Add caption |
கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி சிவராத்திரி, ஆடி திருக் கல்யாணம், மற்றும் நவராத்திரி விழா உள்ளிட்ட விழாவையொட்டி சுவாமி அம்பாள் வீதி உலா மற்றும் தினசரி பள்ளியறை, ஆறுகால பூஜைகள் உள்ளிட்டவைகளுக்கு இந்த ஆபரணங்கள் மற்றும் பூஜை பொருட்கள் பயன்படுத்தப்படும்.
அப்போது கருவூலத்திலிருந்து கோயில் இணை ஆணையர் முன்னிலையில் ஊழியர்கள் மற்றும் குருக்கள்களிடம் தங்க ஆபரணங்களை கொடுத்து சுவாமி அம்பாலுக்கு சாத்தப்பட்டு பின் அவை பாதுகாப்பாக கருவூலத்திலேயே வைக்கப்படும்.
’40 ஆண்டுகளுக்கு பின் தங்க நகைகைள் மறுமதிப்பீடு’
இந்த நிலையில், 1978ஆம் ஆண்டு நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டன. பின்னர் 2013ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தை சேர்ந்த சிவராஜன் என்பவர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நகைகள் காணாமல் போனதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கைத் தொடர்ந்து கோயில் நகைகளை ஆய்வு செய்யவும், நகைகள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் கடந்த 29.01.2019 முதல் 07.03.2019 வரை நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் கோயிலின் நகைகள் மறு மதிப்பீடு செய்யப்பட்டன. இவற்றுடன் கோயிலிலுள்ள தங்கம் மற்றும் வெள்ளியிலான பள்ளக்குகள், தேர்கள் ஆகியவையும் மறு மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றின் எடையும் சரிபார்க்கப்பட்டது.
பணியாளர்களுக்கு கோயில் நிர்வாகம் நோட்டீஸ்
இதில் பல்வேறு நகைகளின் எடை குறைந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து கோயில் பணியாளர்கள் மற்றும் குருக்கள் உள்ளிட்ட 47 பேரிடம் கோயில் நிர்வாகம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நோட்டீஸ்க்கு உரிய விளக்கம் கொடுக்கவில்லையெனில் அதற்கான மதிப்பீட்டுத்தொகை வசூல் செய்யப்படுவதுடன் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் கூறப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயில் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்ட ஓய்வுபெற்ற குருக்களில் ஒருவரான அனந்த அய்யர் பிபிசி தமிழிடம் பேசுகையில், கோயில் நிர்வாகம் அனுப்பியுள்ள நோட்டீஸ் திட்டமிட்டு தங்கள் மீது பழி சொல்வதை போல் உள்ளது என்றார்.
நான் ஒன்பது வருடங்களுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்று திருகோயிலை விட்டு வெளியேறும் போது கோயில் நிர்வாகம் அனைத்து பொறுப்புகளையும் என்னிடமிருந்து பெற்றுக்கொண்டு அனைத்தையும் சரி பார்த்து விட்டு என்னிடம் கையெழுத்து வாங்கிய பின்தான் விருப்பு ஓய்வு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது பொருட்களை காணவில்லை, நகைகளின் எடை குறைவாக உள்ளது என சொல்வது எந்த விதத்தில் நியாயம் இது எங்குமே இல்லாத புது நடை முறையாக உள்ளது என்றார் அனந்த அய்யர்.
‘உயர் நீதிமன்றத்தில் வழக்கு’
சுவாமி, அம்பாளுக்கு பக்தர்களின் நேற்றிகடனுக்காக அணிவிக்கும் நகைகளுக்கு சேதம் ஏற்படும் என பக்தர்களிடமிருந்து ரூ.200 பெற்று கோயில் கணக்கில் வைக்கப்பட்டு அதற்கான ரசிதும் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தேய்மான மதிப்பை எங்களிடம் கேட்பது எப்படி நியாயமாகும் என்ற அவர், இனிமேல் இவ்வாறான நிகழ்வு இருந்தால் நாங்கள் (குருக்கள்) சுவாமிக்கு நகைகள் சாத்த மாட்டோம் என முடிவு எடுப்போம் என்றார்.
தங்கள் மீது பழி சுமத்தி நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் அனந்த அய்யர் கூறினார்.
இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையர் கல்யாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருக்கோயில் நகைகளில் தேய்மானம் ஏற்பட்டு எடை குறைந்திருக்கிறது. இதுகுறித்து விளக்கமளிக்க நகைகளைப் பராமரிக்கும் பணியில் இருந்த ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இது வழக்கமான நடைமுறையே என்று தெரிவித்துள்ளார்.
கோயிலில் தங்கம், வெள்ளி நகைகள் அனைத்தும் சரியாக உள்ளது. நகைகளின் பாதுகாப்பு குறித்து பொது மக்களும், பக்தர்களும் கவலை கொள்ளத் தேவையில்லை எனவும் கல்யாணி தெரிவித்துள்ளார்.
’40 ஆண்டுகால பயன்பாட்டால் தேய்மானம்’
கடந்த மறுமதிப்பீட்டிற்கும் தற்போதைய மறுமதிப்பீட்டிற்கும் இடையே 40 ஆண்டுகள் இடைவெளி உள்ள நிலையில் இந்த 40 ஆண்டு காலத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் 13 பேர், விருப்ப ஓய்வு பெற்ற 2 நபர்கள், தற்போது பணியில் உள்ள 32 பேர் என மொத்தம் 47 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
40 ஆண்டுகால பயன்பாடு காரணமாக தேய்மானம் ஏற்பட்டு அதற்கான எடை குறைவுக்கான இழப்பினை ஏன் தங்களிடமிருந்து வசூல் செய்யக்கூடாது என விளக்கம் கோரி தொடர்புடைய பணியாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கல்யாணி வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கோயில் நகைகள் காணமல் போனதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சிவராஜனிடம் நகை எடை குறைவு குறித்து பிபிசி தமிழ் கேட்டதற்கு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் தம்மால் இது குறித்து தகவல் அளிக்க முடியர்து என்றார் சிவராஜன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக