலங்குகள் ஆகியவை பருவகாலங்களை ஒட்டி புலம் பெயருவதைக் குறிக்கும்.) செல்லும் யானைக் கூட்டம் உலக மக்களின் கவனத்தைப் பெற்றிருக்கும் நிலையில், தங்களது நீண்ட நெடிய பயணத்துக்கிடையே அவைகள் படுத்துறங்கிய காட்சி பார்ப்பவர்களின் முகத்தில் ஒரு சிறு புன்னகையை ஏற்படுத்தத் தவறவில்லை.
தென்மேற்கு சீனத்தின் யூனான் மாகாணத்தில் கடந்த 3-ஆம் தேதி இந்த 15 யானைகளும் கூட்டமாக மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து விட்டன.
யூனான் மாகாணத்தின் வனப்பகுதியை ஒட்டியிருக்கும் கும்மிங் எனும் இடத்தில் அந்த யானைகள் தங்கியிருந்தன. அங்குதான் அந்த அழகிய காட்சி படமாக்கப்பட்டது.
சுமார் ஓராண்டுகாலமாக இந்த 15 யானைகள் சீனத்தில் தங்களது இயற்கையான சரணாலயப் பகுதியிலிருந்து கூட்டமாக வலசைச் செல்ல ஆரம்பித்தன. தற்போது 500 கிலோ மீட்டர் தூரத்தை அவைகள் கடந்திருக்கும் நிலையில், உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.



வனப்பகுதியில் வசிக்கும் யானைகள் பொதுவாக  ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கூட்டமாக இடம்பெயருவது வழக்கம்.

அந்த வகையில், இந்த யானைக் கூட்டம், சில இடங்களில் வழிதவறி நகர்ப் பகுதிகளுக்குள் நுழைந்ததால் பயணம் நீண்ட நெடியதாக மாறிப்போனதாகக் கூறப்படுகிறது.

தற்போது சீனத்தின் தென்மேற்குப் பகுதியான குன்மிங் என்ற இடத்தைக் கடந்த யானைகள் கூட்டம், நெடுந்தூரம் நடந்து வந்த களைப்பினால், ஓய்வெடுக்கும் வகையில், வயல்வெளிப் பகுதியில் கூட்டமாக படுத்துறங்கிய காட்சி, பறக்கும் காமிராவில் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தற்போது செய்தி ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டு, சமூக ஊடகங்களிலும் அதிகம் பேரால் கவனம் பெற்று வருகிறது.

யானைகள் கூட்டமாக படுத்துறங்கும் புகைப்படத்தில், மனிதர்களைப் போல, ஒரு யானை தனது முன்னங்காலை மற்றொரு யானையின் முதுகு மீது போட்டிருப்பதும், குட்டி யானையொன்று, ஒரு யானையின் கை இடுக்கில் படுத்துறங்குவதும், ஒரு குட்டி யானை, பெரிய யானையின் மீதேறி படுத்துறங்குவதும், பார்ப்போரை மனம் கவர வைத்துள்ளது.

குட்டி யானைகளை நடுவில் விட்டு, பெரிய யானைகள் சுற்றிலும் படுத்துறங்குவது அவர்களது பாதுகாப்பு உணர்வை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

திங்கள்கிழமை முழுவதும் ஓய்வெடுத்த யானைகள், செவ்வாய்க்கிழமை மீண்டும் தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளன. யானைகள் வழித்தடத்தில் அமைந்திருக்கும் ஊர் மக்களுக்கு, அந்தந்தப் பகுதி நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கைக் கொடுக்கப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் வாழும் மக்கள் முன்னெச்சரிக்கையாக வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குன்மிங் பகுதி மக்கள் நெருக்கடி அதிகம் நிறைந்தது என்பதால், அரசு சார்பில் ஒரு குழுவினர் இந்த யானைக் கூட்டத்தை பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

அவைகள் வழிதவறி ஊருக்குள் சென்று விடாமலும், வனப்பகுதிக்குள் பத்திரமாக அவை சென்று சேர வேண்டிய இடத்துக்குச் செல்லும் வகையிலும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. வழிநெடுக அவற்றுக்கு உணவளிக்கும் பணியும் நடந்து வருகிறது.

வழித்தடங்களில் இருக்கும் விவசாய நிலங்களில் சோளம் அல்லது உப்பு போன்ற உணவுப் பொருள்களை வைத்துவிட வேண்டாம் என்றும், அவை யானைகளுக்கு அதிகம் பிடித்த உணவுகள் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதுவரை இந்த யானைக் கூட்டத்துக்கு இரண்டு டன் உணவுப் பொருள்கள் வழிநெடுகிலும் வழங்கப்பட்டுள்ளது.

சீனா – மியான்மர் எல்லைப் பகுதியான ஸிஷுவாங்பன்னா என்ற யானைகளின் இயற்கை சரணாலயப் பகுதியிலிருந்து கடந்த ஆண்டு இந்த யானைக் கூட்டம் கிளம்பின.

அவைகள் வடமேற்குப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால், தங்களது வாழ்விடத்தை விட்டு அவை ஏன் இடம்பெயர்கின்றன என்பதற்கான உறுதியான காரணம் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பியூ என்ற பகுதிக்கு வந்த போது, அந்த யானைக் கூட்டத்திலிருந்து ஒரு பெண் யானை குட்டியை ஈன்றது. இதன் காரணமாக, அந்த யானைக் கூட்டம் சுமார் 5 மாதங்கள் அங்கேயே தங்கியிருந்தன. பிறகு ஏப்ரல் 16-ஆம் தேதி தங்களது பயணத்தைத் தொடங்கின.

இந்த யானைக் கூட்டத்தின் பயணத்தை, சீன அரசுத் தொலைக்காட்சி 24 மணி நேரமும் நேரலையாக மக்களுக்கு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்படங்கள்: நன்றி சீனா ஸின்குவா செய்தி (சுட்டுரையிலிருந்து

கருத்துகள் இல்லை: