புதன், 4 நவம்பர், 2020

ரஜினி செல்வாக்கு - அதிர்ச்சி தந்த ரிப்போர்ட்! சினிமா புகழ், ரஜினியின் அரசியல் செல்வாக்காக மாறவில்லை!

டிஜிட்டல் திண்ணை: ரஜினி செல்வாக்கு - அதிர்ச்சி  தந்த ரிப்போர்ட்!
minnambalam :மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது. போயஸ் கார்டனில் ரஜினி பேனர் அணிந்து சிலர் நின்றிருந்த படத்தை அனுப்பியது. அதில் இருந்தே டைப்பிங் தொடங்கியது.

“இந்த போட்டோ டெல்லி வரை போயிருக்கிறது. ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென்றும், வருகிறார் என்றும் முப்பது வருடங்களாக தமிழ்நாட்டில் பேசப்படுகிறது. அதுவும் 1996 முதலான கடந்த 24 ஆண்டுகளில் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்றே எல்லாரையும் பேசவைத்து தேர்தல் வாய்ஸ், ரஜினி மன்றம் இன்ன கட்சிக்கு ஆதரவு, எதிர்ப்பு என்றெல்லாம் பேசிய ரஜினி இன்று க்ளைமாக்ஸில் மீண்டும் அரசியலுக்கு வருவேனா, வர மாட்டேனா என்பது பற்றி மீண்டும் குழப்படைய வைத்திருக்கிறார்.

கடந்த அக்டோபர் கடைசி வாரத்தில் வாட்ஸ்அப்பில் ரஜினி வெளியிடுவது போலவே ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. நான்கு நாட்களாக அது தமிழகத்தில் பரவலாக உலவிய நிலையில், அதில் கூறப்பட்ட தனது உடல்நிலை பற்றிய தகவல்கள் உண்மைதான் என்று ரஜினி அக்டோபர் 29ஆம் தேதி ட்விட்டரில் தெரிவித்தார். அப்போதே இது ரஜினியின் ஒப்புதலுடன் வெளியான அறிக்கைதானா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது. ரஜினிக்கு அவரது மருத்துவர்கள் கூறிய அறிவுரைகள் அவரை, அவரது குடும்பத்தைத் தாண்டி யாருக்கோ எப்படிப் போகும் என்ற எண்ணமும் பலருக்கும் ஏற்பட்டது.

இதற்கிடையே மத்திய உளவுத் துறை இதே சப்ஜெக்ட்டில் இன்னொரு மேட்டரில் பிசியாக இருந்தது. ஏனெனில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும். அவரை வைத்து தேர்தலில் சில காய்களை நகர்த்த வேண்டுமென்று பாஜகதான் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. பொதுவாகவே உள்துறை அமைச்சர் அமித் ஷா எந்த ஒரு விஷயத்திலும் மத்திய உளவுத்துறை ரிப்போர்ட்டை மட்டுமல்ல... அந்தந்த மாநிலத்தில் இருக்கும் ஆர்,எஸ்.எஸ். ரிப்போர்ட்டையும் கருத்தில்கொள்கிறார். இன்னும் சொல்லப் போனால் உளவுத் துறை அதிகாரிகள் கூட ஏதோ ஒருவகையில் சார்பானவர்களாக இருக்கக் கூடும். ஆனால் இந்த மாதிரி விஷயங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் எந்தவிதமான சார்பும் இல்லாமல், ‘கிரவுண்ட் ரிப்போர்ட்’ டை அப்படியே தனக்குத் தருகிறார்கள் என்று உறுதியாக நம்புகிறார் அமித் ஷா.<>அப்படிப்பட்ட ஆர்எஸ்எஸ்ஸின் கிரவுண்ட் ரிப்போர்ட் ஒன்றும் ரஜினி பற்றி அமித் ஷாவுக்கு சமீபத்தில் போயிருக்கிறது. அதில் ரஜினியின் செல்வாக்கு பற்றி தீவிரமாக ஆராயப்பட்டிருக்கிறது.

அக்டோபர் 26ஆம் தேதி ரஜினி தான் அரசியலுக்கு வரப் போவதில்லை என்று விளக்கமாக கூறிய வாட்ஸ்அப் தகவல் பரவியது. 27ஆம் தேதி அது ஊடகங்களில் செய்தியாகத் தொடங்கியது.அது முதல் ரஜினி 29ஆம் தேதி, 'ஆம் அந்த தகவல்களெல்லாம் உண்மைதான்' என்று ஒப்புக் கொள்கிறார். ரஜினி இவ்வாறு சொன்ன பிறகும் கூட தமிழகத்தில் ரஜினி மக்கள் மன்றத்தினர் சார்பில் எங்கேயும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று ஒன்றுகூடல்களோ, பேரணியோ ஆர்ப்பாட்டமோ தன்னெழுச்சியாக நடந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. கொரோனா காலம் என்பதால் பெருமளவில் ரசிகர்கள் திரளவில்லை என்றாலும் கூட, தமிழகத்தின் ஆங்காங்கே ரசிகர்கள் வெளியே வந்திருக்கலாம். ஆனால் எங்கேயும் அப்படி நடக்கவில்லை. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் உண்ணாவிரதம் நடந்ததாக செய்தி வருகிறது. அதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. மற்றபடி ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்ற அறிக்கைக்கோ, அதில் பாதி உண்மை என்ற ரஜினியின் ட்விட்டருக்கோ ரஜினி மக்கள் மன்றத்தினரின் குறைந்தபட்ச எதிர்ப்பு கூட இல்லை. சில மாவட்டத் தலைவர்கள் பலர் பெரும்பணக்காரர்கள். அவர்கள்கூட ரசிகர்களைத் திரட்டி ரஜினிக்கு கோரிக்கை வைக்கத் தயாராக இல்லை. ரஜினி குறிப்பிட்ட மக்கள் எழுச்சி அவரது ரசிகர்களிடையிலேயே இல்லை.

எம்.ஜி.ஆரை திமுகவை விட்டு நீக்கியபோது தமிழகம் ஸ்தம்பித்தது. அவருக்காக அவருடைய ரசிகர்களும், தொண்டர்களும் வீதிக்கு வந்தனர். இத்தனைக்கும் அது தகவல் தொடர்பு இந்த அளவுக்கு இல்லாத காலம். ஆனால் இன்று இவ்வளவு தகவல் தொடர்புகள் இருந்தும் ரஜினி ரசிகர்கள், மக்கள் மன்றத்தினர் கிணற்றில் போட்ட கல்லாகத்தான் இருக்கின்றனர்.

ரஜினியின் செல்வாக்கு என்ன என்பது இதிலிருந்தே தெரிகிறது. ஊடகங்கள்தான் அவர் வீட்டு வாசலில் ரசிகர்கள் திரண்டார்கள், குவிந்தார்கள் என்று சொல்லி மிகைப்படுத்தி வருகின்றன. அதிகபட்சம் ரசிகர்கள் செய்தது போஸ்டர்கள் ஒட்டியதுதான். உண்மையிலேயே ரஜினிக்கு, ‘பொலிடிக்கல் எலெக்ட்ரிசிட்டி’ இருந்தால், அந்த வாட்ஸ்அப் அறிக்கை வந்தபோதே தமிழகம் கொந்தளித்திருக்க வேண்டும். அட்லிஸ்ட் அனைத்து மாவட்டங்களிலும் ரஜினி மன்றத்தினராவது போராடியிருக்க வேண்டும்.

எனவே ரஜினிக்கான செல்வாக்கை நாம் நன்கு ஆராய்ந்து அதன் பிறகே அவரை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவது பற்றி யோசிக்க வேண்டும். ரஜினிக்கு இருக்கும் சினிமா புகழ், அவரது அரசியல் செல்வாக்காக மாறவில்லை என்பதை அக்டோபரின் கடைசி நாட்கள் காட்டிக் கொடுத்திருக்கின்றன என்பதே அமித் ஷாவுக்கு சென்றுள்ள ரிப்போர்ட்’ என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் சென்றது வாட்ஸ்அப்

கருத்துகள் இல்லை: