திங்கள், 2 நவம்பர், 2020

களப்பிரர் வரலாற்று ஆவணமான பூலாங்குறிச்சி கல்வெட்டுகளை பாதுகாக்க கோரிக்கை!

Demand for Preservation of Field Inscriptions

.nakkheeran.in - பகத்சிங் : தமிழக வரலாற்றில் இருண்ட காலமாகக் கருதப்படும் களப்பிரர் காலத்தைச் சேர்ந்த பூலாங்குறிச்சி கல்வெட்டுகளை தொல்லியல் சின்னமாக பாதுகாக்க தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது பூலாங்குறிச்சி. இங்குள்ள குன்றின் சரிவில் உள்ள பாறையில் களப்பிரர் காலத்தைச் சேர்ந்த 3 புதிய கல்வெட்டுகளை 1979-ல் ஆய்வாளரான மேலப்பனையூர் ஆசிரியர் கரு.ராஜேந்திரன் கண்டுபிடித்தார். இயற்கையிலேயே உரிந்து சிதையும் தன்மை கொண்ட பாறையில் அதைச் செதுக்கி சமப்படுத்தாமலே கல்வெட்டை  பொறித்துள்ளார்கள். இதனால் மழை, வெயில் போன்றவற்றால் கல்வெட்டு தொடர்ந்து அழிந்து வருகிறது. கல்வெட்டைக் கண்டுபிடித்த கல்வெட்டு ஆய்வாளர் கரு.ராஜேந்திரன், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, புதுக்கோட்டை தொல்லியல் கழகத்தின் நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் ஆகியோர் இக்கல்வெட்டைப் பார்வையிட்ட பின் இதுபற்றி கூறியதாவது,



தமிழி எழுத்து வட்டெழுத்தாக மாறி வரும் இக்கல்வெட்டில் சில எழுத்துகள் தமிழியாகவும், சில எழுத்துகள் வட்டெழுத்தாகவும் உள்ளன. இக்கல்வெட்டுகளின் காலம் கி.பி.5-ம் நூற்றாண்டு. இதிலுள்ள ஒரு கல்வெட்டு சேந்தன் கூற்றன் என்ற மன்னனின் ஆட்சிக்காலத்தில் வேள் மருகண் மகனும் கடலகப் பெரும் படைத்தலைவன் என்ற பட்டத்தைப் பெற்றவனுமான எங்குமான் என்பவன், பச்செறிச்சில் மலை (பூலாங்குறிச்சி), திருவாடானை அருகே விளமர் ஆகிய ஊர்களில் தேவகுலத்தையும், மதுரை உலவியத்தான் குளம் அருகே தாபதப்பள்ளியைச் சேர்ந்த வாசிதேவனார் கோட்டத்தையும் அமைத்ததாகக் கூறுகிறது. இவற்றிற்கு வேண்டியதைச் செய்வதாக அத்திகோயத்தார், உள்மனையார், நான்கு வகைத் திணைகள் ஆகிய மூன்று பிரிவினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மன்னர்களால் பிராமணர்களுக்கு வழங்கப்படும் நிலதானம், ஊர் ஆகியவற்றை பிரம்மதாயம், மங்கலம் ஆகிய சொற்களால் குறிப்பர். இச்சொற்கள் காணப்படும் மிகப்பழமையான கல்வெட்டு இங்குதான் உள்ளது. கல்வெட்டில் வரும் மன்னர்கள் களப்பிரர் மன்னர்களாக இருக்கலாம் என தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். கி.பி. 6-ம் நூற்றாண்டு வரை 6 வரிக்கும் குறைவான சிறிய கல்வெட்டுகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு 22 வரிகள் கொண்ட பெரிய கல்வெட்டு காணப்படுவது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. இது வட இந்திய மன்னன் அசோகனின் பாறைக் கல்வெட்டுக்கு இணையான சிறப்புக் கொண்டது.

தமிழக வரலாற்றின் மிக முக்கிய ஆதாரமான இக்கல்வெட்டுகளை மத்திய தொல்லியல் துறை அல்லது தமிழ்நாடு தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவித்து மழை,வெயில் போன்றவற்றால் கல்வெட்டு பாதிக்காத வகையில் கூரை அமைத்துப் பாதுகாக்கவேண்டும் என கேட்டுக்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

 

 

Ezhilarasan - Archaeologist :தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்திருக்கும் தொன்மையான கல்வெட்டுக்களில் மிகப்பெரிய கல்வெட்டாகக் கருதப்படும் பூலாங்குறிச்சி கல்வெட்டு, முறையான பராமரிப்பு இல்லாமல் தற்போது அழியும் நிலையில் உள்ளது. சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் சிவகங்கை-புதுக்கோட்டை மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள பூலாங்குறிச்சி என்னும் கிராமத்தில் இந்தக் கல்வெட்டு காணப்படுகிறது. கிட்டத்தட்ட 40 அடி நீளமும் 6 அடி உயரமும் கொண்ட இந்தக் கல்வெட்டானது அருகருகே 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது.
1979-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பூலாங்குறிச்சி கல்வெட்டில் நிலத்தைப் பராமரிப்பது தொடர்பாகவும், அதன் உரிமை யாருக்கு என்பது குறித்தும் பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே தமிழ் கல்வெட்டுக்களில் நிலம் தொடர்பான செய்திகளைக் கூறும் விரிவான கல்வெட்டு என்கிற சிறப்பும் இக்கல்வெட்டுக்கு உண்டு. ‘கோச்சேந்தன் கூற்றன்’ என்கிற மன்னனின் பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. மேலும் ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாகவும் இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. ‘கோச்சேந்தன் கூற்றன்’ என்கிற பெயரைக்கொண்டு இக்கல்வெட்டு களப்பிரர் காலத்தைச் சேர்ந்தது என தொல்லியல் அறிஞர்கள் கருதுவதால் தமிழ் வரலாற்றின் இருண்ட காலமாகக் கருதப்படும் களப்பிரர் காலம் பற்றிய செய்திகளை ஆதாரப்பூர்வமாக தெரிந்துகொள்ள துணை புரியும் முக்கிய கல்வெட்டாக இது அறியப்படுகிறது.
இக்கல்வெட்டின் காலம் கி.பி. 442 எனக் கூறப்பட்டாலும் தொல்லியல் அறிஞர்களிடையே பூலாங்குறிச்சி கல்வெட்டின் காலம் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனாலும் கி.பி. 3 - கி.பி.9-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களில் மிக முக்கியமான இடம் பூலாங்குறிச்சி கல்வெட்டிற்கு உண்டு.
கல்வெட்டு அமைந்துள்ள இடம் ஊரின் எல்லையில் அமைந்துள்ள தொன்மையானது சிவன் கோயில் குன்று அருகே கல்வெட்டு அமைந்துள்ளது. சிவன் கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டிற்கு இடதுபுறமாக உள்ள பாறைச்சரிவில் இறங்கியபோது அதிர்ச்சி காத்திருந்தது. தமிழகத்தின் மிகப்பெரிய கல்வெட்டு, தமிழர்களின் தொன்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் கல்வெட்டு எனப் பாராட்டப்படும் பூலாங்குறிச்சி கல்வெட்டு ஓர் அறிவிப்புப் பலகை கூட இல்லாமல் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு சிதிலமடைந்திருந்தது. பாறைச்சரிவில் மூன்று பாகமாக எழுதப்பட்டுள்ள கல்வெட்டின் ஒரு பகுதி மட்டும் வெயிலின் தாக்கத்திற்கு ஆட்படாமல் ஓரளவு தெளிவாக உள்ளது. அதன் அருகில் அமைந்துள்ள மற்ற இரண்டு பகுதிகளும் வாசிக்க முடியாத அளவு மங்கிப் போய் காட்சியளிக்கின்றன. அருகில் இருந்து பார்த்தால் கல்வெட்டின் முழு தோற்றத்தைக் காண முடியவில்லை. ஏதோ வெள்ளை சாக்பீசால் கோடு போட்டது போல் தெரிகிறது. கல்வெட்டிற்கு அருகில் உள்ள நிலத்தில் இறங்கி சற்றுத் தொலைவில் இருந்து பாறைச்சரிவைப் பார்த்தால் கல்வெட்டின் பிரம்மாண்டம் புலப்படுகிறது. நெருங்கிப் பார்க்கும்போது சுவடே தெரியாத கல்வெட்டு, தூரத்தில் இருந்து பார்க்கும்போது தெளிவாகத் தெரிவது இக்கல்வெட்டின் மற்றொரு ஆச்சரியம். கேமரா விழி வழியே கல்வெட்டைப் பார்த்தால் இன்னும் தெளிவாகக் காணலாம்.
பொதுவாக தமிழ் கல்வெட்டுக்களில் எழுத்துக்கள் சிறிய அளவில்தான் காணப்படும்.ஆனால் பூலாங்குறிச்சி கல்வெட்டு கொட்டை எழுத்துக்களாக, பாறைச்சரிவையே ஒரு பலகை போல் பயன்படுத்தி சரியான அளவுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டிற்கு அருகிலே வயல் உள்ளதால் விவசாயம் நடைபெறும்போது கல்வெட்டு, பயிர்களுக்குள் மறைந்து விடுகிறது.

கருத்துகள் இல்லை: