சனி, 16 மே, 2020

திமுக மாசெக்கள் கூட்டம்: ‘ஐபேக்’ குக்கு எதிராக ஆர்ப்பரித்த ஜெ.அன்பழகன்!

திமுக மாசெக்கள் கூட்டம்:  ‘ஐபேக்’ குக்கு எதிராக ஆர்ப்பரித்த ஜெ.அன்பழகன்!மின்னம்பலம் : கொரோனா நிவாரணப் பணிகள் குறித்து விவாதிக்க திமுகவின் மாசெக்கள் கூட்டம் இன்று (மே 16) காலை காணொலிக் காட்சி முறையில் நடந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் காலை 10.30க்கு தொடங்கிய இந்த மாசெக்கள் கூட்டம் பிற்பகல் 2.50 வரை சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது. அனைத்து மாவட்டச் செயலாளர்களும் பேசினார்கள்.
கொரோனா நிவாரணப் பணிகளில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம் ஒருங்கிணைக்கும், ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் பற்றியும் மற்ற நிவாரணப் பணிகள் பற்றியும் விவாதிக்கவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில், இந்தக் கூட்டத்தில் பேசப்பட இருக்கும் விஷயங்கள் குறித்து மாசெக்கள்-ஐபேக்: ஸ்டாலினிடம் மீண்டும் பஞ்சாயத்து என்ற தலைப்பில் நேற்று (மே 15) மின்னம்பலம் இதழில் வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் வழக்கம்போல தனது அதிரடியான பாணியில் ஐபேக் டீமையும் பிரசாந்த் கிஷோரையும் வெளுத்து எடுத்துவிட்டார்.
அவரது பேச்சு இதோ...

“தலைவருக்கு நிகர் தலைவர்தான். தலைவரை மையமாக வைத்துதான் திமுக என்ற கட்சி சுழல்கிறது. தலைவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்களாக மாவட்டச் செயலாளர்களாகிய நாங்களெல்லாம் இருக்கிறோம். இந்நிலையில் கழகத்துக்கு ஆலோசனை கூற கம்பெனிகள் தேவையா? தேவையே இல்லை.
நாம் என்ன கம்பெனியா நடத்துகிறோம்? நாம் கட்சி நடத்துகிறோம். கட்டமைப்பு இல்லாதவர்களுக்குதான் கம்பெனி தேவை. நாம் கட்டமைப்போடு உள்ள கட்சி. நமக்கு நாமே போனோம்.. நூறு சீட்டுகள் வரை பிடித்தோம். ஊராட்சி சபை கூட்டம் போடச் சொன்னீர்கள். நாங்கள் போட்டோம். 39 எம்பிக்களை ஜெயித்தோம். கம்பெனி இருந்தால்தான் நீங்கள் முதல்வர் ஆவீர்கள் என்று கிடையாது. எந்த கம்பெனியும் இல்லையென்றாலும் நீங்கள்தான் அடுத்த முதல்வர்
திமுககாரர்கள் அத்தனை பேரும் சுயமரியாதைக் காரர்கள். சுயமரியாதைக்கு இழுக்கு வந்தால் எந்த திமுககாரனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். நான் எப்போதும் ஓப்பனாக பேசக் கூடிய ஆள். எனக்கு ஒளிவு மறைவு கிடையாது. நிறைய மாவட்டச் செயலாளர்கள் மனதுக்குள் வைத்து குமுறிக்கிட்டிருக்காங்க. அவங்க சார்பாகவே நான் பேசுறேன்.
என்ன ஐபேக் டீம் அது? என்ன கம்பெனி அது? என்னை விட வயசுல சின்ன பையன் என்கிட்ட அதிகாரம் பண்றான். டவுன்லோடு பண்ணுங்கன்றான். வாட்சப் பண்ணுங்கன்றான். ஃபேஸ்புக்ல போடுங்க, ட்விட்டர்ல போடுங்கன்றான். ட்ரெண்டிங் பண்ணுங்கன்றான். ஆலோசனை சொல்றதுக்கு நீங்க வேணா அவங்கள வச்சிக்கங்க. உங்களுக்கு நாங்க வேலைக்காரங்களா இருப்போம். ஆனா கண்டவனுக்கும் எங்களால வேலைக்காரனாக முடியாது. தலைவருக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும் இடையில மீடியேட்டர் இருந்தால் அது சரியா வராது” என்று வெடித்து உடைத்துக் கொட்டிவிட்டார் ஜெ. அன்பழகன்.
இதற்கு ஸ்டாலின் பதில் என்ன? நாளை காலை மின்னம்பலம் இதழில்...
-ஆரா

கருத்துகள் இல்லை: