செவ்வாய், 3 நவம்பர், 2020

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை? 20 முதல் 30 தொகுதிகளுக்குள் அதிகபட்சம்..

minnambalam : தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொடர்வதாக அண்மையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெளிவுபடுத்திவிட்டார். அடுத்ததாக திமுகவுடனான கூட்டணி பற்றி காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தமிழக காங்கிரஸுக்கு சில தெளிவுகளைக் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள்.
டிஜிட்டல் திண்ணை:  திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை? ராகுல் உத்தரவு

தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தினேஷ் குண்டு ராவ் கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி சென்னை வந்தார். காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட குண்டு ராவ் பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, ’தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும். மொத்த இடங்களையும் திமுக காங்கிரஸ் கூட்டணியே கைப்பற்றும். தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும்” என்று தெளிவான ஆங்கிலத்தில் கூறினார். அவர் coalition government என்று கூறாமல் allaince government என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். தமிழக காங்கிரஸ் புதிய பொறுப்பாளரான குண்டுராவின்

இந்தப் பேச்சு கூட்டணிக்குள் சலசலப்பைக் கிளப்பியது. ஆனால் சில மணி நேரத்தில் இதற்கு விளக்கம் அளித்த குண்டுராவ், ‘தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராகவேண்டும் என்று எங்கள் தலைவர் ராகுல் காந்தி சொல்லியிருக்கிறார். அதை செயல்படுத்தும் வகையில் தமிழக காங்கிரஸ் செயல்படும்’ என்று விளக்கம் அளித்தார். இதற்கு அடுத்த நாள் செப்டம்பர் 25 ஆம் தேதி அறிவாலயம் சென்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் குண்டுராவ்.

இந்தக் காட்சிகளுக்கு இடையேதான் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு முந்தைய தேர்தல்களைப் போல அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என்று திமுக மாவட்டச் செயலாளர்கள் தலைமையிடம் வற்புறுத்தி வருகின்றனர். 20 முதல் 30 தொகுதிகளுக்குள் அதிகபட்சம் காங்கிரஸுக்கு இருக்கலாம் என்பதே திமுகவில் பலரின் கருத்தாக இருக்கிறது.

இந்நிலையில்தான் தமிழகத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான பேரணியில் ராகுல் கலந்துகொள்வார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்திருக்கிறார். இதுவரை வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தில் காங்கிரஸ் தனித்தே போராட்டங்களை நடத்தி வருகிறது. திருவண்ணாமலையில் விவசாயிகள் சங்கமம், தேனியில் விவசாய உரிமைப் பேரணி என்று திட்டமிட்டு பல நிகழ்வுகளை நடத்தி வரும் வரிசையில்தான் ராகுல் காந்தியை விவசாயிகளின் பேரணிக்கு அழகிரி அழைக்க அதற்கு ஒகே சொல்லியிருக்கிறார் ராகுல். இதற்காக ராகுல் காந்தி சமீப தினங்களாக அழகிரியோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கான இடங்களின் எண்ணிக்கை பற்றியும் பேச்சு சென்றிருக்கிறது.

அபபோது ராகுல் காந்தி, ‘ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். தமிழகத்தில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்புள்ள வலுவான தொகுதிகள் எவை என்று கண்டறியுங்கள். அப்படியாக ஒரு நூறு தொகுதிகளை செலக்ட் செய்து அதில் நமக்கு வெற்றி வாய்ப்பு அதிகமிருக்கும் தொகுதி எது என்பதையும் கண்டறியுங்கள். முழுக்க முழுக்க டேட்டாவின் அடிப்படையில் இந்த ஆய்வு நடக்கவேண்டும். அதன் பிறகு நாம் திமுகவுடன் இதுபற்றி பேசலாம்’ என்று கூறியிருக்கிறார் ராகுல்.

அழகிரியும் ராகுலிடம் சில விஷயங்களைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். ராகுல் சொன்னபடிதான் ஏற்கனவே தமிழகத்தில் குறிப்பிட்ட தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து தொகுதி வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தை நடத்தி வருவதைப் பற்றி ராகுலிடம் விளக்கிய அழகிரி இதுவரை... உடுமலைப் பேட்டை, தாராபுரம், காங்கேயம், கோவை மேற்கு,கன்னியாகுமரி மாவட்டம் ஆகிய பகுதிகளில் இதுவரை தொகுதிவாக்குச் சாவடி முகவர்கள் சந்திப்புக் கூட்டம் வெற்றிகரமாக நடந்திருப்பது பற்றியும் தொடர்ந்து இந்த கூட்டங்கள் நடக்க இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் தமிழகத்தில் காங்கிரஸ் வலுவாக இருக்கும் தொகுதிகளின் பட்டியலை முந்தைய தேர்தலின் அடிப்படையிலான தரவுகளைக் கொண்டு தயார் செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

ராகுலும் இதையெல்லாம் கேட்டுக் கொண்டு,’நமக்கு கௌரவமான தொகுதியில் நிற்போம். நாம் வெற்றி பெறும் இடங்களை உறுதி செய்துகொண்டு கேட்டு வெற்றி பெறுவோம். அதற்காக நம் கட்சியை நாம் வளர்ப்போம். சீட்டுகள் விஷயத்தில் சமரசத்துக்கும் இடமில்லை. அதேநேரம் திமுகவுடன் கசப்புணர்வும் வேண்டாம்’ என்பதுதான் ராகுலின் உத்தரவு. அதை அடிப்படையாக வைத்தே அழகிரி தொகுதி வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டங்களுக்கு வேகமாகத் தயாராகிறார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்

கருத்துகள் இல்லை: