புதன், 4 நவம்பர், 2020

நிரவ் மோடியின் மேல்முறையீட்டு மனு இங்கிலாந்து நீதிமன்றத்தில் தள்ளுபடி

நிரவ் மோடியின் மேல்முறையீட்டு மனு இங்கிலாந்து நீதிமன்றத்தில் தள்ளுபடி

dailythanthi.com இந்திய அரசு சமர்ப்பித்த ஆதாரங்களுக்கு எதிரான நிரவ் மோடியின் மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. லண்டன்,குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48). மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நிரவ் மோடி லண்டனில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இந்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில் நிரவ் மோடியை லண்டன் போலீசார் கடந்த ஆண்டு மார்ச் 19-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை மேற்கொண்டு வருகிறது. சிறையில் உள்ள நிரவ் மோடி, 28 நாள்களுக்கு ஒரு முறை லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்  ஆஜா்படுத்தப்பட்டு வருகிறார். இந்த வழக்கை நீதிபதி சாமுவெல் கூஸீ  விசாரித்து வருகிறார்.

இந்த வழக்கு விசாரணையின் போது இந்திய அரசு சார்பில் நிரவ் மோடி மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்திய அரசு சமர்ப்பித்த ஆவணங்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து நிரவ் மோடி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சாமுவெல் கூஸீ, கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் மல்லையாவின் வழக்கில் இந்திய அரசு வழங்கிய ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதை மேற்கோள் காட்டினார். எனவே இந்த முறையும் இந்திய அரசு வழங்கிய ஆதாரங்கள்  ஏற்றுக்கொள்ளப்பட்டும் என்று தெரிவித்த நீதிபதி, நிரவ் மோடியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் இந்த வழக்கின் இறுதி விசாரணைக்கான அமர்வு 2021 ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: