திங்கள், 2 நவம்பர், 2020

2016 தேர்தல் .. மநகூவின் குரல் இப்போது மீண்டும் 2021 சட்டமன்றத்தேர்தலில் ஒலிப்பது யதேச்சையானதா?

LR Jagadheesan : · “தேர்தல் வெற்றி தோல்விகளைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. கொண்ட கொள்கைக்காக நாங்கள் களப்பலியாகவும் தயார்” எங்கேயோ கேட்ட குரலாக ஒலிக்கிறதா? 2016 சட்டமன்றத்தேர்தலில் மநாகூவின் அதே குரல் இப்போது மீண்டும் 2021 சட்டமன்றத்தேர்தலை முன்வைத்து ஒலிப்பது யதேச்சையானதா? நாமே நேரடியாக களம் காணும் நாடாளுமன்றத்தேர்தல் என்றால் ஒரு அணுகுமுறை. நம் கட்சியின் அடுத்த படிநிலை ஆட்கள் சட்டமன்றம் போகும் வாய்ப்பும் நம்மை நாடாளுமன்றம் அனுப்ப பாடுபட்ட தோழமைகள் தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கவும் வாய்ப்பும் உள்ள சட்டமன்றத்தேர்தல் என்றால் வேறொரு அணுகுமுறை. 2016 தேர்தலில் வாரிசு அரசியலே தமிழ்நாட்டின் முதன்மை பிரச்சனை. 2021தேர்தலில் வர்ணாஸ்ரமமே முதன்மை பிரச்சனை. இரண்டுமே கொளுகை முழக்கங்கள் தான். ஆனால் 2016 தேர்தலில் இந்த கொளுகை முழக்கம் யாரை அரியணை ஏறச்செய்தது? அதனால் தமிழ்நாடு இந்த நான்கு ஆண்டுகளில் இழந்த இழப்பென்ன? ஏற்பட்டிருக்கும் பின்னடைவின் தாக்கங்கள் என்ன? அத்தனையையும் பார்த்து பட்டும் திருந்தாமல் அதே வாய்சவடாலை இப்போதும் பேசுவது
2021 தேர்தலில் யாருக்கு சாதகமாய் அமையும்? இந்த எளிய கேள்விக்கான விடை கூட தெரியாதவர்களா இந்த முழக்கங்களை முன் வைத்து அதி தீவிரமாய் களமாடும் அரசியல்வாதிகளும் அறிவுசீவிகளும்? கண்டிப்பாக இல்லை. தெரிந்தே குழிபறிக்கும் அனுகூல சத்ருக்கள்.
“நாக்குக்கு எலும்பில்லடா; அது இப்படியும் பேசும்; அப்படியும் பேசும்; எப்படியும் பேசும்” என்பார் எங்க ஊர் ஆதியம்மா. தமிழ்நாட்டின் நட்டநடுவுநிலையாளர்களுக்கும் கொளுகை குந்தாணி என்று கும்மியடிப்பவர்களுக்கும் அது எழுத்துமாறாமல் அப்படியே பொருந்துகிறது. இவர்களின் கொளுகை குன்று இன்னொரு மாபெரும் கொளுகை குன்றுக்கு அஞ்சலி செலுத்திய அரிய அறிவுஜீவித்தனமான பேருரை. அவசியம் கேளுங்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இதில் இவர் பெரிதும் வலியுறுத்தும் “தோழமைக்கு தோள்கொடுக்கும்” தன்மையை இவரோ, இவரது கட்சியோ அல்லது அவரை ஆதரிக்கும் அறிவுசீவிகளோ என்றைக்காவது கலைஞருக்கோ அவரது கட்சிக்கோ உளப்பூர்வமாக காட்டியிருக்கிறார்களா? என்கிற கேள்விக்கு பதிலளிக்க வேண்டியது அவர்களின் மனசாட்சியின் வேலை. அப்படி ஒன்று அவர்களிடம் இன்னமும் மிச்சம் மீதி இருந்தால்.
பிகு: ம. (சசிகலா) நடராசனாரின் முக்கிய இரண்டு சாதனைகளை அவர் சொல்லத்தவறிவிட்டார். தமிழ்நாட்டு அரசியலில் இலைமறை காயாக மிகவும் மட்டுப்பட்டிருந்த ஜாதிச்சங்க அரசியலை காசு என்கிற உரம்போட்டு வளர்த்து கட்சி அரசியலுக்கு சவாலாக ஜாதிச்சங்க அரசியலை உருவாக்கிய பெருமையும் அண்ணன் நடராசனையே சாரும். அதைவிட முக்கியமான அவரது மாபெரும் வரலாற்று சாதனை 1996 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் தென் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாய் நடந்த மிக மோசமான ஜாதிக்கலவரங்களின் சூத்திரதாரியும் வாழும் அம்பேட்கரின் அதே அண்ணன் நடராசனார் தான். தமிழ்நாட்டில் சாதி ஒழிப்புக்கான நடராசனாரின் அந்த இரு பெரும் பங்களிப்புகளையும் கூட அவர் இந்த உரையில் சொல்லியிருக்கலாம். ஏனோ பாவம் மறந்துவிட்டார்.

கருத்துகள் இல்லை: