வெள்ளி, 6 நவம்பர், 2020

டிரம்ப்பின் அதிகாரிகள் ராஜினாமா! புதிய அதிபராகிறார் பிடென்

minnambalam :அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் மூலம் தோல்வியை மட்டுமல்ல,

உலக அளவில் மிகப் பெரிய அவப்பெயரையும் சேர்த்தே சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் டொனால்ட் டிரம்ப். நவம்பர் 3 ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முடிவுகள், இந்திய நேரப்படி இன்று நவம்பர் 6 ஆம் தேதி வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஜார்ஜியா, பென்சில்வேனியா மாநிலங்களில் இறுதிகட்ட எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்திய நேரப்படி நவம்பர் 6 ஆம் தேதி அதிகாலை அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். வாடியமுகத்தோடு பிரஸ் ரூமுக்கு வந்த டிரம்ப், முதலில் தனது குடியரசுக் கட்சி வெற்றிபெற்ற மாநிலங்களின் பெயர்களை எல்லாம் பட்டியலிட்டார். பின், ‘தேர்தல் சட்ட ரீதியாகவும் நியாயமாகவும் நடந்திருந்தால் நான் வெற்றிபெற்றிருப்பேன். சட்டவிரோதமான ஓட்டுகளை எல்லாம் எண்ணிக்கொண்டிருப்பதால்தான் அவர்கள் எங்களிடமிருந்து வெற்றியைத் திருட முயற்சிக்கிறார்கள்”என்று கூறியவர் அதற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. டிரம்ப் தனது அறிக்கையை மட்டும் படித்துவிட்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மீண்டும் தன் அறைக்குள் சென்றுவிட்டார்.

தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கிய பிறகு டிரம்ப்பின் முதல் செய்தியாளர் சந்திப்பு இது. இரு நாட்களாக ட்விட்டரில் சொன்னதையே மீண்டும் இந்த செய்தியாளர்கள் சந்திப்பிலும் டிரம்ப் சொன்னதால் முக்கியமான மீடியாக்கள் இந்த சந்திப்பை ஒளிபரப்புவதை நிறுத்திவிட்டன.

தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் நிவாடா, ஜார்ஜியா,வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, அலாஸ்கா ஆகிய மாநிலங்களின் முடிவுகள் வரவேண்டும். நேற்றே மின்னம்பலத்தில் குறிப்பிட்டது போல் இவற்றில் ஒரு மாநிலத்தைக் கைப்பற்றினாலும் ஜோபிடென் அதிபர் ஆகிவிடுவார்.<>அசோசியேட்டட் பிரஸ், ஃபாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட முக்கியமான ஊடகங்கள் அரிசோனா மாநிலத்தில் பிடென் வெல்வதை உறுதிப்படுதியிருக்கின்றன. அலாஸ்கா மாநிலத்தில் குடியரசுக் கட்சியின் அத்தியாயம் முடிவுக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பென்சில்வேனியாதான் டிரம்ப்புக்கு தலைவலி தரும் மாநிலம். அங்கே வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டுமென்று டிரம்ப் தரப்பினர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. வெள்ளிக்கிழமை இரவுக்குள் அங்கே முடிவு தெரியக் கூடும்.

நவேடா எப்போது முடிவை சொல்லப் போகிறாய்? என்று சமூக தளங்களில் உலக அளவில் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாநிலத்தில் ஜனநாயகக் கட்சி குறுகிய வித்தியாசத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. வடக்கு கரோலினாவில் மட்டும்தான் டிரம்ப் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் டிரம்ப்பின் தோல்வியை அவர் மறுத்துப் பேசிக் கொண்டிருந்தாலும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் உணரத் தொடங்கிவிட்டனர்.

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை செயலாளர் மார்க் எஸ்பர் தனது ராஜினாமா கடிதத்தைத் தயாராக வைத்திருப்பதாக என்.பி.சி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

“அதிபர் மாற்றத்தின் போது அமைச்சரவை செயலாளர்கள் தேதியிடாத ராஜினாமா கடிதங்களைத் தயாரிப்பது அசாதாரணமானது அல்ல. தேர்தல் முடிவுகள் தெளிவான பின்னர் இந்த செயல்முறை வழக்கமாக நிகழ்கிறது. ஆனால் டிரம்ப்புக்கு நெருக்கமானவரான பாதுகாப்புத் துறைச் செயலாளர் எஸ்பர் தனது ராஜினாமா கடிதத்தைத் தயாரித்துவிட்டார். ஏனெனில் அவர் தேர்தலுக்குப் பிறகு வெளியேற்றப்படுவார் என்று நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை அதிகாரிகளில் ஒருவர்”என்கிறது அந்தச் செய்தி.

டிரம்ப்பின் வாடிய முகத்துடன் கூடிய பத்திரிகையாளர் சந்திப்பு, முக்கிய செயலாளர்கள் ராஜினாமா செய்ய தயாராகும் நிலை இவற்றுக்கிடையே பை பை ட்ரம்ப் என்ற ஹேஷ்டாக் உலக அளவில் ட்விட்டரில் ட்ரண்டாகிவருகிறது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: