திங்கள், 2 நவம்பர், 2020

பாஸ்வான் மரணத்தில் மர்மம் ! . மகன் சிராக் பாஸ்வான் பங்கு குறித்து பல்வேறு கேள்விகள்??? Seeks Probe Into Ram Vilas Paswan's Death!

பாஸ்வான் மரணத்தில் மர்மம்: மோடிக்குக் கடிதம்!
minnambalam : பிகாரைச் சேர்ந்த மத்திய அமைச்சரும், இந்தியாவின் முக்கிய தலித் தலைவர்களில் ஒருவருமான ராம் விலாஸ் பாஸ்வானின் மரணம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பிகாரில் இருந்து கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனரும், மத்திய உணவுத்துறை அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி டெல்லியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். இதய அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களில் அவர் காலமாகிவிட்டார். இந்நிலையில் இப்போது பிகார் சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 3 ஆம் தேதி நடக்க இருக்கிற சூழலில்... இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சியின் தலைவரும் முன்னாள் பிகார் முதல்வருமான ஜித்தன் ராம் மஞ்சி சார்பில் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது.     ராம் விலாஸ் பாஸ்வான் மரணத்தில் மர்மம்

அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரான டேனிஷ் ரிஸ்வான் இன்று (நவம்பர் 3) பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில், “மத்திய அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பாஸ்வானின் மரணம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். குறிப்பாக அதில் அவரது மகன் சிராக் பாஸ்வான் பங்கு குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

மத்திய அமைச்சர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த மருத்துவமனை அவரது உடல் நிலை குறித்த செய்திகளை அவ்வப்போது வெளியிடவில்லை. யாருடைய அறிவுறுத்தலின் பேரில் அவரது உடல் நிலை பற்றிய தகவல்கள் மறைக்கப்பட்டன? பாஸ்வான் மருத்துவமனையில் இருந்தபோது அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மட்டுமே அவரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.இதெல்லாம் எப்படி சாத்தியம்? யாருடைய உத்தரவு? இதுபற்றியெல்லாம் விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும், மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் தனியாகவும் போட்டியிடும் லோக் ஜன சக்தி தலைவர் சிராக் பாஸ்வானுக்கு இந்தக் கடிதம் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிராக் பாஸ்வான் கருத்து வெளியிடுகையில், “ என் தந்தையாரின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொல்பவர்கள் வெட்கப்பட வேண்டும். என் தந்தையார் மருத்துவமனையில் இருந்தபோது அவரது நண்பரான மஞ்சியிடம் தொலைபேசி செய்து கூறினேன். ஆனால் அவர் ஒரு போதும் மருத்துவமனைக்குப் பார்க்க வரவில்லை. இப்போது என் தந்தை மீது காட்டும் அக்கறையை அவர் உயிரோடு இருக்கும்போது மாஞ்சி ஏன் காட்டவில்லை? இறந்துபோன என் தந்தையாரை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்கள்” என்று பதிலளித்திருக்கிறார். .

-வேந்தன்

கருத்துகள் இல்லை: