அந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தை நான்கு மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறார். அவரவர்க்கு என ஒதுக்கப்பட்ட மாவட்டங்களை ஒப்படைத்து, அந்தந்த மண்டலங்களில் அவர்கள் எப்படி பணியாற்ற வேண்டும் என்ற விளக்கத்தை இந்த கூட்டத்தில் கொடுத்திருக்கிறார் பிகே.
அதன்படி சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி வரையிலான சென்னை, சென்னை சுற்றுப்புற மண்டலங்களின்
சட்டமன்றத் தொகுதிகளுக்குப் பொறுப்பாளராக திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி, தஞ்சவூர், நாகை, திருவாரூர் டெல்டா, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மண்டலத்துக்கு தொமுச பேரவைச் செயலாளர் சண்முகம் மண்டலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கரூரில் தொடங்கி கொங்கு மாவட்டங்கள் அத்தனைக்கும் திமுகவின் சட்டமன்றக் கொறடா சக்கரபாணி பொறுப்பாளர். திண்டுக்கல் தொடங்கி தென் மாவட்டங்கள் முழுதும் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தற்போதைய திமுகவின் திருவண்ணாமலை மாசெ எ.வ.வேலுவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
மண்டலப் பொறுப்பாளர்களுக்கு அசைன்மென்ட்!
இந்த மண்டலப் பகுப்பை அந்த மீட்டிங்கில் தெரிவித்த ஸ்டாலின் இந்த மண்டலப் பொறுப்பாளர்களுக்கு சில அசைன்மென்ட்டுகளையும் கொடுத்துள்ளார்.
அதாவது இந்த நான்கு மண்டலப் பொறுப்பாளர்களுக்கும் ஒவ்வொரு நபரை ஐபேக் கில் இருந்து வழங்குவார்கள். இருவரும் ஒருங்கிணைந்துதான் அந்தப் பணிகளை செய்ய வேண்டும்.
தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் அந்தத் தொகுதியின் ஒவ்வொரு பகுதியிலும் திமுகவின் செல்வாக்கு என்ன, அந்தத் தொகுதியில் என்னென்ன சமுதாயத்தினர் எவ்வளவு பேர் வசிக்கிறார்கள், அவர்களில் முக்கியமானவர் யார். அந்தத் தொகுதியில் எதிர்க்கட்சியில் வலிமையானவர் யார், கடந்த தேர்தலில் திமுக வெற்றி தோல்வி காரணம் என்ன, திமுக கூட்டணிக் கட்சியினரின் செல்வாக்கு, கட்சி சார்பற்று தொகுதியில் செல்வாக்கு மிக்கவர்கள் யார், அந்த செல்வாக்கு மிக்கவர்கள் யார் சொன்னால் கேட்பார்கள், திமுக கட்சிக்குள் அதிருப்தியில் இருப்பவர்கள் யார், அதிமுக போன்ற எதிர்க்கட்சிகளில் யார் அதிருப்தியில் இருக்கிறார்கள், அவர்களை திமுகவுக்கு கொண்டுவருவது எப்படி...
இவ்வாறு ஒவ்வொரு தொகுதியின் அரசியல், சமுதாய நிலவரம் என தொகுதியின் ஜாதகத்தையே விரிவான ரிப்போர்ட்டாக தயாரித்துள்ளது ஐபேக்.
இந்த ரிப்போர்ட் மேற்குறிப்பிட்ட மண்டலப் பொறுப்பாளர்களுக்குத் தரப்பட்டுள்ளது. எப்படி எந்திரன் படத்தில் சிட்டி ரோபா ஒவ்வொரு புத்தகத்தையும் ஸ்கேன் செய்து, இன்ன பக்கத்தில் இன்னது இருக்கிறது என்று சொல்லி வியப்படைய வைக்குமோ அதேபோல ஒவ்வொரு தொகுதியையும் கடந்த சில மாதங்களில் மேற்கொண்ட ஆய்வுகள் மூலமாக முற்றிலும் ஸ்கேன் செய்துள்ளது ஐபேக்.
இதன் அடிப்படையில் அந்தந்த மண்டலப் பொறுப்பாளர்கள் தங்கள் மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டச் செயலாளர்களிடம், பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஐபேக் அளித்திருக்கும் அறிக்கை மாவட்ட கட்சியின் வேரின் நுனி வரை நிலவும் பிரச்சினைகளை அலசியிருப்பதால்... சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களிடம் அவற்றைப் பேசும் பொறுப்பாளர்கள், ‘உங்க மாவட்டத்துல இப்படி இருக்கு. இவரை சரிபண்ணனும். எந்த ஈகோவும் இல்லாமல் இதைச் செய்யணும். வெற்றி ஒன்ணுதான் நம்ம குறிக்கோள்’ என்று ஆரம்பகட்டமாக சில விஷயங்களைப் பேசியிருக்கிறார்கள். அடுத்தகட்டமாக ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று அந்த ரிப்போர்ட் அடிப்படையிலான பணிகளை மாவட்டச் செயலாளரோடு சேர்ந்து நிறைவேற்ற வேண்டியதுதான் மண்டலப் பொறுப்பாளருக்கு கொடுக்கப்பட்ட பணி. இதற்கு ஒவ்வொரு மண்டலத்துக்கும் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டிருக்கும் ஐபேக் பொறுப்பாளர் பெரும் உதவியாக இருப்பார்.
வேட்பாளர் தேர்வில் மண்டலப் பொறுப்பாளர்கள்
இந்த மண்டலப் பொறுப்பாளர்களின் நோக்கமே ஐபேக் ஒவ்வொரு தொகுதிக்கும் என பட்டியலிட்டுக் கொடுத்த வேட்பாளர்கள் பட்டியலில் இருந்து தகுதியானவரை தேர்வு செய்வதுதான்.
ஏற்கனவே கடந்த ஜூலை 6 ஆம் தேதி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில், தொகுதிக்கு ஐந்து பேர்: ஐபேக் கொடுத்த திமுக லிஸ்ட்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில்,
“ ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரும்பான்மையான சாதி, தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்னான சாதி அடர்த்தியின் நிலை, தற்போதைய நிலையில் மாவட்டத்தின் முக்கிய திமுக பிரமுகர்கள், ஒவ்வொரு தொகுதியிலும் அவர்களுக்கான பின்புலம் போன்ற தகவல்களை புள்ளி விவரங்களோடு சேகரித்து வைத்திருந்தது ஐபேக். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக ஒன்றிணைவோம் வா திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்ட ஐபேக் டீம் மூலம் மாவட்ட திமுகவை புலனாய்வு செய்து ஒரு பட்டியலை தயார் செய்திருக்கிறார்கள். இந்த இரு ஆய்வுகள் மூலமும் இப்போது தொகுதிக்கு ஐந்து பேர் கொண்ட பட்டியல் புதிதாக தயார் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த ஐந்து பேர் பட்டியல் ஐபேக் தலைமை மூலமாக திமுக தலைமையிடம் ஒரு சில நாட்கள் முன்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்குமான பட்டியலை தயாரிப்பதற்கு முன் அதிபட்சம் ஆறு மணி நேரம் ஐபேக் குழுவினருக்குள் ஆலோசனை நடந்திருக்கிறது. அந்த ஐந்து பேர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். அதன் முடிவில் அந்த ஐந்து பேரில் மூன்று பேர்களைதான் ஐபேக் வேட்பாளர்கள் என்ற நிலைக்கு பரிந்துரைக்கும். அவர்கள்தான் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பிடிக்கப் போகிறவர்கள்” என்று குறிப்பிட்டிருந்தோம்.
இந்த மூன்று பேர் பட்டியல்தான், இப்போதைய மண்டலப் பொறுப்பாளர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் அந்த மூவரில் யார் வேட்பாளர் என்பதைதான் மண்டலப் பொறுப்பாளர்கள் தங்களுடன் பணி செய்யும் ஐபேக் பொறுப்பாளருடன் இணைந்து கண்டுபிடிக்கப் போகிறார்கள். எனவேதான் பிரசாந்த் கிஷோரே இவர்களுடன் உரையாடி இதுகுறித்து விளக்கியிருக்கிறார்.
இன்ன மண்டலத்துக்கு இவரைதான் பொறுப்பாளராக போடவேண்டும். அப்போதுதான் கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்ற திமுகவின் பாரம்பரிய பலவீனத்தை உடைப்பதற்காகத்தான் நம்பிக்கையும் விசுவாசமும் மிகுந்த இந்த பொறுப்பாளர்கள் பட்டியலை தயார் செய்துள்ளார் ஸ்டாலின் என்கிறார்கள் திமுக தலைமைக் கழக நிர்வாகிகள். இதை சம்பந்தப்பட்ட நிர்வாகிகளும் உணர்ந்திருப்பதால், கட்சிக்குள் இதனால் அதிருப்தி இல்லை என்றும் கூறுகிறார்கள்.
ஆக... இந்த மண்டலப் பொறுப்பாளர்கள் மூலம்தான் திமுகவின் வேட்பாளர் தேர்வின் முக்கியமான கட்டம் தொடங்கியிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்களின் அதிகாரம் குறைக்கப்படாது என்று ஏற்கனவே ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால், மாவட்டச் செயலாளர்கள் தங்கள் விருப்பம் என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்துவிட முடியாது என்பதுதான், இந்த மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனத்தின் உள்ளீடு! இந்த மண்டல பொறுப்பாளர்களின் வேட்பாளர் பரிந்துரை கடைசியாக ஸ்டாலினால் ஆய்வு செய்யப்பட்டு இறுதிப் பட்டியலை தயார் செய்வார் என்கிறார்கள் அறிவாலயத்தில்.
திமுகவில் பிரசாந்த் கிஷோரின் வியூகங்கள், உத்திகள் இப்படி என்றால் அதிமுகவில் சுனில் அமைத்து வரும் வியூகம் என்ன? நாளை பார்ப்போம்!
-வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக