சனி, 16 மே, 2020

பாதுகாப்பு துறையில் நேரடி அந்நிய முதலீடு.. 49%ல் இருந்து 74% ஆக உயர்வு.

tamil.oneindia.comடெல்லி: இந்திய பாதுகாப்பு துறையில் நேரடி அந்நிய முதலீடு 49 சதவிகிதத்தில் இருந்து 74% ஆக உயர்த்த முடிவு செய்துள்ளோம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்பதற்காக 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பதாக பிரதமர் மோடி கூறினார். இதையடுத்து இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பொருளாதார திட்டங்களை அறிவித்து வருகிறார். நான்காவது நாளாக இன்று பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிலையில் இன்று பாதுகாப்பு துறை மற்றும் கட்டமைப்பு துறை தொடர்பான அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில், இனி ராணுவ தளவாட உற்பத்தி இந்தியாவில் ஊக்குவிக்கப்படும். பாதுகாப்பு துறையிலும் மேக் இன் இந்தியா திட்டம் அமல்படுத்தப்படும்.
ராணுவத் தளவாட உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் வகையில் 'மேக் இன் இந்தியா' திட்டம் பயன்படுத்தப்படும். நாம் இத்தனை நாட்கள் வெளிநாட்டில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்து வந்தோம்.
இனி உள்நாட்டிலேயே உற்பத்தி தொடங்கப்படும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு உதிரி பாகங்கள் இனி உள்நாட்டில் தயாரிக்கப்படும். போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.

அதிக தொழில்நுட்பங்கள் கொண்ட, இந்தியாவில் உடனே தயாரிக்க முடியாத ராணுவ பொருட்கள் மட்டுமே இனி இறக்குமதி செய்யப்படும். சில பாதுகாப்பு தளவாடங்கள் மட்டும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படும். இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்ட பாதுகாப்பு தளவாடங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும். சில ஆயுத உற்பத்தி நிறுவனங்கள், வெடிபொருள் உற்பத்தி நிறுவனங்கள் பங்கு சந்தையில் அனுமதிக்கப்படும்.
பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்கப்படுகிறது. பாதுகாப்பு துறையில் நேரடி அந்நிய முதலீடு 49% ஆக உள்ளது. இதை 74% ஆக உயர்த்த முடிவு செய்துள்ளோம். ராணுவ தளவாட ஆலை நிர்வாகக்குழுவில் பெருநிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். கார்ப்ரேட் நிறுவனங்கள் இதில் பங்கேற்கலாம். ராணுவ தளவாட உற்பத்தி ஆலைகளை இணைத்து தனி அமைப்பு உருவாக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: