வெள்ளி, 11 ஜூன், 2021

ராமநாதபுரத்தில் 60 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் போக சாகுபடி: சாத்தியமானது எப்படி?

பிரபுராவ் ஆனந்தன் -பிபிசி தமிழுக்காக : ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழை நீரை கண்மாயில் சேகரித்து அந்த தண்ணீரை பயன்படுத்தி இரண்டாம் போக சாகுபடி செய்து அதிக மகசூல் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வறட்சி மாவட்டத்தில் இரண்டாம் போக விவசாயம்
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தை ‘வானம் பார்த்த பூமி’, ‘வறட்சி மாவட்டம்’ என பொதுவாக மக்கள் அழைப்பது வழக்கம். இந்த மாவட்டத்துக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் வடகிழக்கு பருவமழை, கடந்த சில வருடங்களாக சரிவர பொழியவில்லை. இதனால் அனைத்து பகுதிகளிலும் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டன. இதனால் இங்குள்ள விவசாயிகள் முதல் போக சாகுபடியில் மட்டுமே ஆர்வம் செலுத்தினர். இரண்டாம் போக சாகுபடி மீது அவர்கள் பெரிய ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில் நடப்பாண்டில், வழக்கத்தை விட வட கிழக்கு பருவமழை கூடுதலாக பொழிந்தது. இதனால் மாவட்டத்தில் 75 சதவீதத்துக்கும் மேலாக கண்மாய்கள், பண்ணைக்குட்டைகள், ஊருணிகள் போன்ற நீர்நிலைகள் பெருகியதால் பயிரிடப்பட்ட நெற் பயிர்கள் நன்றாக விளைந்து சுமார் 1.50 லட்சம் ஏக்கரில் அறுவடை செய்யப்பட்டது.

பருவம் தவறி பெய்த கனமழை

மேலும், கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழை, 248 மில்லி மீட்டர் அளவு பதிவானது. இதன் காரணமாக ராமநாதபுரம் பெரிய கண்மாய், களரி கண்மாய், ஆர்.எஸ் மங்கலம் கண்மாய், குளங்கள், நீர் நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் சேமித்த தண்ணீரை நம்பி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கடலாடி, சிக்கல், அச்சுந்தன்வயல், மற்றும் மாவட்டத்தின் சில கிராம பகுதிகளில் உடனடியாக இரண்டாம் போக விவசாயம் செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.

இதனால் கடலாடியை அடுத்த சிக்கல், மேலச்செல்வனூர் ஆகிய கிராமப்பகுதிகளில் சுமார் 150 ஏக்கரில் நெல் விவசாயம் செய்யப்பட்டது. களையெடுத்தல், உரமிடுதல் தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது நல்ல நிலையில் கதிர்விட்டு முதிர்ச்சி நிலையில் அறுவடைக்கு தயாராகியுள்ளது.

இதே போல் மானாவாரி விவசாய பயிர்களான உளுந்து, பருத்தி விதைகள் விவசாயிகளுக்கு 50 சதவீத அரசு மானியத்தில் வழங்கப்பட்டன.

5 ஆயிரம் ஏக்கர் இலக்கு

இதைத்தொடர்ந்து, 5,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகளை மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் ஊக்குவித்தனர். இதில் 2,766 ஏக்கர் பரப்பளவில் உளுந்து, பயிறு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பருவத்தில் உள்ளன.

பருவம் தவறி பெய்த மழை நீரை வீணாக்காமல் துரிதமாக செயல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய கண்மாய்களின் நீர் மட்டத்தை உயர்த்தியதன் பலனாக 60 ஆண்டுகளுக்கு பின் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் இரண்டாம் போக சாகுபடி செய்து சாதித்துள்ளனர். இதற்காக கடுமையாக உழைத்த விவசாயிகளுக்கும், வேளாண்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் பொது மக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றில் கைகொடுத்த இரண்டாம் போக சாகுபடி

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய விவசாயி பாக்கியநாதன், “நான் சிறு வயதில் இருந்து விவசாய தொழில் செய்து வருகிறேன். கடந்த 30 ஆண்டுகளாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் பஞ்சம் நிலவியதால் வேளாண் குடிமக்கள் விவசாயத்தை கைவிட்டு விட்டு மாற்று தொழில் தேடி அண்டை மாவட்டங்களுக்கு சென்று விட்டனர். இன்னும் சிலர் கருவேல மரங்களை வெட்டி கரிமூட்டம் போட்டு தொழில் செய்து வருகின்றனர்,” என்றார்.

“கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழை நீரை பாதுகாப்பாக கண்மாய்களில் சேமித்ததன் பலனாக சாயல்குடி, கடலாடி, சிக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 60 ஆண்டுகளுக்கு பின் வறண்ட பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாவது போக விவசாயத்தை விளைவித்துள்ளனர்.”

படக்குறிப்பு,பாக்கியநாதன்

“தற்போது உள்ள கொரோனா பேரழிவில் பல்வேறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த இரண்டாம் போக விவசாயத்தில் கிடைத்த அதிக மகசூல் விவசாயிகளுக்கு பெருமளவு பலன் கொடுத்துள்ளது. அதேபோல் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குளங்கள், கண்மாய்கள், மடைகளை சிர் செய்து கொடுத்தால் இந்த முறை போல் எதிர் வரும் காலங்களிலும் விவசாயத்தை ஊக்கப்படுத்த முடியும்.

கடந்த முறை மாவட்ட ஆட்சியர், எங்கள் பகுதியில் விவசாயிகள் கண்மாய்களில் சேமித்து வைத்த நீரை பார்த்து பாராட்டிச் சென்றார். தற்போது மாவட்ட நிர்வாகம் எடுத்த முயற்சியின் பயனாக மாவட்டத்தில் இரணடாம் போக சாகுபடி சாத்தியமானது,” என்கிறார் விவசாயி பாக்கியநாதன்.

விவசாயம் செய்யலாமா, வேண்டாமா

இரண்டாவது சாகுபடி குறித்து விவசாயி கோபால் பிபிசி தமிழிடம் பேசுகையில், “ராமநாதபுரத்தை அடுத்துள்ள அச்சுந்தன்வயல் கிராமத்தில் முதல் சாகுபடியாக நெல் விவசாயம் செய்து நல்ல விளைச்சல் கிடைத்தது. வறட்சி காரணமாக இரண்டாம் போக விவசாயம் செய்யலாமா, வேண்டாமா என விவசாயிகள் குழப்பத்தில் இருந்து வந்தோம்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் திடீரென தொடர்ந்து மழை பெய்தது. மழையால் கண்மாய்களில் மாவட்ட நிர்வாகத்தால் மழை நீர் வீணாகாமல் சேமிக்கப்பட்டது. அந்த நீரை பயன்படுத்தி எங்கள் பகுதியை சேர்ந்த வேளாண் விவசாயிகள் சுமார் 300 ஏக்கருக்கு மேலாக இரண்டாம் போக பருத்தி விவசாயம் மேற்கொண்டுள்ளோம்.

பருத்தி நன்றாக விளைந்து நல்ல விளைச்சல் கிடைத்து, அறுவடை செய்ய தயாராக உள்ளது. இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு வேளாண் குடிமக்களுக்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது,” என்றார்.

கூடுதல் மன நிறைவு

பருவம் தவறிய மழை நீரை சேமித்தது குறித்து பிபிசி தமிழிடம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விரிவாக பேசுகையில், “ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்கத்தை விட இந்த ஆண்டு ஜனவரி மாதம் கூடுதலாக மழை பெய்தது. இந்த பருவம் தவறி பெய்த மழையினால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயம் செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் பருவம் தவறி பெய்த இந்த மழை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய கண்மாய்கள் மற்றும் ஊருணிகளில் தண்ணீரை சேமிக்க ஏதுவாக அமைந்தது,” என்றார்.

ஜனவரி மாதம் பெய்த கூடுதல் மழை நீரை எப்படியாவது இந்த மாவட்ட விவசாயிகள் சரியாக பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் ‘ஒரு போக விவசாயம்’ மட்டுமே செய்து வந்தனர். அதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. எனவே, இரண்டாம் போக விவசாயத்தில் ஈடுபட்டால் விவசாயிகளுக்கு நிச்சயம் நல்ல வருமானம் கிடைக்கும் என்ற அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள சக்கரக்கோட்டை, ஆர்.எஸ் மங்கலம், களரி கண்மாய் ஆகிய மூன்று கண்மாய்களை தேர்வு செய்து மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

“பருவம் தவறி பெய்த மழை நீரை வீணாக்காமல் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாயம் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் திட்டமிட்டு விவசாயிகளை அழைத்து இந்த முறை இரண்டாம் போக விவசாயத்தில் ஈடுபடுங்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக உரங்கள், விதைகள் ஆகியவற்றை மானிய விலையில் கிடைக்க ஏற்பாடு செய்தோம்.”

“குறிப்பாக நைட்ரஜனை அதிகரித்து மண் வளத்தை பெருக்கக் கூடிய மாற்று பயிர் வகைகளை விவசாயிகளுக்கு கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்தோம். அதன் விளைவாக 60 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் இரண்டாம் போக சாகுபடி செய்து நல்ல விளைச்சலை பெற்றுள்ளனர். இது மாவட்ட ஆட்சியரான எனக்கும், வேளாண்துறை அதிகாரிகளுக்கும் மன நிறைவை தந்துள்ளது.”

“மழை நீரை சேமித்ததின் விளைவாக 2,760 ஏக்கர் கூடுதலாக பயிரிடக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனால் 2,214 வேளாண் குடிமக்கள் பயன் பெற்றுள்ளனர். சராசரியாக ஒரு விவசாயிக்கு 12 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக வருமானம் கிடைத்துள்ளது.”

“குறிப்பிட்டு சொல்லப்போனால் இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் பலரும் வேலை இழந்து நிற்கும் சூழ்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு அதிகளவு மகசூலும் நல்ல வருமானமும் கிடைத்துள்ளது கூடுதல் மனநிறைவைத் தருகிறது,” என்கிறார் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

கருத்துகள் இல்லை: