செவ்வாய், 3 நவம்பர், 2020

பா.ஜ அரசுக்குக் கப்பம் கட்டிவிட்டு தமிழ்நாட்டை கொள்ளையடிக்கும் அதிமுகவினர்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

 (எல்லா திட்டங்களிலும் 40 வீதம் கமிஷன் . அதில் 15 வீதம்  பாஜகவுக்கு . .10 வீதம் அமைச்சர்களுக்கு  10 வீதம்  எம் எல் ஏக்கள் .5 வீதம் அதிகாரிகளுக்கு ..  நாட்டில் உலாவரும் செய்தி) . 

 

dhinakaran :சென்னை: வெள்ளையர் ஆட்சிக் காலத்தில், பிரிட்டிஷாருக்குக் கப்பம் கட்டிவிட்டு சில குறுநில மன்னர்கள் மக்களை கொள்ளையடித்ததைப் போல, மத்திய பா.ஜ அரசுக்குக் கப்பம் கட்டிவிட்டு அ.தி.மு.க.வினர் தமிழ்நாட்டைக் கொள்ளையடித்துக் கொண்டிருப்பதாக புதுக்கோட்டையில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ பொதுக்கூட்டத்தில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டை மாவட்டங்கள் சார்பில் நடைபெற்ற ‘’தமிழகம் மீட்போம்’’ - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்று, கலைஞர்  சிலையைத் திறந்து வைத்தார். பின்னர் அவர், திமுக முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கியும், மிசா தியாகிகள்  சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் சிறை சென்ற தியாகிகளுக்கு ‘கலைஞர் தியாகச் செம்மல்’ விருதுகளையும் வழங்கி  பேசியதாவது:



புதுக்கோட்டை மாவட்டக் கழக அலுவலகத்தில் இன்று முதல் கலைஞர், உயிரோவியமாகக் காட்சி அளிக்கப் போகிறார். 2011-ஆம் ஆண்டில் இருந்து வேதனையைத் தான் பார்த்து வருகிறது தமிழகம். எந்தத் துறையாக இருந்தாலும் அதில் இருந்து சொல்வதற்கு எந்தச் சாதனையும் இல்லாமல், வேதனையையே பரிசாக அளித்து வருகிறது அ.தி.மு.க. அரசு. திரும்பிய பக்கம் எல்லாம் அராஜகம். தொட்டது எல்லாம் ஊழல். எல்லாவற்றிலும் அலட்சியம். மொத்தத்தில் இது ஆட்சியே அல்ல என்று சொல்லும் அளவுக்குத் தான் அ.தி.மு.க. ஆட்சியானது கடந்த பத்தாண்டு காலத்தில் இருந்து வந்துள்ளது. இந்த ஆட்சி எவ்வளவு மோசமான ஆட்சி என்பதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ஒருவர் போதாதா?.

இந்த ஆட்சிக்கு எல்லா கெட்ட பெயரையும் உருவாக்கிக் கொடுத்ததில் மிக முக்கியமான பங்கு அமைச்சர் விஜயபாஸ்கருக்குத்தான் உண்டு.
விஜயபாஸ்கர் இருக்க வேண்டிய இடம் கோட்டையா? சிறையா? என்பதைத் தெரிந்து கொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை. கொரோனாவை வைத்து அடித்த கொள்ளைகள், குட்கா லஞ்சங்கள், ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா, வருமானவரித்துறையின் புகார்கள் என்று விஜயபாஸ்கரின் க்ரைம் ரேட் எகிறிக் கொண்டே போகிறது. ஒரே ஒரு அமைச்சரைப் பற்றித்தான் உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். இதேபோல் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி என்று வரிசையாகச் சொல்ல ஆரம்பித்தால் பல மணிநேரம் ஆகும்.

தி.மு.க.வின் சாதனைப் பட்டியல் ஒரு பக்கம் மலையளவு இருக்கிறது என்றால்; அ.தி.மு.க.வின் ஊழல் பட்டியல் இன்னொரு பக்கம் மலையளவு குவிந்து இருக்கிறது.  இந்த ஊழல்வாதிகளிடம் இருந்து கோட்டையை மீட்பதுதான், நாம் தொடங்கியுள்ள போர். இந்த ஊழல்வாதிகளுக்கு, மத்தியில் உள்ள பா.ஜ. அரசு பாதுகாப்பை அளித்து வருகிறது. பா.ஜ. அரசுக்கு அடிமையாக இருக்க அ.தி.மு.க. அரசு தயாராக இருப்பதால் மத்திய அரசு இவர்களைப் பாதுகாக்கிறது. அ.தி.மு.க. என்ற கட்சியையும் தமிழக ஆட்சியையும் பா.ஜ.க.வுக்கு அடிமையாகக் கொண்டு போய் வைத்துவிட்டார்கள். அதற்குப் பரிகாரமாக தமிழ்நாட்டைக் கொள்ளையடிப்பதற்கு எடப்பாடி கூட்டத்துக்கு பா.ஜ.க. அனுமதி வழங்கியுள்ளது. வெள்ளையர் ஆட்சிக் காலத்தில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு கப்பம் கட்டிவிட்டு சில குறுநில மன்னர்கள் மக்களை கொள்ளையடித்துக் கொண்டு இருந்ததைப் போல, மத்திய பா.ஜ அரசுக்குக் கப்பம் கட்டிவிட்டு அ.தி.மு.க.வினர் கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இதனால் தமிழ்நாட்டின் பொருளாதார வளம் போய்விட்டது. தொழில் வளம் நாசமாகிவிட்டது. வேலைவாய்ப்புகள் இல்லை. மாநில உரிமைகள் பறிபோய்விட்டன. வேளாண்மையைச் சிதைத்துவிட்டார்கள். நாசகாரத் திட்டங்களைக் கொண்டு வந்து தமிழ்நாட்டின் தலையில் கட்டுகிறார்கள். நாம் எதிர்பார்க்கும் திட்டங்களைக் கொடுப்பதே இல்லை. ஒரே ஒரு உதாரணம்; எய்ம்ஸ் மருத்துவமனை. இதுவரைக்கும் வரவில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னால், தமிழ்நாட்டு மக்களிடம் போய் வாக்குக் கேட்க வேண்டுமே என்பதால் அந்தத் தேர்தலுக்கு முன்னதாக மதுரைக்கு வந்து அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. ஆனால் அந்தச் செங்கல்லைக் கூட இப்போது காணவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட இடம் இன்னும் பொட்டல் காடாகத்தான் இருக்கிறது.

இதோ இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டு மக்களை மீண்டும் ஏமாற்றுவதற்காக எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஒரு குழுவைப் போட்டுள்ளது மத்திய அரசு. இது அடுத்த ஏமாற்றுக் காரியம். மதுரையில் இப்படி பல்லாயிரம் கோடி மதிப்பிலான எய்ம்ஸ் அமையப்போகிறது என்றால், மதுரை மற்றும் அதைச் சுற்றிலும் உள்ள நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர்களை அந்தக் குழுவில் நியமித்திருக்க வேண்டும். அவர்களை நியமிக்கவில்லை.
மருத்துவர் என்று சொல்லி, பல்வேறு சர்ச்சைக்குரிய தரக்குறைவான செயல்களில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஒருவரை அதில் நியமித்துள்ளார்கள். பா.ஜ. அரசு நியமிக்கும் ஆட்கள் எல்லாம் ஏதாவது சர்ச்சையில் சிக்கியவர்களாக இருப்பார்கள். அல்லது பதவிக்கு வந்ததும் சர்ச்சையில் சிக்குவார்கள். நல்லவர்களை, திறமைசாலிகளை அவர்களால் தேர்வு செய்யவும் தெரியாது. அவர்களிடமும் இருக்க மாட்டார்கள்.

ஒரே ஒரு சாதனையாக எய்மஸ் மருத்துவமனையைக் கூட கொண்டு வரத் துப்பு இல்லாத ஆட்சியாக மத்திய பா.ஜ அரசு இருக்கிறது. அதனைத் தட்டிக் கேட்க தெம்பு, தைரியமும் துணிச்சலும் அருகதையும் இல்லாத ஆட்சியாக எடப்பாடி ஆட்சி இருக்கிறது. இந்தக் கூட்டத்தை வீழ்த்தும் கடமை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரர்களுக்கு உண்டு. கோட்டையில் தி.மு.க. ஆட்சி என்பதை புதுக்கோட்டைக் கூட்டத்தில் சபதம் எடுப்போம்; தலைவர் கலைஞர் சிலையைத் திறந்துள்ள இந்த நன்னாளில் சபதமேற்போம். தேர்தலுக்குப் பிறகு சென்னைக் கோட்டையை புதிய கோட்டையாக மாற்றிக் காட்டுவோம்.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

கருத்துகள் இல்லை: