100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மனித குலத்தை தாக்கும் கொள்ளை நோய், பல்வேறு வடிவங்களில் தன்னை சமன் செய்துகொள்ள, இது போன்ற கொள்ளை நோய் வடிவங்களில் வரும் என்று ஆய்வாளர்கள் கணித்திருக்கின்றனர். இணைப்பு. இப்படி ஒரு நோய் உலகெங்கும் தாக்கி, குறிப்பாக, அந்நோயின் இரண்டாவது அலை, பெரும் வீச்சோடு இந்தியாவை தாக்கிய சமயத்தில் ஸ்டாலின் பதவியேற்றிருக்கிறார்.
இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகம் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளில் பல மடங்கு முன்னேறி இருந்தபோதும் கூட, இரண்டாவது அலையின் வீச்சு, எந்த அரசையும் நிலைகுலைய வைக்கும். அதுவும், புதிதாக பொறுப்பேற்ற அரசுக்கு, சிக்கல்கள் நிறையவே இருக்கும்.
ஸ்டாலினுக்கு பதவியேற்றதும், பிரதான பணி கொரொனா கட்டுப்படுத்தலே. ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் முதல் பல மாதங்கள் முழு அடைப்பில் இருந்த மக்களுக்கு, மீண்டும் ஒரு முழு அடைப்பு என்பது, மிகப் பெரிய கசப்பு மருந்தாகவே இருக்கும். முதல் அடைப்பின் தாக்கத்திலிருந்தே பெரும்பாலான பொதுமக்கள், தொழில்கள், விளிம்புநிலை மக்கள் மீளாது இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு பொது முடக்கமா என்பது மிகப் பெரிய அதிர்ச்சியாகவே இருக்கும். மேலும், ஒரு அரசு பொதுமுடக்கம் போன்ற கசப்பு மருந்துகளை பிரயோகிக்கையில், அது மக்களிடையே எதிர்ப்பை சந்திக்க நேரிடும். ஸ்டாலின் போல முதல் முறை முதல்வராகியவர்களுக்கு இது இன்னும் பெரும் சிக்கலை ஏற்படுத்தக் கூடும்.
ஆனால், பொதுமுடக்கத்தைத் தவிர கொரொனாவை கட்டுப்படுத்த வேறு வழியே இல்லை என்பதை, உணர்ந்த ஸ்டாலின், அரசு தன்னிச்சையாக முடிவெடுப்பது சரியாக இருக்காது என்பதை உணர்ந்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி பொது முடக்கத்தை கருத்துக் கேட்புக்குப் பின் அறிவித்தார்.
இது ஒரு ஜனநாயகபூர்வமான நடவடிக்கை என்பது ஒரு புறம் இருக்க, அரசியல் ரீதியாகவும் இது ஒரு கூக்லி. எதிர்க்கட்சிகளை அழைத்து, அவர்கள் கருத்துக்களை கேட்டு முடிவெடுத்தபின், அவர்கள் முடிவில் குறை சொல்ல முடியாது.
கடந்த 4 ஆண்டுகளாக, நாம் அதிமுகவின் அமைச்சர்களின் செயல்பாடுகளை பார்த்துக் கொண்டுதான் இருந்தோம். “மோடி எங்கள் டாடி” என்று ஒரு அமைச்சர். மக்கள் அதிகமாக சோப்பு பயன்படுத்துவதால், ஆற்றில் நுரை வருகிறது என்று ஒரு அமைச்சர், ஆற்றில் தெர்மாக்கோல் மிதக்கவிட்டு தண்ணீர் சேமிக்கும் ஒரு அமைச்சர், 13 பேர் போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, அதை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கூறும் ஒரு முதலமைச்சர் என்று கோமாளிகளின் ஆட்சியில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருந்தோம்.
இன்றைக்கு திமுக அமைச்சரவையில் இருக்கக் கூடிய அமைச்சர்கள், பம்பரமாக வேலை செய்கிறார்கள். சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியமாக இருக்கட்டும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷாக இருக்கட்டும், கே.என்.நேருவாக இருக்கட்டும், சேகர் பாபுவாக இருக்கட்டும், அனைவருமே, இந்த ஆட்சி தமிழகத்துக்கு நன்மை பயக்கும் ஆட்சியாக இருக்கட்டும் என்பதில் கவனமாக செயல்படுகின்றனர்.
ஸ்டாலினே, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, நேரடியாக கள ஆய்வு செய்து, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
30 நாட்கள் என்பது ஒரு குறுகிய காலமே என்றாலும், இந்த 30 நாட்களில் ஒரு அரசு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை திமுக அரசு உணர்த்தியிருக்கிறது.
போர்க்கால அடிப்படையில் மருத்துவ உட்கட்டமைப்புகளை மேற்கொண்டது, மருத்துவமனை வசதிகளை பெருக்கியது, ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க அண்டை மாநிலங்கள் மற்றும் மத்திய அரசை அணுகியது என கொரொனா தடுப்பில், கேரளாவோடு ஒப்பிடும் அளவுக்கு தமிழக அரசின் செயல்பாடுகள் மிகவும் திருப்தி அளிக்கின்றன.
குரலற்று இருந்த காவலர்கள் மற்றும் காவல்துறை ஆளினர்களுக்கு பணி ஓய்வு, மருத்துவர்கள் மற்றும் பிற முன்கள பணியாளர்கள் போலவே, காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான காவல் துறையினருக்கு கொரொனா கால ஊக்கத் தொகையாக 5000 ரூபாய் அளித்தது போன்றவை மிகவும் பாராட்டத் தகுந்த நடவடிக்கைகள்.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து இந்து கோவில்களை மீட்டு, பார்ப்பனர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட நாட்களாகவே, பார்பன சக்திகளிடம் இருந்து வந்து கொண்டுள்ளது. இந்நிலையில், அறநிலையத் துறையை வலுவாக்கி, இந்து கோவில்களின் சொத்துக்கள் அனைத்தையும், வெளிப்படையாக இணைய தளத்தில் வெளியிடப்படும் என்ற நடவடிக்கை மிக மிக வரவேற்கத்தக்கது. கடவுள் மறுப்பு கொள்கை வேறு, தமிழகத்தின் சொத்துக்களை பாதுகாப்பது வேறு என்பதை தெள்ளத் தெளிவாக்கியிருக்கிறார் ஸ்டாலின். மேலும், எல்காட் நிறுவனத்தின் உதவியோடு, சிதிலமடைந்த கோவில் ஆவணங்களும், செம்மைப்படுத்தப்பட்டு, “ப்ளாக் செயின்” தொழில்நுட்பத்தின் அடிப்படையில், பாதுகாக்கப்படும் என்ற அறிவிப்புகள் மகிழ்ச்சியை தருகின்றன.
2011ல் ஜெயலலிதா பதவியேற்றதும், கலைஞர் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை அழித்தார். சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை அழித்தார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக்கினார். புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற முயற்சித்து, நீதிமன்ற உத்தரவால் தோல்வியை தழுவினார்.
ஸ்டாலின் நினைத்திருந்தால் குறைந்தபட்சம், அம்மா உணவகங்களில் ஜெயலலிதா பெயரையாவது நீக்கியிருக்கலாம். ஆனால் இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், கொரொனா தடுப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் மட்டுமே ஸ்டாலின் கவனம் செலுத்துகிறார்.
ஞாயிறன்று சீரமைக்கப்பட்ட தமிழக வளர்ச்சிக் குழுமத்தில், பொருளாதார நிபுணர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களை சேர்த்து அதை சீரமைத்திருப்பது, மிகவும் நம்பிக்கை ஏற்படுத்துகிறது.
திமுக பதவியேற்றது முதல், மீண்டும் திராவிடம் Vs ஆரியம் என்ற விவாதம் மேலெழுந்திருக்கிறது. இது மிக மிக வரவேற்கத்தக்கது. முதல்வராக பதவியேற்றதும், தனது ட்விட்டர் ப்ரொபைல்லில் ஸ்டாலின் “Belongs to Dravidian Stock” என்று போட்டது வலது சாரிகளையும், தமிழின விரோதிகளையும் கொதிப்படைய செய்துள்ளது. இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாகி, மீண்டும், இந்தி மொழித் திணிப்பு, பார்ப்பனீய ஆதிக்கம், தமிழர் மரபு ஆகிய விடயங்களை, பொது வெளியில் விவாதத்துக்கு கொண்டு வந்துள்ளது.
மேலும், மிகக் குறிப்பாக, மத்திய அரசை இனி “ஒன்றிய அரசு” என்று அழைப்போம் என தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவு மிக மிக சிறப்பான ஒன்று. கலைஞர் கூட இதை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது பெரும் விவாதத்துக்குள்ளாகி, வலது சாரிகளுக்கு கண்ணில் பட்ட மிளகாய் சாறாக எரிச்சல் ஏற்படுத்தியுள்ளது. இதுவும் விவாதத்துக்கு உள்ளானதும், வலது சாரிகள் அது எப்படி ஒன்றிய அரசு என்று அழைக்கலாம் என்று இதற்கெல்லாம் எதிர்ப்பெழுப்பத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து, மூத்த ராணுவ அதிகாரியும், பல்துறை வித்தகரானவருமான மேஜர் மாலன், “தமிழ்நாடு” என்பதற்கு பதிலாக, “தமிழகம்” என்று அழைக்கலாமே என்று கூறியதும் விவாதத்துக்குள்ளாயிற்று. புறநானூறு முதல், சங்க இலக்கியங்களில் இருந்து தமிழ்நாடு என்ற சொல்லுக்கான தரவுகள் சமூக வலைத்தளங்களில் எடுத்தாளப்பட்டன. இது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சி.
குறிப்பாக, தமிழக நிதியமைச்சர் பிடிஆர். தியாகராஜன், ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு, “மத்திய அரசுக்கு என்று ஏது தனியாக நிதி ? மாநிலங்கள்தான் மத்திய அரசுக்கு நிதி கொடுக்கின்றன.” என்றார். மேலும், “தமிழகத்திருந்து அதிக வரிவருமானத்தை பெறும் மத்திய அரசு மிகக் குறைவாகத் தான் திருப்பியளிக்கிறது. அதே சமயம் மிகக் குறைந்த வரிவருமானத்தை தரும் மாநிலங்கள் சிலவற்றுக்கு அதிக நிதியை தருகிறீர்கள். இந்த பாரபட்சம் தவிர்க்கப்பட வேண்டும்’’ என்கிறார். மேலும், அந்தக் கூட்டத்தில் எட்டு கோடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழக அமைச்சருக்கு வெறும் ஐந்து நிமிடம் மட்டுமே பேச வாய்ப்பளித்துவிட்டு, வெறும்16 லட்சம் மக்கள் கொண்ட கோவா மாநில நிதி அமைச்சர் பாஜக என்பதால், அரை மணி நேரத்திற்கும் அதிகமாக பேச வாய்ப்பு தரப்பட்டது தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழகம்,உ.பி போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களுக்கு எண்ணிக்கை அடைப்படையில் வாக்குகளும், பேசும் நேரமும் தரப்பட வேண்டும்”
இதுதானே திமுகவின் அடிப்படை அரசியல் ? பிடிஆரின் இந்த உரை, நாடெங்கும் விவாதத்தை கிளப்பி, மீண்டும் மாநில உரிமைகள் குறித்த வாதப் பிரதிவாதங்களை எழுப்பியிருப்பது, எல்லாவற்றையும், “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கட்சி” என்று முழக்கமிடும் ஒரு பாசிச ஆட்சிக்கு எதிராக நடத்த வேண்டிய சரியான அரசியல்.
திராவிட முன்னேற்றக் கழகம், அதன் அடிப்படை கொள்கைகளில் இருந்து தேர்தல் அரசியல் காரணமாக விலகிச் செல்கிறது என்பதுதான் என்னைப் போன்ற பார்வையாளர்களின் விசனம். அதை மறுக்கக் கூடிய வகையில் இத்தகைய விவாதங்கள் நடைபெறுவது, மகிழ்ச்சியளிக்கிறது. பொது வெளிகளில், இத்தகைய விவாதங்களுக்கு, தமிழர் நலன் சார்ந்து கிடைக்கும் ஆதரவுகள், திமுக தேர்தல் அரசியலை தவிர்த்து, அதன் அடிப்படை கொள்கைகளில் கவனம் செலுத்துவது அதன் வளர்ச்சிக்கு நன்மை பயக்கும் என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். 2024 வரை தேர்தல் இல்லை. ஆகையால் இந்து வாக்குகள் போய்விடும் என்று 2021 தேர்தலில் வேலை பிடித்தது போல ஸ்டாலின் இப்போது கவலைப்பட வேண்டியது இல்லை. மீண்டும் திமுக என்ற பெரும் ஆலமரத்தின் வேர்களான அடிப்படை கொள்கைகளை வளர்த்தெடுப்பது ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்துக்கு நன்மையே பயக்கும்.
இந்த ஆட்சியில் குறைகளே இல்லையென்றால் இருக்கிறது. அமைச்சரவை தேர்வில், செந்தில் பாலாஜி போன்ற பகல் கொள்ளையர்களை தேர்ந்தெடுத்து, செல்வம் கொழிக்கும் மின் துறை, மது மற்றும் கலால் துறைகளை அளித்திருப்பது பலரின் புருவங்களை உயர்த்தியது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து, ஓட்டுனர், நடத்துனர், இளநிலை பொறியாளர் என்று அனைத்து பணி நியமனங்களிலும் லஞ்சம் வாங்கி 800 கோடி ரூபாய் இந்த நியமனங்களில் மட்டும் சம்பாதித்திருக்கிறார் செந்தில் பாலாஜி. சென்னை மாநகர காவல் துறை இவ்வழக்கில் விரிவான புலனாய்வு செய்து, 47 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. இவர்கள் அனைவரும் வரும் 21 ஜூன் 2021 அன்று, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
இவர்களில் 46 பேருக்கு சம்மன் வழங்கப்பட்டு விட்டது. செந்தில் பாலாஜி மட்டும் சம்மனை வாங்காமல் அலைக்கழிக்கிறார் என்று காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. செந்தில் பாலாஜி மீது ஒரு வழக்கில் மட்டுமே (இளநிலை பொறியாளர் தேர்வு) குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 3 வழக்குகள் விசாரணையில் உள்ளன.
இப்படிப்பட்ட 800 கோடி ரூபாய் ஊழல் குற்றவாளியை முக்கிய துறையின் அமைச்சராக்கினால், இவ்வழக்கில் விசாரணை எப்படி நடக்கும் ? நீதிமன்றத்தில் சாட்சிகள் எப்படி வந்து துணிச்சலாக சாட்சி சொல்வார்கள் ?
திமுகவில் இருக்கும் 133 எம்.எல்.ஏக்களில் ஒருவர் கூடவா செந்தில் பாலாஜி துறையை கவனிக்க தகுதியற்றவர்கள் ?
இதே போல மற்றொரு நியமனம் கார்த்திகேயன் ஐஏஎஸ்ஸின் நியமனம். கடந்த ஆட்சியில், மாநகராட்சி ஆணையர், சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற செயலர் என்று கார்த்திகேயன் அடித்த கொள்ளை கொஞ்ச நஞ்சமல்ல. அவரை நெடுஞ்சாலைத் துறை செயலராக நியமித்த ஸ்டாலின், ஓரிரு நாட்களில் உயர்கல்வித் துறை செயலாளராக நியமித்தார். நெடுஞ்சாலைத் துறைக்கு பதில், உயர்கல்வித் துறையில் லஞ்சம் வாங்கினால் பரவாயில்லையா ?
தமிழகத்தில் இருக்கும் 370க்கும் மேற்பட்ட அதிகாரிகளில் ஒருவர் கூடவா தமிழக உயர்கல்வித் துறையை கவனிக்க தகுதியற்றவர்களாகி விட்டார்கள் ?
மேலும், இந்த கார்த்திகேயனின் ஊழல் குறித்து ஸ்டாலினே அறிக்கை விட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய தவறான நடவடிக்கைகள், ஒரு பெரிய வெள்ளைத் திரையில் கரும்புள்ளியாக உறுத்துகிறது.
ஒரு மூத்த பத்திரிக்கையாளர், ஸ்டாலினின் ஒரு மாத ஆட்சி குறித்து இவ்வாறு கூறினார்.
“ஒட்டுமொத்தமாக பார்க்கையில், மாநிலங்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதில் இந்த அரசு நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் செயல்படுகிறது. இது குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப் படுகிறது. ஆனால் அடிப்படை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது சந்தேகமே. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இவ்வரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது.
ஆனால், பத்தாண்டுகளாக இருக்கும் நிர்வாகம் இன்னும் அசைந்ததாக தெரியவில்லை. பத்தாண்டுகளாக தொடர்ந்து இருக்கும் ஒரு அரசால், அதிகாரிகளிடையே மெத்தனப்போக்கும் ஊழல் போக்கும் அதிகரித்துள்ளது. இதை சரி செய்வது ஸ்டாலின் முன்னால் உள்ள பெரும் சவால்” என்றார்.
இவர் சொல்வது உண்மையே. காவல் துறை அதிகாரிகள் நியமனத்தில், அதிமுக ஆட்சியில் ஊழல் கறை புரிந்த அதிகாரிகள் பலர், திமுக ஆட்சியில் நல்ல செல்வாக்கான பதவிகளை பெற்றுள்ளனர். சில நல்ல அதிகாரிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். காவல் துறை நியமனங்களில், இவ்வரசு மீது அதிகாரிகளிடையே அதிருப்தி நிலவுகிறது.
அனுபவின்மை காரணமாக, காவல் அதிகாரிகள் நியமனத்தில் ஸ்டாலின் தொடர்ந்து தவறிழைத்து வருவதாக அதிகாரிகள் மட்டத்தில் புகைச்சல் நிலவுகிறது.
30 ஜூன் 2021 அன்று, தற்போதைய சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி ஓய்வு பெறுகிறார். புதிய டிஜிபியாக யாரை நியமிக்கப் போகிறார் ஸ்டாலின் என்பதில்தான் அவர் நிர்வாகத் திறன் அடங்கியிருக்கிறது.
ஒரு முதல்வராக இருக்கையில், மனைவி, மகள், மகன், மருமகன், நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரிடமிருந்தும் அழுத்தங்கள் வரத்தான் செய்யும். இதை தவிர்க்கவே இயலாது. ஆனால், இதையெல்லாம் கடந்து, எப்படி ஒரு சிறந்த அதிகாரியை ஒருவர் தேர்ந்தெடுக்கிறார் என்பதில்தான் அவரின் ஆளுமை அடங்கியிருக்கிறது.
கலைஞருக்கோ, எம்.ஜி.ஆருக்கோ, ஜெயலலிதாவுக்கோ கூட இல்லாத ஒரு வாய்ப்பு ஸ்டாலினுக்கு கிட்டியிருக்கிறது.
ஏறக்குறைய எதிர்க்கட்சியே இல்லாத நிலை. இது ஒரு வகையில் வரம். மற்றொரு வகையில் சாபம்.
1991லும் சரி, 1996லும் சரி, தேர்தல் முடிவுகள் ஒரு பெரும் அலையாக இருந்தபோது கூட, திமுக மற்றும், அதிமுக முறையே கையாண்ட சிறந்த அரசியல் நடவடிக்கைகளே அக்கட்சிகளை வாழ வைத்தது.
இன்று அதிமுக 66 எம்.எல்.ஏக்களை வைத்திருந்தாலும்கூட, ஒரு தலையில்லாத கோழியாகத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. அக்கட்சியின், ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் ஒரு ஹோட்டலில் சந்திப்பது கூட செய்தியாகும் வண்ணம் அதிமுக பலவீனமாகியிருக்கிறது. இதை மேலும் பலவீனமாக்க, சசிகலா தனது ஆரம்பக்கட்டத் தொழிலான வீடியோ கேசட் வாடகைக்கு விடுவது போல, ஆடியோக்களை வாட்ஸப்பில் கசிய விட்டு, அதிமுக தலைமையை மேலும் ஆட்டம் காணச் செய்து கொண்டிருக்கிறார்.
இது ஸ்டாலினுக்கு வரம். ஆனால் இந்த வெற்றிடத்தை எப்படியாவது பிடித்து, திமுகவுக்கு அடுத்து தமிழகத்தில் பிஜேபிதான் என்பதை நிறுவ, பிஜேபியில் நேற்று சேர்ந்த நண்டு சிண்டுகளெல்லாம் உப்பு சப்பில்லாத விஷயங்களுக்கு திமுகவை குறை சொல்லிக் கொண்டுள்ளன.
இவர்கள் தமிழகத்தில் காலூன்ற விடாமல் தடுக்கும் பெரும் பொறுப்பு ஸ்டாலினுக்கு இருக்கிறது. இவர்கள் எங்கே தமிழகத்தில் வளர்வார்கள் என்று அசட்டையாக இருந்தால், திரிபுரா மணிப்பூர், கோவா போன்ற மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது போல, தமிழகத்திலும் இந்த விஷ சக்திகள் வளர வாய்ப்புண்டு.
மதுரையில் நூலகத்தை அமைத்தது போல, அறிஞர் அண்ணாவின் படைப்புகளை அரசுடமையாக்கியது போல, பெரியாரின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும், கி.வீரமணியிடமிருந்து, பெரியாரின் படைப்புகளுக்கான உரிமைகளை அரசு எடுத்து, பெரியாரை வீதிதோறும் கொண்டு செல்வது மட்டுமே, இந்த பார்ப்பனீய சக்திகளுக்கு சரியான பதிலடியாக இருக்கும். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் சிந்தனைகளையும், எழுத்துக்களையும், வீதிதோறும் கொண்டு சென்றாலே போதும். அதுவே திமுகவுக்கு ஆகப்பெரும் பலமாக அமையும்.
பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி பாலியல் குற்றச்சாட்டுகளை, அழுத்தங்களுக்கு பணியாமல், உறுதியாக நடவடிக்கை எடுத்தது போலவே, பார்ப்பனீய சக்திகளுக்கு அடிபணியாமல் ஸ்டாலின் ஆட்சி நடத்துவார் என்று நம்புகிறேன்.
வாழ்த்துக்கள் ஸ்டாலின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக