வியாழன், 5 நவம்பர், 2020

அமெரிக்க தேர்தலில் 4 இந்திய வம்சாவளியினர்.. டாக்டர் அமி பெரா, ரோகன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால்


அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 4 பேர் வெற்றி
தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியினர்
thinathanthi :வாஷிங்டன்:   அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் சேர்த்து 5 இந்திய வம்சாவளியினர் எம்.பி.க்களாக இருந்தனர். அவர்களில் 4 பேர் பிரதிநிதிகள் சபை என்று அழைக்கப்படுகிற கீழ்சபை எம்.பி.க்கள் ஆவர். அவர்கள், டாக்டர் அமி பெரா, ரோகன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் ஆகியோர் ஆவார்கள்.   செனட் சபை என்று அழைக்கப்படுகிற மேல்சபையில் கமலா ஹாரிஸ் எம்.பி.யாக இருந்தார்.

இவர்கள் அனைவரும் செல்லமாக ‘சமோசா காகஸ்’ என்று அழைக்கப்பட்டு வந்தனர்.    இவர்களில் கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார். எஞ்சிய 4 பேரும் மீண்டும் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தேர்தலில் போட்டியிட்டனர். அவர்கள் அனைவரும் வெற்றி பெற்று நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கு மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர்.

டாக்டர் அமி பெரா (வயது 55), கலிபோர்னியா மாகாணத்தின் 7-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அதுவும் தொடர்ந்து 5-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் பஸ் பேட்டர்சன் தோற்றுப்போனார்.

ரோகன்னா (44), கலிபோர்னியா மாகாணத்தின் 17-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து குடியரசு கட்சி தரப்பில் போட்டியிட்ட மற்றொரு இந்திய வம்சாவளியான ரிதிஷ் தாண்டன் தோல்வி அடைந்தார்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி (47), இல்லினாய்ஸ் மாகாணத்தில் 8-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றிருக்கிறார். லிபர்டேரியன் கட்சி பிரஸ்டன் நெல்சன் தோல்வியைத் தழுவினார். ராஜா கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர் தமிழ்நாட்டினர். அந்த வகையில் ராஜா கிருஷ்ணமூர்த்தி தமிழர் ஆவார்.

பிரமிளா ஜெயபால் (55), வாஷிங்டன் மாகாணத்தின் 7-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றிருக்கிறார். இவரை எதிர்த்து நின்ற குடியரசு கட்சி வேட்பாளர் கிரேக் கெல்லர் தோல்வி அடைந்தார். பிரமிளா ஜெயபால் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பிரமிளா ஜெயபால் சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் ஹிரால் திப்பிர்னேனி என்ற இந்திய வம்சாவளி பெண் டாக்டர், அரிசோனாவில் 6-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார், அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளரான டேவிட் ஸ்வெய்கெர்ட் தோல்வி அடைந்தார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல்கள் உறுதியானால், டாக்டர் ஹிரால் திப்பிர்னேனி, பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 2-வது இந்திய வம்சாவளி பெண் என்ற சிறப்பை பெறுவார்.

ஓஹியோ மாகாண சட்டசபையின் மேல்சபையான செனட் சபைக்கு இந்திய வம்சாவளி நீரஜ் அந்தானி (29) குடியரசு கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளர் மார்க் போகலை வீழ்த்தி இருக்கிறார். ஓஹியோ மாகாண செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளி இவர் என்பது சிறப்பு.

இதே போன்று நியூயார்க் மாகாண சட்டசபைக்கு இந்திய வம்சாவளி வக்கீல் ஜெனிபர் ராஜ்குமார் (38), ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அவர் குடியரசு கட்சி வேட்பாளர் ஜியோவானி பெர்னாவை வீழ்த்தினார். இந்த மாகாண சட்டசபைக்கு தேர்வு பெற்றுள்ள முதல் தெற்காசிய பெண் என்ற சிறப்பு, இவருக்கு கிடைத்துள்ளது.

கருத்துகள் இல்லை: