சனி, 12 ஜூன், 2021

மதுரையில், இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும்.

 minnambalam :மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.

கலைஞரின் 97வது பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி தமிழ்நாடு அரசு 6 புதிய திட்டங்களை அறிவித்தது. அதில், சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில், இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன், ரூ.70 கோடி செலவில், கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும். அண்ணா நூற்றாண்டு நூலகம் போல மற்ற பகுதிகளில் வாழும் மக்களும், இத்தகைய அரிய வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த நூலகம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இந்நிலையில் மதுரை எம்.கே.புரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், ”2017-2018ல் சட்டசபையில் தமிழ்நாட்டில் தனித்தன்மை வாய்ந்த நூலகங்கள் அமைக்கப்படும். அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே துறை சார்பில் அறிவித்தபடி தனித்தன்மை நூலகம் மற்றும் காட்சியங்கள் அமைக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை இன்று(ஜூன் 12) நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 7 நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன. தமிழ் இசை, நடனம் ஆகியவற்றுக்கு தஞ்சாவூரிலும், நாட்டுப்புற கலை நூலகம் மதுரையிலும், தமிழ் மருத்துவ நூலகம் திருநெல்வேலியிலும், பழங்குடி கலாச்சார நூலகம் நீலகிரியிலும், கணிதம், அறிவியல் நூலகம் திருச்சியிலும், அச்சுக்கலை நூலகம் சென்னையிலும், வானியல் நூலகம் கோயம்புத்தூரிலும் மக்கள் பயன்பாட்டில் உள்ளன. கீழடியில் தொடர்ந்து அகழாய்வு நடப்பதால் பழமை நாகரீக நூலகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது என்று வாதிட்டவர், ரூ. 70 கோடியில் மதுரையில் நவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூலகம் அமைக்கும் பணியும் தொடங்கியுள்ளதையும் சுட்டிக்கட்டினார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், ” புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு மதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என அறிவித்தது வரவேற்கத்தக்கது.

இதனால், தென் மாவட்ட மக்கள் அதிகம் பயனடைவர். குறிப்பாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பெருமளவு பயன்தரும். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குள் நுழைந்தால் ஒரு நாள் போதாது. அதே போல மதுரையில் அமையப்போகும் கலைஞர் நினைவு நூலகம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இதனை அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு எங்களது பாராட்டுக்கள்” என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

-வினிதா

கருத்துகள் இல்லை: