வெள்ளி, 6 நவம்பர், 2020

அப்பா இல்லாத வெறுமையை கடந்துவிட்டதாக சொல்ல முடியாது – கலங்க வைத்த கனிமொழி எம்.பி.

 

puthiyamugam.com :எனது தந்தை இருக்கும்வரை எங்கள் வீடு கொண்டாட்டமாகவே இருக்கும். அப்படி இருக்கும்போது அவர் இல்லாத வெறுமையிலிருந்து நான் மீண்டுவிட்டதாக சொல்லமுடியாது.

அதேசமயம் அவர் இல்லாத நிலையில் அவரிடம் பெற்ற உறுதியை வெளிப்படுத்தி பணியில் ஈடுபடுகிறேன் என்று கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி பேட்டியில் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

அந்தப் பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது.

2ஜி வழக்கில் எனக்கு தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதுகூட தெரியாமல் என்னை கடுமையாக விமர்சித்தார்கள். அந்த வழக்கில் நான் கைதுசெய்யப்பட்டு ஜாமீன் கிடைக்குவரை எனது தந்தை மனதளவில் வருத்தப்பட்டார். தன்னால்தான் எனக்கு இதெல்லாம் நடப்பதாக கூறுவார். ஆனால், பொதுவாழ்க்கை என்று வந்துவிட்டால் இதெல்லாம் சகஜம் என்ற பக்குவத்தை அவரிடமிருந்து நான் பெற்றேன்.

அந்த வழக்கில் வெற்றிபெற்று நான் தலைவரை சந்தித்தபோது அவரால் பேசமுடியாத நிலை இருந்தது. ஆனாலும், அந்த வழக்கில் திமுக மீதான பழி துடைக்கப்பட்டது அவருக்கு மகிழ்ச்சியளித்தது.

நான் வெற்றிச் செய்தியை கூறியவுடன் அவர் கேட்ட முதல்விஷயம், “பேராசிரியர் எங்கே” என்பதுதான். உடனே அருகிலிருந்த பேராசிரியர் தலைவரின் கையைப் பற்றியது அழகான விஷயமாக பட்டது.

எனது தந்தையை அடக்கம் செய்யும்போது அவர் கன்னத்தை தொட்டு முத்தம் கொடுத்தேன். ஏன் கொடுத்தேன் என்றெல்லாம் சொல்லத் தெரியவில்லை. அவர் எப்போதும் எனது நெற்றியில் முத்தம் கொடுப்பார். இனி அது இல்லை என்பதால்கூட நான் அப்படி செய்திருக்கலாம்.

அப்பா இல்லாத நிலையில் அவரைப்போலவே கட்சியில் அனைவரையும் அரவணைத்து அண்ணன் தளபதி செயல்படுகிறார். அப்பாவின் கடைசி நாட்களில் அவர் கடுமையான பதற்றத்தில் இருந்தார். அண்ணாவுக்கு அருகே தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்பதே அப்பாவின் விருப்பமாக இருந்தது. ஆனால், அதற்கு முட்டுக்கட்டை போட்டவுடன் அவர் மிகவும் பதற்றமானார்.

ஆனால், நீதிமன்றத்தீர்ப்பு அப்பாவுக்கு சாதகமாக வந்ததும் அண்ணன் அழுதது எங்கள் எல்லோரையும் தொற்றியது. எங்களை மட்டுமல்ல திமுகவினரை மட்டுமல்ல, நல்லெண்ணம் கொண்ட அனைவரையும் கலங்க வைத்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: