ஞாயிறு, 10 மே, 2020

ப.சிதம்பரம் : பொருளாதாரம் 100 சதவிகிதம் சீர்குலைந்துவிட்டது

பொருளாதாரம் 100 சதவிகிதம் சீர்குலைந்துவிட்டது: சிதம்பரம்மின்னம்பலம் : பொருளாதாரம் 100 சதவிகிதம் சீர்குலைந்துவிட்டதாக சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 17ஆம் தேதி நிறைவடைகிறது. ஊரடங்கால் தொழிற்சாலைகள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்வதால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவுடன் வாழ மக்கள் பழகிக்கொள்ள வேண்டுமென மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 7,000 நிதியுதவி வழங்க வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. மே 17ஆம் தேதி பிறகு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளது. ஆனால், மத்திய அரசு அதற்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
இதுபற்றி முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இன்று (மே 10) தனது ட்விட்டர் பக்கத்தில், “மே 17 வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கின் கடைசி வாரம் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. தொற்று பரவுகிறது, 3 சதவிகிதம் மரணமடைகிறார்கள், பொருளாதாரம் 100 சதவிகிதம் குலைந்து விட்டது, ஏழை நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்களும் சிறு, குறு தொழில்களும் சிதைந்து விட்டன” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இச்சூழ்நிலையில் உங்களுக்கு நான் என்ன ஆறுதல் சொல்ல முடியும்? நம்பிக்கையோடு இருங்கள், காலம் மாறும், காங்கிரஸ் கட்சி சொன்ன யோசனைகளை நாடும் அரசும் ஏற்றுக்கொள்ளும் விடியல் ஏற்படும். தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் கவனமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
எழில்

கருத்துகள் இல்லை: