சனி, 7 நவம்பர், 2020

7 பேர் விடுதலை: திமுக- காங்கிரஸ் மோதல்!

minnambalam :ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நளினி, வி.ஸ்ரீகரன் என்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி. ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு ஆயத்தமாகி வருவதாகத் தெரிகிறது. இதற்கு தமிழக காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரு வருடங்களாக முடிவெடுக்காமல் இருப்பதற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்த நிலையில்...தமிழக அரசே இவர்களை விடுதலை செய்யலாம் என்று சட்ட வல்லுநர்களும், தமிழ் ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலினும் இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று (நவம்பர் 7) வெளியிட்டிருக்கும் செய்தியில்,    “ முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களை விடுவித்தால் சிறைச் சாலைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைத்து தமிழ் கொலை குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும்.

7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல. கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, அவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல.

பெருமதிப்பிற்குரிய அப்துல் கலாம், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, தோழர் ஜீவானந்தம், கணிதமேதை ராமானுஜம் போன்றவர்களை தமிழர்கள் என்று அழைப்பது பெருமைக்குரியது.

கொலை குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்தால் தமிழகத்தில் காவல் நிலையங்கள் வேண்டாம், நீதிமன்றங்கள் வேண்டாம், சட்டம் ஒழுங்கைப் பற்றி பேச வேண்டாம் என்பது பொருளாகும்.

எனவே, முன்னாள் பிரதமரை படுகொலை செய்து, இந்தியாவிற்கு கேடு விளைவித்த குற்றவாளிகளுக்கு பரிந்து பேசுவது தமிழர் பண்பாடு ஆகாது”என்று கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த நவம்பர் 5 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எழுதிய கடிதத்தில்,

“ முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு- சுமார் 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அவர்களை விடுவிக்க அ.தி.மு.க, அரசு பரிந்துரைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் அழுத்தத்தின் விளைவாகவும், ஏழு பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று 9.9.2018 அன்று அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, தங்களுக்கு மாநில அரசு அனுப்பி வைத்தது.

ஆனால், ஏழு பேரை விடுதலை செய்யக் கோரும் மாநில அரசின் இந்த முக்கியப் பரிந்துரையானது, தங்களால் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் சட்ட பதவிகளில் இருப்போர் உரிய காலவரம்பிற்குள், தங்களது கடமையை ஆற்றிட வேண்டும் என்பது சட்டத்தில் வழக்கமான நடைமுறை.மாநில அரசின் பரிந்துரையை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முடிவு எடுக்காமல்- தங்கள் அலுவலகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது – சட்டத்தின் அடிப்படையில் மாநிலத்தில் ஆட்சி நடைபெறவில்லையோ என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே தமிழக அமைச்சரவையின் 9.9.2018–ஆம் தேதியிட்ட பரிந்துரையைப் பரிவுடன் ஏற்று ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனையைக் குறைத்து - உடனடியாக அவர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார் ஸ்டாலின்.

இந்நிலையில் அவர்களை விடுவிக்கக் கோருவது தமிழ் பண்பாடு அல்ல என்று கூறியிருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.

திமுக கூட்டணிக்குள் காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் இது தொடர்பாக கருத்து வேறுபாடு நீண்ட நாட்களாகவே இருக்கிறது என்றாலும் இப்போது இது மீண்டும் விவாதத்துக்கு வந்துள்ளது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: