திங்கள், 2 நவம்பர், 2020

ரஜினியைச் சந்தித்த அமித் ஷா தூதர் ஆடிட்டர் குருமூர்த்தி

ரஜினியைச் சந்தித்த அமித் ஷா தூதர்
மின்னம்பலம்  :துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரும், பாஜக மேலிடத் தலைவர்களுக்கு நெருக்கமானவருமான ஆடிட்டர் குருமூர்த்தி நேற்று (நவம்பர் 1) நடிகர் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்திருக்கிறார். இந்தச் சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்துள்ளதாக

தகவல்கள் வருகின்றன.  கடந்த வாரம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டார் என்றும், அதற்கு அவரது உடல்நிலை ரீதியான காரணங்கள்தான் என்றும் ரஜினியின் கூற்றாகவே ஓர் அறிக்கை சமூக தளங்களில் உலா வந்தது. சில தினங்கள் கழித்து அக்டோபர் 29ஆம் தேதி ரஜினி தனது ட்விட்டர் பதிவில், ‘அந்த அறிக்கையில் எனது உடல்நிலை பற்றி சொல்லப்பட்ட தகவல்கள் உண்மைதான். ஆனால் அரசியலுக்கு வருவது குறித்த என் முடிவை மக்கள் மன்ற நிர்வாகிகளோடு ஆலோசித்து மக்களுக்குத் தெரிவிப்பேன்’ என்று கூறியிருந்தார்.

அந்த அறிக்கையையே ரஜினிதான் லீக் செய்திருக்கிறார் என்றும், அதற்கான எதிர்வினை எவ்வாறு இருக்கிறது என்று பார்ப்பதற்காகவே இப்படி செய்திருக்கிறார் என்றும் கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்களே.

இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என்ற தகவலை அடிப்படையாக வைத்து பலரும் பல கருத்துகளை கூறி வந்தனர். இதற்கிடையே நேற்று (நவம்பர் 1) ரஜினியை பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுக்கு நெருக்கமான ஆடிட்டர் குருமூர்த்தி போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் பாஜக அவருக்கு அழுத்தமும் நெருக்கடியும் கொடுத்து வருவதாக ஏற்கனவே அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இதுபற்றி கேம் சேஞ்சர் ரஜினி; மூவர் ஆடும் ஃபிரண்ட்லி மேட்ச் என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் அக்டோபர் 10ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், “ஸ்டாலின், எடப்பாடி ஆகியோர் ரஜினியோடு நட்புறவு கொண்டு அவரை இந்தத் தேர்தலுக்கு வர விடாமல் தடுக்க முயற்சிக்கிறார்கள் என்றால்... பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா வரும் தேர்தலில் ரஜினி கண்டிப்பாக களமிறங்கியே ஆக வேண்டும் என்று தீவிர முயற்சியில் இருக்கிறார். ரஜினியை களமிறக்குவதன் மூலம் தமிழ்நாட்டு அரசியல் களத்தின் திமுக - அதிமுக என்ற இருமுனை போக்கை மாற்றலாம் என்பது அவரது நம்பிக்கை. அவர் ரஜினியோடு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தோம்.

இந்த நிலையில் ரஜினியின் தற்போதைய முடிவு பற்றி அமித் ஷாவிடமும் விவாதித்த குருமூர்த்தி, அதன் பிறகே ரஜினியைச் சந்தித்திருக்கிறார். ரஜினியின் முடிவு பற்றி பாஜக மேலிடத்தின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் இந்தச் சந்திப்பில் ரஜினியிடம் குருமூர்த்தி தெரிவித்திருக்கலாம் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.

ஏற்கனவே ரஜினியின் மிக நெருங்கிய நண்பரான துக்ளக் இதழின் மூத்த பத்திரிகையாளர் ரஜினியைச் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: