திங்கள், 7 ஜூன், 2021

நீட் தேர்வை ரத்து செய்வதில் அரசு உறுதி : அமைச்சர் அன்பில் மகேஷ்

minnambalam : தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதையடுத்து தொடர்ந்து தமிழ்நாடு  உள்பட பல மாநிலங்களும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்தன. இருப்பினும், பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்கப்படும் என்ற கேள்வி மாணவர்களிடமும், பெற்றோர்களிடம் இருந்தது.
இந்நிலையில் இன்று(ஜூன் 7) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ” பிளஸ் 2 வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு விவகாரத்தில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கக்கூடாது என்பதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், சட்டமன்ற உறுப்பினர் குழு ஆகியோரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது.



சட்டமன்ற உறுப்பினர் குழு ஆலோசனையில், பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள் நடந்தால் எப்படி நடத்த வேண்டும்? நடத்த இயலாத சூழ்நிலை உருவானால், அனைத்து நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்கள். மேலும், மாணவர்களின் உயிர் முக்கியம் என்றும் அரசு எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவித்தார்கள். இதனைத்தொடர்ந்து, மருத்துவ வல்லுநர்களும் பல ஆலோசனைகள் வழங்கினார்கள். அதனடிப்படையில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது.

பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என 10 பேர் உள்ளனர்.அந்த குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் வழங்குவது குறித்து முதல்வர் இறுதி முடிவெடுப்பார்.

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை, பள்ளி புத்தகம் விநியோகம், தனியார் பள்ளி கல்வி கட்டணம் குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும்.

நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதிலிருந்தே திமுக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதன்படியே நீட் தேர்வு ரத்து செய்வதற்கான அனைத்து கட்ட நடவடிக்கைகளையும் முதல்வர் மேற்கொண்டு வருகிறார். நீட் தேர்வை நடத்தக் கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு. தமிழத்தில் நீட் தேர்வை கொண்டுவரக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில்தான் நீட் உள்ளிட்ட தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்” என பேசினார்.

-வினிதா

கருத்துகள் இல்லை: